திண்ணை!
தன் புரட்சிகரமான கதைகளால், இந்திய இலக்கியத்தை உலகளவில் உயர்த்திய இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த். அவர் எப்போதும் தம்மை, 'நாத்திகன்' என்று கூறி கொள்பவர். 'கடவுள் என்பது மனிதனால் படைக்கப்பட்ட பூதம். அது மனிதனைப் பலவீனப்படுத்தி விடுகிறது. உலகம் தன்னம்பிக்கையுள்ள மனிதனுக்கே உரியது. இருக்கிற கொஞ்ச நஞ்சம் புத்தியும், மூட நம்பிக்கையால் நாசமாகி விடுகிறது. கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் உண்மையிலேயே கருணையுள்ளவராக இருந்தால், உலகில் இவ்வளவு துன்பம் ஏன்...' என்பது பிரேம்சந்தின் கேள்வி.ஆயினும், உண்மையில் பிரேம்சந்த் நாத்திகரா என்பது, சந்தேகத்துக்குரிய விஷயம் தான்.அவர் தம் கடந்த கால வரலாற்றை நினைவு கூர்ந்து எழுதிய கட்டுரையில், 'இந்த அனுபவம் என்னை விதியில், தீவிர நம்பிக்கையுள்ளவனாக ஆக்கிவிட்டது. கடவுளின் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது. அவருடைய விருப்பமின்றி, மனித முயற்சியால் எதுவும் நடப்பதில்லை என்பது என் திடமான நம்பிக்கை,' என்கிறார்.கைரேகை சாஸ்திரத்தில் நம்பிக்கையுள்ள பிரேம்சந்த், அதுபற்றி தன் நண்பரிடம், 'இவ்வளவு பேர் இவ்வளவு காலமா இதைப்பற்றி ஆராய்ச்சி செய்துக்கிட்டிருக்காங்க. அவங்களோட கண்டுபிடிப்பை நாம எப்படி உதறித் தள்ள முடியும்...' என்றார்.'நீங்கள் தான் கடவுளை நம்பறதில்லையே...' என்றார் நண்பர்.பிரேம்சந்த் சீரியசாகச் கூறினார், 'நான் தான் சொல்றேனே... கடவுள் வரையிலே எட்ட முடியல. அந்த அளவுக்கு நம்ப முடியல. குழந்தை துடிக்கிறது; நோயாளி தவிக்கிறான். இதையெல்லாம் பார்க்கிறபோது கடவுளை எப்படி நம்ப முடியும்? சொல்லு... பசி, துக்கம், கஷ்டம் இதெல்லாம் கொஞ்சமா இந்த உலகத்தில்! கடவுளோட ராஜ்ஜியம் எனக்குத் தெரியலேன்னா, அது, என் குற்றமா? கடவுளை நம்பினால் அவர் இரக்கமுள்ளவர் என்பதையும் நம்பணும். இரக்கம் இல்லாத கடவுளை எப்படி நம்பறது?'கடவுளைப்பற்றிய அவநம்பிக்கை, கைரேகை சாஸ்திரத்தில் நம்பிக்கை... இந்த இரண்டுக்கும் உள்ள முரண்பாட்டுக்கு ஒரு விளக்கம் காண முடியும்.துன்பங்களும், அநீதிகளும் நிறைந்த இந்த உலகம், இரக்கம் மிக்க ஒரு கடவுளின் படைப்பு என்றோ, கடவுளின் ஆணையால் இயங்குகிறது என்றோ, ஏற்றுக் கொள்ள பிரேம்சந்தால் இயலவில்லை. ஆகவே, அவர் அறிவு நிலையில் கடவுளை மறுத்தார். ஆனால், உணர்வு நிலையில், அவரால் கடவுள் நம்பிக்கையைத் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக இன்னல்களை எதிர்கொள்ள நேர்ந்த போது, அவர் தம்மையறியாமல் கடவுளை நம்ப முற்பட்டார்.—'பேனா மன்னர் பிரேம் சந்த்' நூலிலிருந்து...ஜி.டி.நாயுடு, 1935ல் உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். லண்டனில் நாயுடு இருந்தபோது, இந்தியாவிலுள்ள தம் நண்பர் ஒருவருடன் மூன்று நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார். ஆனால், அவரிடம் தவறுதலாக, ஐந்து நிமிடங்களுக்குரிய கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுபற்றித் தொலைபேசித் துறைக்கு ஒரு புகார் கொடுத்தார். அதில், அவர் பேசியது மூன்று நிமிடங்கள் தான் என்றும், ஆனால், தவறுதலாகத் தம்மிடமிருந்து, ஐந்து நிமிடத்திற்குரிய கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.நாயுடுவின் புகார் கிடைத்ததும், தொலைபேசித் துறை அவர் பேசியதை சரிபார்த்து, அவரிடமிருந்து கூடுதலாக வாங்கப்பட்ட, இரண்டு நிமிடத்திற்குரிய கட்டணமான இரண்டு பவுண்டுகளை, மனுவில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு அனுப்பி வைத்தது.ஆங்கிலேய நிர்வாகத்தைக் கண்டு வியந்து போன நாயுடு, அந்த இரண்டு பவுண்டுகளையும், தொலைபேசி தொழிலாளர்கள் நல நிதிக்கு சேர்க்க வேண்டும் என்று, ஒரு கடிதம் எழுதி, அந்த அதிகாரிக்கே அனுப்பி விட்டார்.—'ஜி.டி.நாயுடு' நூலிலிருந்து...நடுத்தெரு நாராயணன்