திண்ணை!
'நிவேதிதா தேவி' நூலிலிருந்து: அயர்லாந்து நாட்டில், 1867ல் பிறந்தவர், மார்க்கரெட் எலிசபெத். அங்கிருந்து இங்கிலாந்து வந்தவர், லண்டனில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றினார். இச்சமயம், லண்டன் வந்திருந்த விவேகானந்தரின் உரையைக் கேட்டு, அவரது சிஷ்யை ஆகி, இந்தியா வந்தார். சில காலம் வேதாந்த பாடங்களை கற்றவருக்கு, ஞான தீட்சை அளித்து, 'நிவேதிதா' என்று நாமம் சூட்டி, தீட்சை வழங்கினார், விவேகானந்தர்.அக்காலத்தில், சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பும் பழக்கம் இந்துக்களிடையே இல்லை. அதனால், கோல்கட்டாவில் பெண்களுக்கென்று பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவினார், நிவேதிதா. பின், தேடிப்பிடித்து மூன்று சிறுமிகளை பள்ளிக்கு அழைத்து வந்தார். ஆனால், அச்சிறுமிகளோ, யாராவது அவர்களை திரும்பி பார்த்தால் கூட, உடனே, இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொள்வர். அந்தளவுக்கு வெளி உலக தொடர்பு இல்லாதவர்களாக இருந்தனர். நாளடைவில், இன்னும் சில குழந்தைகள் சேர்ந்தனர். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு வருவதில்லை. நினைத்த நேரத்தில் வருவர்.சுவாமி விவேகானந்தர் இறையடி சேர்ந்ததும், சமூக சேவையோடு, இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டார், நிவேதிதா.இங்கிலாந்தில் உள்ள தன் சொத்துகளை விற்று, அதில் வரும் பணம், தான் நிறுவிய பெண்கள் பள்ளிக்கு சேர வேண்டும் என்று உயில் எழுதியவர், 1911ல் டார்ஜிலிங் நகரில் காலமானார். கோல்கட்டாவில் அவர் நிறுவிய பள்ளி, இன்று, அவர் பெயரால் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. அத்துடன், நிவேதிதா பெயரில் பல தெருக்களும் உள்ளன.முக்தா சீனிவாசன் எழுதிய, 'சாதனையாளர்கள்' நூலிலிருந்து: 'அரேபியன் நைட்ஸ்' கதை தொகுதியிலிருந்து ஒரு கதையை தேர்ந்தெடுத்து, 'ஆதித்தன் கனவு' எனும் பெயரில், படமாக்க முனைந்தார், சேலம், மார்டன் தியேட்டர்ஸ் அதிபர், டி.ஆர்.சுந்தரம். இது, நடந்தது, 1948ல்! அப்போது பிரபலமாகியிருந்த, டி.ஆர்.மகாலிங்கத்தையும், அஞ்சலிதேவியையும் கதாநாயகன், நாயகியாக ஒப்பந்தம் செய்தார். நான், உதவி இயக்குனர். முதல் வாரம் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அடுத்த மாதத்திற்கு கால்ஷீட் தேதி கொடுத்திருந்தார், மகாலிங்கம். 'செட்' தயாரானது; குறிப்பிட்ட நாளில், மகாலிங்கத்தை அழைத்து வர, சென்னைக்கு என்னை அனுப்பினார், டி.ஆர்.சுந்தரம். நான் சென்னை வந்து, அவரை சந்தித்தேன். 'இன்றிரவே போய் விடலாம்; டிக்கெட் போட்டு விடு...' என்றார், மகாலிங்கம். அவருக்கு முதல் வகுப்பும், எனக்கு மூன்றாம் வகுப்பு டிக்கெட்டும் வாங்கினேன்.அன்றிரவு, இருவரும் ரயிலில் புறப்பட்டோம்.மறுநாள் காலை, வண்டி சேலம் அடைந்தது. நான், மகாலிங்கம் இருந்த பெட்டிக்குச் சென்றேன்; அவரைக் காணோம். வழியில், ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறங்கி, யாரோ கொண்டு வந்த காரில், அங்கிருந்து போய் விட்டார் என்று தெரிய வந்தது.இதை, டி.ஆர்.சுந்தரத்திடம் சொன்னால் கோபப்பட்டு, படத்தையே நிறுத்தி விடுவார். அதனால், மகாலிங்கம் எங்கு போயிருப்பார் என்று விசாரித்து, அவர் ஈரோட்டில் இருப்பதாகவும், அன்று, அங்கு ஒரு நாடகத்தில் நடிக்கிறார் என்றும் அறிந்து, ஈரோடு சென்று, நாடகம் முடிந்ததும், அவரைக் காரில், சேலம் அழைத்து வந்தோம்.நடுத்தெரு நாராயணன்