உள்ளூர் செய்திகள்

திண்ணை

சென்னையில், போலீசாரின் பிடியில் சிக்காமல், புதுச்சேரிக்கு தப்பிச் சென்றார் பாரதியார். புதுவையில் இருந்தபடியே, மீண்டும், 'இந்தியா' பத்திரிகையை துவக்கினார். இப்போது போல், அந்தக் காலத்தில், பத்திரிகைகள், விற்பனைக்காக, கடைகளுக்கு வராது. சந்தா செலுத்துவோருக்கு மட்டுமே, தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.இன்றுள்ளது போல், அக்காலத்தில், எல்லா ஊர்களிலும், தபால் ஆபீஸ் கிடையாது; போஸ்ட்மேனுக்கு சைக்கிளும் கிடையாது. நகரத்திலிருந்து, ஒரு ஆள், கையில் தடியுடனும், (தடியின் உச்சியில், ஒரு சலங்கை கட்டப்பட்டிருக்கும்) தோளில், தபால்கள் நிரம்பிய பையுடனும், ஓடி வருவார். நடந்து போனால், தாமதமாகும். டெலிவரி செய்ய முடியாது என்பதால், ஓட வேண்டும் என்பது உத்தரவு. ஓடும் அளவுக்கு, உடல் திறன் உள்ளவர்களே, போஸ்ட்மேனாக சேர்க்கப்பட்டனர்இப்படி ஓடும் தபால்காரருக்கு, 'ரன்னர்' என்று பெயர். ஒரு நாள், ஒரு ரூட்டில் போனால், மறுநாள், இன்னொரு ரூட்டில் ஓட வேண்டும். இதனால், கிராமங்களுக்கு, வாரம் ஒரு முறை தான், தபால் வரும். தினசரிப் பத்திரிகைகளும், இப்படி ஏழு நாள் பேப்பருடன், மொத்தமாக வாரக் கடைசியில் வந்து சேரும். பெரிய தலைவர்கள், பிரமுகர்கள் இறந்து போன தகவல்கள் கூட, பத்து நாள் கழித்து தான், தெரிய வரும்.வானொலி நிலையமும் அப்போது வரவில்லை. இப்படியான சூழலில் தான், பாரதியார் புதுவையிலிருந்து, 'இந்தியா' பத்திரிகையை, மீண்டும் துவக்கினார்.ஆங்கிலேயர்களின் ஆட்சி, அதிகாரம் செல்லுபடியாகாத, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியில் இருந்து தான், பாரதியார் பத்திரிகையை துவக்கினார் என்றாலும், புதுச்சேரியில், தபால் துறையை நடத்தி வந்தது, ஆங்கிலேய அரசு தான். பிரெஞ்சு அரசு, தபால் துறையில் இறங்கவில்லை.பாரதியார், 'இந்தியா' பத்திரிகையை, அச்சிட்டு, சந்தாதாரர்களுக்கு அனுப்ப, ஸ்டாம்ப் ஒட்டி, தபால் ஆபீசில் கொண்டு போய் கொடுப்பார். தபால் ஆபீசில், அதை வாங்கி, பாரதியார் தலை மறைந்ததும், அவ்வளவு பிரதிகளையும், தீயிட்டுக் கொளுத்துவர். பிரிட்டிஷ் அரசின் உத்தரவு அப்படி.அதுமட்டுமல்ல... பிரதிகளில் எழுதப் பட்டிருந்த, சந்தாதாரர்களின் முகவரிகளை குறித்துக் கொண்டு, பிரிட்டிஷ் போலீசார், அவர்கள் வீட்டிற்கு சென்று, விசாரணை செய்து, மிரட்டினர்.பயந்து போன சந்தாதாரர்கள், பாரதியாருக்கு கடிதம் எழுதி, 'இனி எங்களுக்கு, பத்திரிகையை அனுப்ப வேண்டாம். சந்தா தொகையையும், திருப்பி அனுப்ப வேண்டாம்...' என்று தெரிவித்தனர்.பாரதியார் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தார். ஏகாதிபத்தியத்தின் இத்தகைய நெருக்கடியால், 'இந்தியா' தொடர்ந்து, வெளிவர இயலாமல், நின்று போயிற்று!- ஆர்.சி.சம்பத் எழுதிய, 'சுதந்திரத்திற்கு முந்தைய தமிழ்ப் பத்திரிகைகள்' நூலிலிருந்து...அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், படித்து வந்த திராவிடர் கழகத்தை சேர்ந்த மாணவர்கள், 1947ல், ஈ.வெ.ரா.,வின், பிறந்த நாளைக் கொண்டாடினர். காங்., கட்சி மற்றும் திராவிடர் கழக மாணவர்களுள் கலகம் மூண்டது. அடிதடி, மண்டை உடைப்பு; அரசு வழக்கு தொடர்ந்தது. திராவிட மாணவர் கழகத்தை சேர்ந்த மதியழகன் மீது, கடலுார் நீதிமன்றத்தில், வழக்கு போடப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டது.'மதியழகன் பரீட்சை எழுதக்கூடாது, அண்ணா மலை பல்கலைக் கழக எல்லைக்குள், மூன்று மைல் சுற்றளவிற்கு நுழையக் கூடாது...' என்று, தடையுத்தரவு பிறப்பித்தார், பல்கலைக்கழக துணை வேந்தர் ரத்தினசாமி.பின், இந்த ரத்தினசாமி, சுதந்திரா கட்சியில் சேர்ந்து, பிரமுகராகி, ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு, போட்டியிட்டார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில் ஒருவராக, அப்போது உருவாகியிருந்த, மதியழகனிடம், தனக்கு ஆதரவு கேட்டார். மதியழகன், 'என்னை நினை விருக்கிறதா?' என்று கேட்டு, பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அதைக் கேட்டு, ஒரு வினாடி மவுனத்திற்கு பின், 'தட் ஈஸ் லைப்' என்றபடி, விடைபெற்றார் ரத்தினசாமி.- ராம.அரங்கண்ணலின், 'எனது நினைவுகள்' நூலிலிருந்து...அப்போது, மத்திய சென்னை தொகுதியில், எம்.பி.,யாக போட்டியிட்டேன். இளைஞனான என்னைக் கண்டு, ராஜாஜிக்கு, 'நான் வெற்றி பெற்று விடுவேனோ' என்று, சந்தேகம்.அப்போது, தி.மு.க., கூட்டணியில் இருந்த ராஜாஜி, அண்ணாதுரைக்கு போன் செய்து, 'மனோகரன் வீக் கேன்டிடேட்...' என்றார்.'பட் ஸ்டிராங் பார்ட்டி மேன்...' என்று, சட்டென்று பதிலளித்தார் அண்ணாதுரை. பதில் பேசாமல், போனை வைத்து விட்டார் ராஜாஜி. தேர்தலில், நான் வெற்றி பெற்று, ராஜாஜியிடம் ஆசி பெற்றேன்.'மேடும் பள்ளமும்'நூலில் நாஞ்சில் மனோகரன்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !