திண்ணை!
கர்சன் பிரபு வைஸ்ராயாக இருந்த காலத்தில், 'வங்கப் பிரிவினை' ஏற்பட்டது. வங்கப் பிரிவினைக்குக் காரண கர்த்தாவாக இருந்தவரே, கர்சன் பிரபு தான்.பாரதியார், 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது, 'வங்கப் பிரிவினை - கர்சன் பிரபு, அகந்தையின் பேரில், இந்தியர்களுக்குச் செய்து விட்டுப் போன அநீதி...' என்று. ஆணித்தரமாக எழுதியதுடன், கர்சனின் யோக்கியதையைப் பற்றி டி.ஸ்மிட்டன் என்ற ஆங்கிலேயர் எழுதியதையும் வெளியிட்டு, கர்சன் பிரபுவின் முகமூடியைக் கிழித்தவர் பாரதியார்.ஆனால், லார்டு கர்சனின் மனைவி இறந்த போது, பாரதியார் அனுதாபமடைந்து வருந்தினார்.அக்காலத்தில், தேசபக்தியின் சின்னமாக விளங்கிய, 'அமிர்த பஜார்' பத்திரிகையோ, கர்சனின் மனைவி இறப்பு குறித்து, மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.இதைக் கண்டு, பாரதியார் உள்ளம் வேதனைப்பட்டு, 'அமிர்த பஜார்' இதழின் செயலை, கண்டிக்கவும் செய்தார். இதுகுறித்து, 'இந்தியா' பத்திரிகையில் அவர் எழுதியது:தேசாபிமானத்திற்கும், நல்லறிவுக்கும் பெயர் பெற்ற கல்கத்தா, 'அமிருத பஜார்' பத்திரிகையைப் பற்றி, கண்டன வார்த்தை எழுதும்படி நேர்ந்ததை எண்ணி வருத்தமடைகிறோம். ஆனால், கூடப் பிறந்த சகோதரனாக இருந்த போதிலும், அவனுடைய குணங்களை மறைத்து வைப்பது, முறையாகாது. ஆதலால், எத்தனையோ மதிப்புக்கிடமாகிய, 'அமிருத பஜார்' பத்திரிகை கூட, ஒரு பிழை செய்யும் பட்சத்தில், அதை எடுத்துக்காட்டுவது நம்முடைய கடமையாகிறது. லேடி கர்சன் சென்ற வாரம் மரணமடைந்ததைப் பற்றி, இப்பத்திரிகை எழுதிய போது, 'இந்தியர்களை லார்டு கர்சன் கஷ்டப்படுத்தியதன் காரணமாகத் தான் அவர், இந்த இளம் வயதிலேயே, மனைவியை, இழந்து விட்டார். இது, சரியான தெய்வ தண்டனை...' என்று கூறுகிறது. இது, கவுரவமற்ற மனிதர்கள் பேச்சைப் போல் உள்ளது.நம், பரம சத்ருவாக இருந்த போதிலும், அவருக்கு, மனைவி இறத்தல் போன்ற கஷ்டம் நேரிடும்போது, நாம், அவன் செய்த தீமைகளை எடுத்துக் காட்டி, சந்தோஷமடைவது, பேடித்தனமான செய்கை. லார்டு கர்சன் நமக்கு செய்த தீமைகளின் பொருட்டு, அவரை வேண்டிய மட்டும் கண்டனம் செய்யலாம். அவரது செயலை கண்டிக்காமல், நம்மை இம்சித்ததின் பொருட்டு, அவருக்கு, மரியாதை செய்யும் பிரிட்டிஷ் அரசை கண்டனம் செய்து பேசலாம். அதை விட்டு விட்டு, 'ஏ... லார்டு கர்சன், நீ என்னைத் தொந்தவு செய்தாயல்லவா... அதற்காகத் தான், உன் மனைவி செத்துப் போனாள்...' என்று குழந்தைத்தனமாக, 'அமிர்த பஜார்' பத்திரிகை பேசுவது, அதன் பெருமைக்கு, இழுக்கானது. உண்மையான ஆசிரியன், தன் விரோதிகளுக்குக் கூட, துக்கமேற்படும் பட்சத்தில், இரக்கம் அடைவானே தவிர, சந்தோஷமடைய மாட்டான். — இந்தியா: 28-7-1906.வல்லபாய் படேலின் தந்தை ஜாவேரி பாய், ஜான்சி ராணி லட்சுமிபாயின் படையில், ஒரு போர் வீரராக இருந்தார். 'வாரிசு இல்லாத ராணி, சுவீகார மகனுக்கு, பட்டம் கட்டக் கூடாது' என்று, கிழக்கிந்திய கம்பெனியார் அறிவித்தனர். இதை எதிர்த்து, ஜான்சி ராணி போரிட்டார்; கொல்லப்பட்டார். படைவீரர்கள் நிலை குலைந்து போயினர்.பட்டேலின் தந்தை ஜாவேரி பாய், இந்தூர் மன்னர் பல்லாரி ராவிடம் அடைக்கலம் கேட்டு வந்தார். வெள்ளையர்களுக்கு பயந்த மல்லாரிராவ், ஜாவேரி பாயை கைது செய்து, சிறையில் அடைத்தார். பின், மனம் மாறி, தன் மெய்க்காப்பாளராக வைத்துக் கொண்டார்.ஒருமுறை, அரசர், தன் நண்பருடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டு இருந்தார். பக்கத்தில் நின்றிருந்த ஜாவேரிபாய் உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அரசர் ஒரு காயை தவறாக நகர்த்தப் போனார்; நகர்த்தியிருந்தால் தோல்வி நிச்சயம். அந்த சமையத்தில், 'அரசே... அந்த காயை நகர்த்தாதீர்கள்...' என்று, குரல் கொடுத்தார் ஜாவேரி பாய். அரசருக்கும் தன் தவறு புரிந்தது. ஜாவேரிபாய் சொன்ன யோசனையால், அரசர் வெற்றி பெற்றார். ஜாவேரிக்கு பரிசு - விடுதலை. ஜாவேரிபாய், மூன்று ஆண்டுகளுக்கு பின், தன் குடும்பத்துடன் சேர்ந்தார்.— ஆர்.பி.சாரதி எழுதிய, 'வல்லபாய் படேல்' நூலிலிருந்து.பிரான்ஸ் - ஸாய்ர் என்பது, பிரான்ஸ் நாட்டில் வெளிவரும், மிகப் பிரபல தினசரி. செய்திகளை வெளியிடும் போது, மகிழ்ச்சி தரும் செய்திகளுக்கு மேல், ஒரு, 'ஸ்பெஷல்' புன்னகை முத்திரையை, வெளியிடுகிறது. கஷ்டப்பட்டு, அலுத்துப் போனவர்கள், அவற்றை மட்டும் படிப்பதற்காக, இந்த ஏற்பாடு.நடுத்தெரு நாராயணன்