திண்ணை!
'அன்னை தெரசா' நுாலிலிருந்து: ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் மற்றும் தொழுநோயாளிகளுக்காக, தம் வாழ்நாள் முழுவதும் சேவை செய்து வந்தவர், அன்னைதெரசா. பல நாடுகளில் அவரது தொண்டு நிறுவனங்களின் கிளைகள் இருந்ததால், அது சம்பந்தமாக அடிக்கடி, அவர் விமானங்களில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், விமானக் கட்டணங்கள் அதிகமாக இருந்ததால், இலவச, 'பாஸ்' வழங்கும்படி, அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும், 'பாஸ்' கிடைக்கவில்லை. அதனால், தாம் பயணம் செய்யும்போது, கட்டணத்திற்கு ஈடாக, விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிய, தயாராக இருப்பதாகவும் கூறினார்.இதன்பின், 'ஏர் இந்தியா' அதிகாரிகள், தெரசாவுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை அளிக்கத் துவங்கினர். இதைத் தொடர்ந்து, 'அலிடாலிக், பான் ஆம்' மற்றும் எத்தியோப்பிய விமான ஏஜன்சிகள் அவருக்கு விமான டிக்கெட்டுகளை இலவசமாக கொடுத்தன.சின்ன அண்ணாமலை எழுதிய, 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்னும் நுாலிலிருந்து: திருச்சியில், ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய பின், சென்னை வருவதற்காக ரயில்வே ஜங்ஷனுக்கு வந்தேன். வண்டியில் இடமில்லாமல் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தேன். திடீரென, ஒரு போலீஸ் அதிகாரி வந்து, 'உங்களை, சி.எம்., கூப்பிடுகிறார்...' என்றார்.'யார், அண்ணாதுரையா...' என்றேன். 'ஆம்' என்றார்.அவரை பின் தொடர்ந்து, அண்ணாதுரை இருந்த பெட்டிக்கு போனேன். அவர் என்னை வரவேற்று, 'சென்னைக்கு தானே...' என்றார். 'ஆம்' என்றதும், 'என்னுடன் பயணம் செய்வதில், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே...' என்றார்.'இல்லை' என்று கூறி, அவருடன் பயணத்தை துவங்கினேன்; ரயில் நகர ஆரம்பித்ததும், 'உங்களிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதா?' என்று கேட்டார்.'வித் அவுட்டில் வருவதாக நினைத்து விட்டீர்களோ... இதோ, என் முதல் வகுப்பு டிக்கெட்...' என்று, டிக்கெட்டை எடுத்து காண்பித்தேன்.'என் தம்பிமார்களில் சிலர், என்னுடன் வரும் தைரியத்தில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வதுண்டு. அவர்களுக்காக, நான் டிக்கெட் வாங்குவது வழக்கம்; அதனால் தான் கேட்டேன்...' என்றார்.'நான், உங்களை நம்பி பயணம் செய்பவன் இல்லயே...' என்றேன்.'நீங்கள் சொல்லும் அரசியல் கருத்து எனக்குப் புரிகிறது; திருச்சிக்கு எங்கே வந்தீர்கள்?' என்று கேட்டார். 'ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்காக வந்தேன்...' என்றேன்.'சரி... தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கிறது; இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமென்று நினைக்கிறீர்கள்?' என்று எக்குத்தப்பான கேள்வியை கேட்டார்.நான் சிறிது யோசித்து, 'நுால் தீருகிற வரை, கழி சுற்றிக் கொண்டேயிருக்கும்...' என்றேன்.'விளக்கம் தேவை...' என்றார்.'இந்தி எதிர்ப்பு என்ற மாயை நீங்கும் வரை, தி.மு.க., ஆட்சி இருக்கும்...' என்றேன்.'இதுதான், காங்கிரஸ்காரர்களுடைய அபிப்ராயமா?' என்றார்.'பெரும்பாலோரின் எண்ணம்...' என்றேன். 'தேர்தலில், காங்கிரஸ் தோற்றதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா...' என்று கேட்டார்.'கடந்த, 1962ல் நடந்த தேர்தலில் உங்களை காஞ்சிபுரத்தில் தோற்கடித்தது தான், காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம்...' என்றேன்.'எப்படி?' என்றார்.'உங்களை, 1962ல் வெற்றி பெற விட்டிருந்தால், இவ்வளவு முனைப்பாக வேலை செய்து, தங்களுக்கு பரம எதிரியான ராஜாஜி போன்றோருடன் சேர்ந்து, கூட்டணி அமைத்திருக்க மாட்டீர்கள்; எதிர்க்கட்சி தலைவராகவே இருந்திருப்பீர்கள்; காலம் ஓடியிருக்கும். இதை, நான் அப்போதே காமராஜரிடம் சொன்னதுடன், காஞ்சிபுரம் தேர்தல் கூட்டங்களில் பேசவும் மறுத்து விட்டேன்...' என்றேன்.பின்னர் இருவரும் படுத்து துாங்கி விட்டோம். காலையில் எழுந்ததும், செங்கல்பட்டு ஸ்டேஷனில், காலை ஆகாரத்தை அன்புடன் எனக்கு அவரே பரிமாறினார். அது முடிந்ததும், என்னிடமிருந்த ஒரு புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்; அது, நான் எழுதிய, 'மானமே பெரிது' என்ற நாவல்!'இந்த நாவல், நம் சந்திப்பின் நினைவாக என்னிடமே இருக்கட்டும்; இதில், 'அன்பளிப்பு' என்று எழுதி, கையெழுத்திட்டு தாருங்கள்...' என்று புத்தகத்தை நீட்டினார். கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். மாம்பலம் ஸ்டேஷன் வந்ததும், அண்ணாதுரையிடம் விடைபெற்று, ரயிலை விட்டு இறங்கினேன்.உண்மையில், என் மனதில் அது வரையில், அண்ணாதுரையை பற்றி இருந்த துவேஷ எண்ணம், ஸ்டேஷனை விட்டு ரயில் போனதைப் போல், என் இதயத்தை விட்டு போய் விட்டது!நடுத்தெரு நாராயணன்