புதியதோர் சாந்தி!
சிறிது தொலைவில் கார் வருவதை பார்த்ததும், அவர்கள், அவளை சாலை சரிவில் தள்ளி விட்டு, நொடியில் மறைந்து விட்டனர்.காரிலிருந்து இறங்கிய கலெக்டர் அனுசுயா தேவி, குப்பையாய் கிடந்தவளை பதறியபடி தூக்கினாள். பெரியவளுமில்லாத, சிறுமித்தனமும் அகலாத பருவத்தில் இருந்தாள் அந்த சிறுமி.அவளின் உடைகள் தாறுமாறாய் கிழிந்திருந்தது. முள்வேலி சருமத்தை கிழித்து ரத்தப்புள்ளிகளை பிரசவித்தது. அந்தி சாய்ந்த ஒளியில், அவளது பளீரென்ற அங்கங்கள் அற்புதமாக தெரிந்தன. காரில் இருந்த பொன்னாடையை எடுத்து வரச் சொல்லி, அதை அவள் உடலில் போர்த்தி, காருக்கு அழைத்து வந்தாள், அனுசுயாதேவி.வரும் வழியில், சாலையோர கடையில் காபி வரவழைத்து கொடுத்தவள், மெல்ல, ''யாரும்மா அவங்க?'' எனக் கேட்டாள். உடனே, சிறுமிக்கு அழுகை பொங்கியது.''எங்கம்மா கிளாஸ் பசங்க போலருக்கு... ஸ்கூல்ல எங்கம்மா அவங்களுக்கு தண்டனை கொடுத்துட்டாங்களாம்; அதுக்கு பழின்னு சொல்லி, பிளேடு வைச்சு என் டிரசை கிழிச்சு, கண்ட இடத்துல...'' கதறியவளை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டாள்.''நீ எந்த கிளாஸ் படிக்கிறே... உங்க அப்பா, அம்மா யாரு?''''என் பேரு சிந்துஜா... எங்கப்பா குமாரவேல், பேங்க் ஆபிசர்; அம்மா ரத்னாவதி கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர்.''ரத்னாவதி டீச்சர் என்ற பெயரைக் கேட்டதும் அனுசுயாதேவிக்கு உடம்பு விதிர்விதிர்த்தது. உள்ளுக்குள், 'உடம்பை பாரு... எண்ணெய் காப்பிட்ட சிலை மாதிரி...' என்ற குரல் ஓடியது.நினைவு பின்னோக்கி ஓடியது...'ஹாய் கேர்ள்ஸ்... என் பேர் ஜெசிந்தா... எங்கே, எல்லாரும் உங்க பேரச் சொல்லி, பிளஸ் டூ முடிச்சப்புறம் உங்க ஐடியா என்னன்னு ஒரு இன்ட்ரோ குடுங்க... ஸ்டார்ட் நவ்...' என்றாள், புதிதாக வந்திருந்த ஆங்கில ஆசிரியை ஜெசிந்தா. உடனே, வகுப்பில், 'ஹோ' வென்ற சிரிப்பு சத்தம் எழுந்தது. இளமைத்துள்ளல்... கவலையே இல்லாத பருவம். துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் அருவி போல ஆர்ப்பரிக்கும் வயது.ஒவ்வொருத்தியும் பேசும் போது, காரணமேயில்லாமல் சிரிப்பு ததும்பி வழிந்தது. ஒருத்தி, 'ப்ளஸ் டூ முடிச்சதுமே, என் மாமனை கல்யாணம் கட்டிக்குவேன்...' என்றதும், அவளை கலாய்த்தே ஒரு வழி செய்து விட்டனர்.கடைசியாக அவள் எழுந்தாள்; எழும்போதே, மேஜையை தட்டி, 'கலெக்டர்... கலெக்டர்...' என்று கோரஸ் எழுப்ப, அவளும், அதை ஆமோதிப்பது போல புன்னகையுடன், 'என் பேரு அனுசுயாதேவி; அப்பா இல்ல; அம்மா துப்புறவு பணியாளர். நான் நல்லா படிச்சு கலெக்டர் ஆகி, ஏழைகளே இல்லாத இந்தியாவ உருவாக்கணுங்கிறது என்னோட ஆசை...' என்றதும், 'ஹோ' வென பேரிரைச்சல் எழுந்தது. பெருமிதமாய் அவளை பார்த்த ஜெசிந்தா டீச்சர் அவள் கையை பிடித்து குலுக்கி, 'கண்டிப்பா கலெக்டர் ஆகிடுவ அனுசுயா... முயற்சியை விடாம இருந்தா உன் கனவு மெய்ப்படும்; வாழ்த்துகள்...' என்றாள்.'தாங்க்யூ டீச்சர்...' கண்கள் மினுங்க, வெட்கத்துடன் சிரித்தாள் அனுசுயாதேவி.சிரிப்பலைகள் அடங்கும் முன், 'அம்மா கலெக்டர்... இப்படி கொஞ்சம் வாங்க. அந்த பக்கம் சாக்கடை அடைச்சுருக்கு அடைப்பை கொஞ்சம் எடுத்து விடு...' என்று, கர்ணகடூர குரலில் சொன்னாள், ரத்னா டீச்சர்.சட்டென்று அந்த இடத்தில் ஒரு அமைதி விழுந்தது. 'என்னது... படிக்கிற மாணவி சாக்கடை அள்ளணுமா...' என்றாள், ஜெசிந்தா.'டீச்சர் நீங்க புதுசு... உங்களுக்கு எதுவும் தெரியாது; இங்க இதான் வழக்கம். பேனா புடிச்சுட்டா பரம்பரை தொழில் இல்லன்னு போயிருமா... பரம்பரை பெருமை மாதிரி தான் இதுவும்...' என்றவள், 'ஏய் வாடி...' என்றாள்.இருண்ட முகத்துடன் அனுசுயா நகர, ஜெசிந்தா டீச்சர், 'இதை நான் அனுமதிக்க முடியாது; பரம்பரை தொழிலாகவே இருக்கட்டும்; அதற்காக அதை இங்கே செய்ய வேண்டிய அவசியமில்ல. எல்லாரையும் போல, அவளும், இங்கே ஒரு மாணவி; நீங்க போகலாம்...' என்று சீறினாள்.ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்த ரத்னா டீச்சர், தாங்கு தாங்கு என்று பூமியதிர நடந்து, தலைமை ஆசிரியை அறை பக்கம் நகர்ந்தாள்.அந்த சம்பவத்திற்கு பின், இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருந்தாள், ஜெசிந்தா டீச்சர். 'இன்னொரு முறை இம்மாதிரி சம்பவம் நடந்தால், மாவட்ட கல்வி அலுவலர் வரை கொண்டு செல்வேன்...' என்று கூற, விஷயம் அடங்கினாலும், ரத்னா டீச்சர் மட்டும், அனுசுயாவை சமயம் கிடைக்கும் போதெல்லாம் கரித்து கொட்டுவாள். 'கலெக்டர் அம்மா...' என்று நக்கலடித்து, வேண்டுமென்றே மட்டம் தட்டி பேசுவாள்.அனுசுயா படிப்பில் கெட்டி என்பதால், ரத்னாவால் பொரும மட்டுமே முடிந்தது.ஒரு நாள், ரத்னா டீச்சர் வீட்டிலிருந்து, ரத்னா மொபைல் போனை மறந்து வைத்து விட்டு போய் விட்டாள் என, பள்ளிக்கு போன் வந்தது. இந்தத் தகவலை தெரிவிப்பதற்காக ரத்னா டீச்சரை தேடினாள் ஜெசிந்தா.'ஆயாம்மா... ரத்னா டீச்சர் எங்கே?''எல்லா டீச்சர்களும், டீச்சர்ஸ் ரூம்புலதாம்மா இருக்காங்க. அந்த அனுசுயா பொண்ணு எதையோ களவாடிடுச்சாம். விசாரிக்கிறாங்க...' என்றாள் ஆயாம்மா.வேகமாய் நடந்தாள் ஜெசிந்தா டீச்சர்.ஆசிரியர் ஓய்வறை முன்பாக, முடிச்சு முடிச்சாக கூட்டம். ஜன்னல் வழியே குழந்தைகள் எட்டிபார்க்க முனைந்தபடி இருக்க, உள்ளே, ஐந்தாறு ஆசிரியைகள் வட்டமாய் சூழ்ந்து நிற்க, அவர்களுக்குள் எட்டிப் பார்த்தவள் உறைந்து போனாள். அங்கே, உடம்பில் பொட்டுத் துணியில்லாமல், அலமாரியோரமாய் சுவரில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள், அனுசுயா.'குடிக்கிறது பழைய கஞ்சி... உடம்பை பாரு நெகு நெகுன்னு எண்ணெய் காப்பு விட்ட சிலை மாதிரி...' ரத்னாவின் குரலில், அவளின் மன அழுக்கும், பொறாமையும் தெரிந்தது.'ச்சீ... இதென்ன காட்டு மிராண்டித்தனம்...' என்று சீறியவள், நாற்காலி மீது கிடந்த அனுசுயாவின் ஆடைகளை கொத்தாக அள்ளி, அவள் மீது வீசினாள், ஜெசிந்தா டீச்சர்.'யார் காட்டுமிராண்டி... ஓவரா பேசாதீங்க...' என்று எகிறினாள் ரத்னா டீச்சர்.'ஜெசிந்தா... ரத்னா டீச்சரோட, 'காஸ்ட்லி'யான மொபைலை காணோம்; அதான் விசாரிக்கிறோம்...' இது மற்றொரு ஆசிரியை.'இதுதான் விசாரிக்கிற முறையா... நீங்க படிச்சவங்க தானே... ஒரு வயசு பொண்ணை இந்த கோலத்திலே...' என குமுறினாள் ஜெசிந்தா டீச்சர்.'குப்பையள்றவளுக்கு கலெக்டர் கனவு வருதே... தகுதிக்கு மீறி ஆசைப்படறவங்களால, எப்படி கனவை பூர்த்தி செய்துக்க முடியும்... அதான் இப்படி ஊரான் பொருளுக்கு அலையுதுக...' என்றாள் ஏளனத்துடன் ரத்னா டீச்சர்.'ஷட் அப் ரத்னா... நீங்க மொபைலை வீட்லயே வச்சிட்டு வந்திட்டீங்களாம். உங்க கணவர் இப்பதான் ஸ்கூல் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து தகவல் சொன்னாங்க...' என்றாள் ஜெசிந்தா டீச்சர்.'வீட்டுலேயே வச்சிட்டேனா... ச்சே... அனாவசிய டென்ஷன்; வாங்க போகலாம்...' என்றவள், ஒருபேச்சுக்கு கூட மன்னிப்பு கூறாமலேயே நகர்ந்தாள்.அந்த நேரம், பள்ளியின் மணி ஒலிக்கவே, குழந்தைகள் சிதறி ஓடினர். நிமிடங்களில் வளாகமே காலியாகி விட்டது. 'சாரிடா அனு...' என்று அவள் தோளைத்தட்டி கொடுத்து, கனத்த மனசுடன் வெளியேறிய ஜெசிந்தா டீச்சர், பள்ளி வாயில் கதவை நெருங்கிய போது, வாட்ச்மேனின் கலக்கக்குரல் வீறிட்டது.'ஏய்... ஏ... பொண்ணு என்ன பண்றே...' ஏதோ விபரீதம் என்று புத்தியில் உறைத்தது. திரும்பி ஓடினாள்.மேஜை மேலேறி, ஸ்கிப்பிங் கயிற்றை, சீலிங் பேனில் முடிச்சிட்டு... அனுசுயாவின் கால்களை, வாட்ச்மேன் பிடிக்க, துள்ளி கீழே விழுந்தவளை, ஓடிப் போய் தூக்கினாள் ஜெசிந்தா டீச்சர். கதறி அழுத அனுசுயா, அதன்பின், பள்ளிக்கு வரவில்லை. அவளுக்கு தன் வீட்டில் வைத்தே சொல்லிக் கொடுத்து, தேர்வு எழுத வைத்தாள் ஜெசிந்தா டீச்சர். ப்ளஸ் டூ முடித்ததுமே, அவளின் அம்மாவிடம் பேசி, டில்லியில் உள்ள தன் சகோதரன் வீட்டில் தங்க வைத்து, மேற்படிப்பும், ஐ.