உள்ளூர் செய்திகள்

மகளாக வந்த மீனாட்சி

கடந்த, 520 ஆண்டுகளுக்கு முன், வேம்பத்தூரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அம்பிகையின் மந்திரத்தை லட்சம் முறை உருவேற்றியதால், அம்பிகை அவருக்கு தரிசனம் தந்து, அருள்பாலித்தாள். இதனால், கவிஞராக மாறிய இவரை, கவிராஜ பண்டிதர் என்றே அழைத்தனர்.மனைவியை இழந்த கவிராஜர், ஒரு சமயம், தன் மகள் மீனாட்சியை, தங்கையின் பொறுப்பில் விட்டு, காசிக்கு புறப்பட்டார். வழியில் ஓய்வெடுப்பதற்காக மரத்தடியில் தங்கினார். அப்போது, அவர் மகள், மீனாட்சி, கையில் சில பாத்திரங்களுடன் அங்கு நின்றிருந்தாள். அதிர்ந்த கவிராஜர், 'நீ ஏன் என் பின்னால் வந்தாய்... காசி என்ன பக்கத்திலா இருக்கு... போயிட்டு உடனே திரும்ப... எப்படியும் ஆறு மாசம் ஆகுமே...' என்றார்.மகளோ, 'உங்களை விட்டு நான் மட்டும் தனியா இருக்க மனசு கேக்கல. நானும் கூட வந்து, உங்களுக்கு உதவியா இருக்கேன்...' என்றாள் அழுத்தமாய்!வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார் கவிராஜர். போகும் வழியெல்லாம், தந்தைக்கு உணவு சமைத்து கொடுத்து, உதவியாக இருந்தாள் மீனாட்சி.இருவரும் காசியை சென்றடைந்தனர். கங்கையில் நீராடுவதும், விஸ்வநாதர் - விசாலாட்சி தரிசனமுமாக நாட்கள் போயின. ஒருநாள், இருவரும் கடை வீதி வழியாக சென்ற போது, தனக்கு வளையல் வாங்கிக் கொடுக்கக் கூறினாள் மீனாட்சி.கவிராஜர் வருந்தினார்; கையில் காசில்லை. என்ன செய்வது என திகைத்த போது, அங்கே தமிழ் பேசும் ஒருவர் வந்து, சிறுமி மீனாட்சிக்கு வளையல் வாங்கிக் கொடுத்து மறைந்தார். அவரை, சிவன், விஷ்ணு அல்லது பிரம்மாவாக இருக்கலாம் என்கிறது, 'புலவர் புராணம்' எனும் நூல்.இருவரும், காசி தரிசனத்தை முடித்து, ஊருக்கு திரும்பினர். வழியில், முதலில் தங்கிய மரத்தடியை அடைந்த போது, ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தார் கவிராஜர். அப்போது, 'அப்பா... நீங்க மெல்ல வாங்க... நான் முன்னாடி போறேன்...' என்று சொல்லி, சிட்டாகப் பறந்தாள் மீனாட்சி.கவிராஜர் பார்வையில் இருந்து மறைந்ததும், அக்குழந்தை பழுத்த சுமங்கலியாக மாறியது. ஆம்... மகள் வடிவில் வந்தது அம்பிகை. அந்த சுமங்கலி பெண், நேரே கவிராஜரின் தங்கை வீட்டை அடைந்து, 'அம்மா... உங்க அண்ணன் இந்த வளையலை உங்ககிட்ட தரச் சொன்னாரு...' என்று கூறி, வளையல்களை கவிராஜரின் தங்கையிடம் தந்து, மறைந்தாள்.சற்று நேரத்தில் கவிராஜர் வந்ததும், அவரது தங்கை, 'நீ போனதுல இருந்து உன் பொண்ணு படுத்த படுக்கையாயிட்டா...' என்றாள். இதைக் கேட்டதும் அதிர்ந்த கவிராஜர், 'என்ன சொல்ற... மீனாட்சி என் கூட காசிக்கு வந்து, அப்பப்ப சமைச்சு போட்டா... வளையல் கூட வாங்கினாளே...' என்று திகைப்போடு விவரித்தார். தங்கையோ, 'என்னண்ணா சொல்றே... மீனாட்சி இங்க தானே இருக்கா... கொஞ்ச நேரம் முன் ஒரு சுமங்கலி பெண் வந்து, நீ குடுத்ததா சொல்லி, இந்த வளையல்களை தந்துட்டு போனாளே...' என்று விவரித்தார்.உண்மை புரிந்த கவிராஜருக்கு, மெய் சிலிர்த்தது. கண்களில் கண்ணீர் வழிய, அம்பிகையை வணங்கினார்.இவர் தான், ஆதிசங்கரரின், சவுந்தர்யலஹரி பாடல்களை, தமிழில் மொழி பெயர்த்தவர். தற்போது பிரபலமாகி வரும், 'வராஹி மாலை' எனும் மந்திர துதி நூலை, அருளியவர்.பேய், பிசாசு, பில்லி மற்றும் சூன்யம் முதலான கொடுமைகளில் இருந்து, விடுதலை அளிக்கும் அருள் நூலிது. அம்பிகை நமக்கும் நல் உணர்வை ஊட்ட வேண்டுமென்று வேண்டுவோம்; அவள் நிச்சயம் ஊட்டுவாள்!பி.என்.பரசுராமன்திருவாசகம்!மாடும் சுற்றமும் மற்றுள போகமும்மங்கையர் தம்மோடும்கூடி அங்குள்ள குணங்களால் ஏறுண்டுகுலாவியே திரிவேனைவீடு தந்து என்றன் வெந்தொழில் வீட்டிடமென்மலர்க் கழல் காட்டிஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டதோர்அற்புதம் அறியேனே!விளக்கம்: செல்வம், உறவு மற்றும் போகங்களுடன், மாதர்களோடும் கலந்து, ஆங்காங்கே உள்ள குணங்களால் தாக்கப்பட்டு, அவைகளையே கொண்டாடி திரிபவனாக இருந்தேன். அப்படிப்பட்ட என்னையும், என் கொடுந்தொழில்கள் நீங்கும்படியாக, மென்மையான மலர் போன்ற திருவடிகளை காட்டி, அடியேனை ஆட்கொண்டருளி, என் உள்ளத்தில் புகுந்து ஆட்கொண்டு, முக்தியையும் அருளினார், சிவபெருமான். அந்த அதிசயம் இப்படிப்பட்டதென்று, அடியேனுக்கு தெரியவில்லையே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !