உள்ளூர் செய்திகள்

அவனே இவள் உலகம்!

ஆக.,16 ஆடிப்பூரம்இவ்வுலகில் எவ்வளவோ பேர் பிறக்கின்றனர்; இறக்கின்றனர். ஆனால், மனதில் நிற்பவர்கள் சொற்பமே! அத்தகையோரில் ஆண்டாளும் ஒருவள். அன்றும், இன்றும், என்றும் நம் மனதில் நிலைத்திருப்பவள்.அவளின், மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்ற பாடலை பாட ஆரம்பித்தால், காதுகளில் தேன் பாயும். மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத என பாடினால், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நமக்கு நடந்த திருமணக்காட்சி இன்பமாய் ஊற்றெடுக்கும். கன்னியருக்கோ நாளை நடக்கப் போகும் திருமணக் காட்சி, கண் முன் விரியும்.பக்தியால், பாடலால் மனித இதயங்களை கொள்ளை கொண்ட, அந்த இதயக்கனிக்கு இன்று பிறந்த நாள். ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தாள் ஆண்டாள். அவள் இதயத்தில் கண்ணன் என்னும் மன்னனைத் தவிர, வேறு யாருமே ஏன்... வேறு ஏதுமே இல்லை. அவனே தன் உலகம் என வாழ்ந்து வந்தாள்.சிலர் தான், பிறக்கும் போதே தெளிந்த சிந்தையுடன் பிறக்கின்றனர். ராமாயணத்தில் ராமன் பிறப்பு பற்றி வால்மீகி எழுதும்போது, ராமனை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. ஆனால், பரதன் பிறப்பை குறிப்பிடும் போது, 'தெளிந்த மனதைக் கொண்டவனாய் அவன் அவதரித்தான்...' என்று பெருமைப்படுத்துகிறார். அவனது மனதை மாற்ற யாராலும் முடியவில்லை.ராமன் காட்டுக்குப் போய் விட்டான்; அப்போது பரதன், கோசலையிடம்,'அம்மா... அண்ணன் காட்டுக்குப் போனதற்கு கூனி செய்த சதியோ, கைகேயியின் வரமோ, தந்தையின் சொல்லுக்கு ராமன் கட்டுப்பட வேண்டிய நிர்பந்தமோ காரணம் அல்ல; நான் செய்த பாவமே காரணம். நான் கைகேயியின் வயிற்றில் பிறந்ததால் தானே, எனக்காக ஆட்சிப் பொறுப்பை அவள் கேட்டாள்... அதனால் தானே அண்ணன் காட்டுக்கு அனுப்பப்பட்டார்...' என்று தன் மீதே பழியைப் போட்டுக் கொள்கிறான்.இதுபோல் தெளிந்த சிந்தனை உடையவள் ஆண்டாள்.ஸ்ரீவில்லிபுத்தூரை கண்ணன் வளர்ந்த ஆயர்பாடியாகவும், இவ்வூர் பெண்களை கோபியராகவும், இங்குள்ள கோவிலை, கண்ணனின் வளர்ப்புத் தந்தை நந்தகோபரின் மாளிகையாகவும், அந்தக் கோவிலில் அருளும் வடபத்ரசாயியை, கண்ணனாகவும் மனதிற்குள் கற்பனை செய்து, அவனே கதி என இருந்தாள்.கண்ணனை அடைவதைத் தவிர, வேறு எந்த சிந்தையும் தன்னிடம் இல்லை என்று வைராக்கியமாக வாழ்ந்து, கடைசியில், அந்தப் பெருமாளுடனே ஜோதியில் கலந்தாள். இத்தகைய வைராக்கியம் தான் பக்திக்கு தேவை. வைராக்கியம் இருந்தால் தான் இறைவனை அடைய முடியும்.திரேதாயுகத்தில், ஜனக மகாராஜா மிதிலையில் கலப்பையால் உழுத போது, ஸ்ரீதேவியின் அம்சமான சீதை கிடைத்தாள். கலியுகத்தில், பெரியாழ்வார் நந்தவனத்தை சீர்படுத்தும் போது, துளசி மண்ணின் கீழே கோதை ஆண்டாள் கிடைத்தாள். 'கோதை' என்றால், நல்வாக்கு அருள்பவள் என்று பொருள்.நமக்கெல்லாம் நல்வாக்கான திருப்பாவை அருளியவள் ஆண்டாள். வாழ்வுக்கு தேவையான அனைத்துக் கருத்துகளையும், 30 பாடல்களில் அடக்கியவள். அவளது பிறந்த நாளில் இங்கிருந்தபடியே அவளை நினைப்போம். இறைவனைச் சரணடைவதே இறுதியானது என்பதை அறிவித்த அவளது திருவடிக்கு, வணக்கம் சொல்வோம். தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !