திருமணம் சிறப்பாக நடைபெற....
'டும் டும்' கொட்டும் திருமண, 'சீசன்' இது. தை (ஜனவரி) அல்லது ஆவணி (ஆக., - செப்., ) மாதங்களில், திருமண விழா, சீரும் சிறப்புமாக நடைபெற, 'டிப்ஸ்' இதோ: * மணமக்களுக்கு, ஜாதக பொருத்தத்துடன், மன பொருத்தம் பார்ப்பதும் மிக முக்கியம். திருமணத்துக்கு பின், பெண்ணின், மேற்படிப்பு, வேலை மற்றும் சம்பளத்தை, தன் பெற்றோரிடம் கொடுப்பது போன்றவற்றை மாப்பிள்ளையிடம் தெரிவிப்பது; அம்மா - அப்பாவுடன் சேர்ந்திருக்க வேண்டுமா, தனிக்குடித்தன ஏற்பாடு இருக்கிறதா போன்றவற்றை, மணப்பெண்ணிடம் மாப்பிள்ளை தெரிவித்து, உடன்பாட்டுக்கு வரவேண்டியதும் முக்கியம்* திருமண வலைதளங்களில் பதிந்து வைத்திருந்தோர், திருமணம் நிச்சயமானதும், அதை ரத்து செய்யலாம். இல்லையெனில், வரன் குறித்த அழைப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்* திருமணத்துக்கு வாங்க வேண்டிய பொருட்களிலிருந்து, செய்ய வேண்டிய ஏற்பாடுகள் வரை, அனைத்தையும் ஒரே நோட்டில், 'செக் லிஸ்ட்' ஆக எழுதி வைத்து, ஒவ்வொரு வேலையும் முடிய முடிய, 'டிக்' செய்து வரலாம்; எதுவும் விட்டு போகாது* அதேபோல், 'பட்ஜெட்' போட்டு, செலவுகளை அதற்குள் கொண்டு வர திட்டமிடும்போது, பதற்றம் குறையும். வீட்டில், யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்று, கல்யாண வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, பிரித்து பங்கிட்டுக் கொண்டால், விரைவில் முடிக்க முடியும்* அழைப்பிதழ் அச்சாகி வந்தவுடன், யார் யாருக்கெல்லாம் நேரில் கொடுக்க வேண்டும், தபாலில் அனுப்ப வேண்டியது என்ற பட்டியலை, ஊர், ஏரியா வாரியாக, எழுதி வைத்து, அழைப்பிதழ் கொடுக்க கொடுக்க, 'டிக்' செய்து வரவும். தபாலில் அனுப்பியவர்களுடன் தொலைபேசியில் அழைத்து, அழைப்பிதழ் கிடைக்க பெற்றதை உறுதி செய்து கொள்வதும், வரவேற்பதும் நன்று. திருமண அழைப்பிதழை, 'வாட்ஸ் ஆப்'பில் வடிவமைத்துக் கொண்டால், கடைசி நேரத்தில் அழைப்பிதழ் சென்று சேராதவர்களுக்கு, அலைபேசி வாயிலாக அனுப்பி, அழைக்க வசதியாக இருக்கும்* திருமண மண்டபத்தை பொறுத்த வரை, ஆடம்பர அலங்காரம் என்பதை விட, 'பட்ஜெட்'டுக்கு ஏற்றபடி இருக்கட்டும். விருந்தினர் தங்குவதற்கான ஏற்பாடுகளை அருகிலேயே மேற்கொள்வது சிரமங்களை தவிர்க்கும்* திருமணத்துக்கான புகைப்பட கலைஞரை தேர்ந்தெடுக்கும் முன், அவர் எடுத்த, 'ஆல்பங்களை' பார்த்து முடிவு செய்யலாம். குடும்பம், ஜோடி மற்றும் நண்பர்கள் புகைப்படம் என, உங்களுக்கு தேவையான, 'மாடல்' படங்களை, 'ஆன்லைனில்' தருவித்து, அதன்படி செய்ய சொல்லலாம்* முகூர்த்த நாளில், கூடுமான வரை, மணப்பெண்ணுக்கு, தங்க நகைகள் தவிர்த்து, 'இமிட்டேஷன் செட்' அணிவிக்கலாம். இல்லையெனில், ஒவ்வொரு நகை பெட்டியாக திறந்து, ஆரம், நெக்லஸ், வளையல், கம்மல்களை பூட்டும்போது, முகூர்த்த நேரம் நெருங்கும் பதற்றத்தில், தொலைந்து போகவோ, யார் கண்ணையாவது உறுத்தி, திருடு போவதற்கான வாய்ப்பையோ தவிர்க்கலாம்* திருமணம் மற்றும் வரவேற்பு, 'பிளவுஸ்'களை, வாடிக்கையான தையல்காரரிடம் கொடுப்பதே நலம். அளவில், வடிவமைப்பில் மாறுபாடு இருக்காது என்பதுடன், உங்களின் அவசர தேவைக்கு கை கொடுப்பார். புதிய தையல்காரரிடம் கொடுக்கும்பட்சத்தில், திருமண நாளுக்கு முதல் நாள் என்று கெடு வைத்துக் கொள்ளாமல், குறைந்தபட்சம், ஒரு வாரம் முன்கூட்டியே வாங்கி, அளவு, வடிவமைப்பில் திருத்தங்கள் இருந்தால், மீண்டும் சரி செய்து வாங்கிக் கொள்ளலாம். 'பிளவுஸ் பேட்டன்'களுக்கு என, நிறைய, 'ஆப்'ஸ் வந்துள்ளன; அதை பயன்படுத்திக் கொள்ளலாம்* திருமணத்தன்று, சில பெண்களுக்கு, 'மேக் - அப்' பொருந்தாமல் போகலாம் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால், சில தினங்களுக்கு முன்பே, அழகு நிலையத்தில், 'டெஸ்ட் மேக் - அப்' செய்து கொள்வது நல்லது* என்னதான் லட்சம், கோடிகளில் செலவு செய்து, திருமணம் நடத்தினாலும், வரும் விருந்தினர்களுக்கு, விருந்தோம்பல் தான் பெரிய சந்தோஷம்; கவுரவம். எனவே, வரவேற்பு முதல் உணவு உபசரிப்பு வரை, திருமண வேலைகளை மொத்தமாக, 'கான்ட்ராக்டர்'களிடம் ஒப்படைத்து விட்டாலும், திருமண வீட்டினர் ஒருவர் நின்று, உபசரிப்பது சிறப்பு. என். சம்பத்குமார்