ஏ.எஸ்.,சும் படிக்க வைத்தாள்.புதிய ஊர், புது இடம், புது பாஷை, கற்பூரமாய் கரைந்து, வெறியுடன் படித்து, ஐ.ஏ.எஸ்., போஸ்டிங்குடன், சொந்த ஊரில் அடியெடுத்து வைத்தாள், அனுசுயாதேவி.கைத்தாங்கலாய் காரில் இருந்து இறங்கும் மகளை கண்டதும் பதறினாள், ரத்னா டீச்சர்.''ஏய்... நீ, அந்த குப்பை அள்ளுறவ பொண்ணுதானே... ச்சீ தூரப்போ... என் பொண்ணை தொடாதே...'' என்று தீக்கங்குகளை இறைத்தவள், ''துப்புகெட்டவளே... நீ ஏண்டி, அவ கார்ல ஏறுனே...'' என்று சீறினாள்.''நிறுத்தும்மா...'' என்று சீறியவாறு, போர்த்தியிருந்த துணியை நழுவவிட்டு அழ ஆரம்பித்தாள் சிந்துஜா.''இந்த மேடம் மட்டும் அந்தப் பக்கம் வராம போயிருந்தா இந்நேரம் அந்த பாவிங்க... நான் என்ன ஆகியிருப்பேனோ... அவங்க பிளேடுல... என் டிரஸ்சை கிழிச்சு...''மகளின் நிலையைப் பார்த்த ரத்னா டீச்சர், ''அய்யோ சிந்து...'' என்று அலறி, கீழே கிடந்த பொன்னாடையை எடுத்து உடல் மீது போர்த்தி, மார்போடு அணைத்துக் கொண்டாள்.அனுசுயாவை நோக்கி கை கூப்பியவளுக்கு பழைய சம்பவங்கள் நிழலாட, தலையில், 'படீர் படீர்' என்று அடித்து கொண்டவள், ''என்னை மன்னிச்சிடு அனுசுயா... உன்னை சாக்கடை அள்ள வச்சு, கொடுமைப்படுத்தி, குரூரமா திருப்திபட்டுருக்கேன். என்னவோ, உன் மேல பொறாமை, காழ்ப்புணர்ச்சி. உன்னை நிர்வாணப்படுத்தி... அய்யோ... இன்னிக்கு என் பொண்ணை இப்படி அரைகுறையா பார்க்க கூட மனசு தாங்கலேயே... அன்னிக்கு உன் மனசு என்ன பாடு பட்டுருக்கும். ''ஜெசிந்தா டீச்சர் சொன்னா மாதிரி, நான் காட்டுமிராண்டி தான்... மனுஷியே இல்லே; என் மனசு தான் சாக்கடை; குப்பை. இப்பக்கூட என் பொண்ணை காப்பாத்தி கொண்டாந்துருக்கே... உன் இடத்துல நானிருந்திருந்தா... சத்தியமா சொல்றேன்... உதவி செய்துருக்க மாட்டேன்; சந்தோஷமா ஊரக்கூட்டி, கதை கட்டி, உன்னை அவமானப் படுத்தியிருப்பேன். நான் கேவலமானவ; நீ உசந்துட்ட; நீ தான் உயர்ந்த ஜாதி.''கீழ்மையிலே பிறந்து, முயற்சியும், திறமையும் வீண் போகாதுன்னு நிரூபிச்சுட்டே. குலத்தளவே ஆகுமாம் குணம்ங்கறது பொய்... நீ உசந்து நிக்கிற. சேத்துல பூத்த தாமரைப் பூ நீ...'' என்று அழ, அனுசுயாவும் வாய்விட்டு அழுதாள்.மனதின் மூடி கழன்று கொள்ள, எல்லா அடைப்புகளும் ஏதோ ஒரு கணத்தில் திறக்க, எல்லாமும் வெளியேறி, வெற்றிடமான உணர்வில் அழுகை மட்டுமே சங்கமித்து கிடந்தது அங்கே!அந்த பின்மாலை பொழுதில், புதியதோர் சாந்தி, எங்கும் தவழ்ந்து, விரவி பரவியது!ஜே.செல்லம் ஜெரினா