உள்ளூர் செய்திகள்

திண்ணை!

டிச., 1969ல், 'தீபம்' இலக்கிய இதழில், இயக்குனர், கே.பாலசந்தர், நாடகம் பற்றி எழுதியுள்ள கட்டுரையிலிருந்து: நாடகம் ஒரு இன்பத் தொல்லை; எழுதும் ஆசிரியர், நடிக்கும் நடிகர் மற்றும் நடத்தும் தயாரிப்பாளர் என, எல்லாருக்குமே தான்.பெரும் தொல்லைகளையும், தொந்தரவுகளையும் சுமந்து மேடை ஏற்றப்படும் நாடகம், அரங்கேற்றத்தன்று நமக்கு தருவதோ பேரின்பம்; அந்த உணர்ச்சியை எழுத, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.நாடகத்தை எழுதி, நடிகர்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்கு ஒத்திகைகள் நடைபெறும் போது, 'இனி, அடுத்த நாடகம் தயாரிப் பதில்லை...' என்று சபதம் எடுப்பேன். ஆனால், பிரசவ வைராக்கியம் போல், நாடகம் அரங்கேற்றம் செய்யப் பட்டவுடன், பட்ட தொல்லைகளும், மனஸ்தாபங்களும் மறைந்து, பெற்ற குழந்தை மக்கள் மத்தியில் பவனி வரத் துவங்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி போன்ற இன்பம் ஏற்படும்.அப்படிப்பட்ட இன்ப உணர்ச்சி, வீட்டை கட்டி, புதுமனை புகுவிழா நடத்தியபோது கூட எனக்கு கிட்டியதில்லை; நான் இயக்கிய திரைப்படம் வெளியான அன்று கூட, அந்த இன்ப உணர்ச்சியில் திளைத்ததில்லை. இதன் காரணத்தை ஆராய்ந்தபோது தான், நாடகத்தின் தனித் தன்மையும், சிறப்பும் புரிகிறது.மக்கள், நேருக்கு நேராக, கதாபாத்திரங்களை மேடையில் சந்திப்பதே இதன் சிறப்புக்கு காரணம். அதனால்தான், மேடையில் தோன்றும் கதாபாத்திரங்களுடனும், அவர்களுடைய உணர்ச்சிகளுடனும் ஐக்கியமாகி விடுகின்றனர், மக்கள். இதன் காரணமாகவே, மேடையில் வெற்றிபெறும் சில நாடகங்கள் திரைப்படங்களாக வரும்போது, அவை வெற்றி அடைவதில்லை. நாடகத் துறையிலும், திரைப்படத் துறையிலும் சம்பந்தப்பட்டவன் என்ற முறையில் கூறுகிறேன்... திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை இயக்க, ஒரு இயக்குனர் தேவைப்படுகிறது என்றால், நாடகத்திலோ அதைப் பார்க்கும் மக்கள் அனைவருமே அந்நாடகத்தின் இயக்குனர்கள் தான். வசனங்களை பேசி, உணர்ச்சியோடு நடிக்கும் நாடக நடிகனுக்கு மேடையிலேயே மக்களின் ஆரவாரமும், கைத்தட்டலும் கிடைக்கிறது. அதனால், பாத்திரத்தோடு மேலும் ஐக்கியமாகிறான். படப்பிடிப்பில் நடிக்கும் நடிகனின் நடிப்புக்கு, 'ஓ.கே.,' என்று கூறுகிறார், இயக்குனர். மேடையிலோ அந்த, 'ஓ.கே.,' என்ற வார்த்தையை மக்களே நடிகனுக்கு சொல்லி விடுகின்றனர், கைத்தட்டல் மற்றும் ஆரவாரத்தின் மூலமாக! ஒரே ஒருவர் சொல்லும், 'ஓ.கே.,' என்ற வார்த்தைக்கு மாறாக, இங்கே ஆயிரமாயிரம் மக்கள், 'ஓ.கே.,' சொல்கின்றனர்.இப்படியாக, நாடக நடிகனுக்கு ஏற்படும் உணர்ச்சி வேகமும், ஆர்வமும் திரைப்பட நடிகனுக்கு இருக்க நியாயமில்லை!'அசைட்' என்ற ஆங்கில இதழுக்கு, கணித மேதை ராமானுஜத்தின் மனைவி அளித்த பேட்டியிலிருந்து....கணித மேதை ராமானுஜம் காலமானதும், அவர் உடலுக்கு இறுதி கர்மாக்கள் செய்ய, புரோகிதர்கள் வர மறுத்து விட்டனர். காரணம், அவர் கடல் கடந்து வெளிநாடு சென்றது தான். புரோகிதர்கள் கர்மாக்கள் ஒன்றும் செய்யாமலேயே ராமானுஜம் உடல் எரிக்கப்பட்டது.நடுத்தெருநாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !