உள்ளூர் செய்திகள்

திண்ணை!

'கல்கியின் நகைச்சுவை' நூலிலிருந்து: கோவலன், சிலம்பு விற்று வருவதற்காக, கண்ணகியிடம், விடை பெற்று புறப்படும் மிக உருக்கமான கட்டம். கண்ணகி, ராக, தாளங்களுடன் அழுகிறாள்; கோவலனும் ராகம் பிசகாமல், தாளம் தவறாமல், அவளுக்கு ஆறுதல் கூறுகிறான். பின், இருவரும் பிரிந்து, தலைக்கு ஒரு திசையாக, தாளத்துக்கு இசைவாக, கால் எடுத்து வைத்து செல்கின்றனர். கண்ணகி மேடையிலிருந்து மறைந்து விட்டாள். கோவலனும் உள்ளே போகும் சமயம், அந்த நெருக்கடியான, துயரகரமான தருணத்தில், 'தேச பந்து பாட்டு...' என்று ஒரு குரல் எழுந்தது.உள்ளே சென்ற கோவலன், திரும்ப மேடைக்கு வரும் வரையில், கூச்சல் நிற்கவில்லை. அவன் வந்ததும், ஐந்து நிமிடம் பலத்த கரகோஷம். அந்த ஆரவாரம் அடங்கியதும், கண்ணகியை பிரிந்து, காற் சிலம்பை விற்கச் சென்ற கோவலன், 'அங்க தேச, வங்க தேச, பந்துவை இழந்தனம்...' என்று பாடத் துவங்கினான்.முதலில், இந்த பாட்டுக்கு, எனக்கு அர்த்தம் விளங்கவேயில்லை. கொஞ்ச நேரம் கேட்ட பின்தான், நான்கு ஆண்டுக்கு முன் இறந்து போன, தேச பந்து சித்தரஞ்சன் தாசின் மரணத்தைக் குறித்து, 2,000 ஆண்டுக்கு முன்னிருந்த கோவலன், சிலம்பு விற்க போவதை கூட நிறுத்தி விட்டு, பிரலாபிக்கிறான் என்று அறிந்து கொண்டேன். உண்மையிலேயே, அப்போது, எனக்கு கண்ணில் நீர் ததும்பி விட்டது. ஆனால், அது, தேச பந்து சித்தரஞ்சன் செத்துப் போனதற்காக அல்ல!ஜெர்மனியில் பிறந்த சீகன் பால்கு, கிறிஸ்தவ சமயத்துக்கு தொண்டாற்ற, தமிழகம் வந்தவர், தமிழ் மொழியைக் கற்று, தமிழர்களின் சமயத்தை மேல் நாட்டவருக்கு அறிமுகப்படுத்தினார்.அப்போது, ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வரவில்லை; டச்சுக்காரர்கள், தமிழகத்தின் கடற்கரையில், தஞ்சையை அடுத்த தரங்கம் பாடியில் கோட்டை அமைத்து வாணிபத்தில் ஈடுபட்டனர்.சீகன் பால்குவை சமயப் பணியாற்ற, தமிழகத்துக்கு அனுப்பினார், டச்சு மன்னர். ஜூலை 9, 1706ல் தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த சீகன் பால்கு, எல்லாரும் இலவசக் கல்வி பயில, பள்ளிக்கூடம் துவங்கினார். பெண்களுக்கு என்றே தனிப் பள்ளிக்கூடம் ஒன்றும் துவங்கினார். தமிழகத்தில் பெண்களுக்காகத் துவங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடம் இதுவே! தமிழ் இலக்கிய பாடங்களே நடத்தப்பட்டு வந்த நிலையில், இவர் பள்ளியில், முதன் முதலாக, விஞ்ஞான பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது.புத்தகங்கள் அச்சிட, தரங்கம்பாடியில், ௧௭௧௨ல் ஓர் அச்சகம் அமைத்தார். தென்னாட்டில் அமைக்கப்பட்ட முதல் அச்சகம் இதுதான். புத்தகம் அச்சிட காகிதம் வேண்டுமே... அதற்காக, காகிதம் உற்பத்தி செய்ய, ஒரு ஆலை துவங்கினார். தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் காகித ஆலை இதுவே!அதுநாள் வரை, பனை ஓலை ஏட்டில், எழுத்தாணி கொண்டு எழுதி வந்தனர். எல்லா மக்களிடமும் எளிதில் சென்று சேர, அச்சுக் கலைக்கும், காகிதத் தயாரிப்புக்கும் அடிகோலியவர், சீகன் பால்கு தான்!இவர் பைபிளை தமிழில் மொழி பெயர்த்து, அதை அச்சிட்டு வெளியிட்டார். ஆசிய மொழி ஒன்றில், பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது இதுவே முதல் முறை.தமிழர்களின் வாழ்க்கை முறையை கண்டுணர, தமிழகம் முழுவதும் பயணம் செய்து, பல அறிஞர்களுடன் உரையாடி, ௩௦௦ ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்தார்.மேல்நாட்டவர் தமிழ் மெழியை அறிய வேண்டி, 'தமிழ் அரிச்சுவடி' ஒன்றையும், 'தமிழ் - ஜெர்மன்' மொழி அகராதியையும் அச்சிட்டு வெளியிட்டார். 'தமிழரின் கடவுள்கள்' என்ற நூலை, இரு தொகுதிகளாக வெளியிட்டார். 'தமிழ் மக்கள் பற்றிய விபரங்கள், தமிழர் ஒழுக்கம் மற்றும் தமிழர் அறநெறி' உள்ளிட்ட சில நூல்களை எழுதினார்; ஆனால், இவை கிறிஸ்தவ சமயப் பணியுடன் தொடர்பு இல்லாதவை என்பதால், தரங்கம்பாடி அச்சகத்தில் அச்சிட முடியவில்லை. அவை, ௧௮௬௭ல் ஜெர்மனியிலும், ௧௯௩௦ல் நெதர்லாந்திலும் அச்சிட்டு, வெளியிடப்பட்டன.தமிழுக்கு இவ்வளவு அரும்பெரும் பணிகள் ஆற்றிய சீகன் பால்கு, தன், ௩௬வது வயதில் தரங்கம்பாடியில் காலமானார்!நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !