திண்ணை!
'பேசும் படம்' இதழில் வெளியான, 'ராஜா சாண்டோ' எனும் கட்டுரையிலிருந்து: சாண்டோ என்றதும், பலருக்கும், சாண்டோ சின்னப்பா தேவர் தான் நினைவுக்கு வரும். மற்றொருவர், நடிகர், ராஜா சாண்டோ.ஒரு காலத்தில், தமிழ் பட உலகையும், இந்தி பட உலகையும் கலக்கியவர். ஊமைப் படச்சுருள்கள் காட்டப்படும் இடங்களில், ஆரம்பத்தில், அவை, 10 - 20 நிமிடங்களே ஓடின. 'புரொஜக்டர்' சூடாகி விடும். சூடு குறைந்ததும் தான் புதிய சுருள் போடப்படும்.அதுவரை, படம் பார்க்க வந்த ரசிகர்களை திருப்திப்படுத்த, நடனம், குத்துச்சண்டை மற்றும் 'ஜிம்னாஸ்டிக்' போன்றவை ஏற்பாடு செய்யப்படும். இவற்றில், 'ஜிம்னாஸ்டிக்' செய்து, பரபரப்பூட்டியவர் தான், ராஜா சாண்டோ.புதுக்கோட்டையை சேர்ந்த இவர், முதலில், புதுச்சேரியில், துண்டு சுருள்கள் காட்டப்படும் இடத்தில், இடையிடையே, 'ஜிம்னாஸ்டிக்' செய்து, மக்களை மகிழ்வித்தார். 1920களில், தமிழ் பட தயாரிப்பு, மிக மந்தமாக இருந்தது. இதனால், மும்பை சென்று, இந்தி படங்களில் நடிக்க முயற்சித்தார். அங்கு, பயில்வான்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 'நேஷனல் பிலிம் கம்பெனி'யில், தன்னை, 'ஸ்டன்ட்' நடிகராக இணைத்துக் கொண்டார். 1923ல், வீரபீம்சேன் என்ற இந்தி படத்தில் நடித்து புகழ்பெற்றார்.இவருடைய திறமையை அறிந்த இயக்குனர், கே.சுப்ரமணியம், 1928ல், ராஜா சாண்டோவை, சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னையில், சில ஊமை படங்களில் நடித்தார், சில படங்களை இயக்கவும் செய்தார். பேசும் படம் வந்ததும், மீண்டும் மும்பை சென்று நடிக்க ஆரம்பித்தார்.இந்தி படங்களில் நடித்தபோது, மறுபடியும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, 1935ல், மேனகா என்ற தமிழ் படத்தின் இயக்குனர் ஆக்கப்பட்டார். 1936 - 1942 வரை, சில படங்களில் நடிகர் மற்றும் இயக்குனராகவும் இருந்தார்.இவருக்கு நடந்த ஒரு பாராட்டு கூட்டத்தில், அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர், தீரர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கியுள்ளார். செப்., 24, 1943ல், மாரடைப்பால் காலமானார், ராஜா சாண்டோ.கிருபானந்த வாரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து: மேடை முன் அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து, 'நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா...' என்று கேட்டார், வாரியார். அந்த, 'ஊர் கோடியில் இருக்கு...' என்று, ஒட்டுமொத்தமாக பதில் கூறினர், சிறுவர்கள்.'ஆடு, மாடு, கோழிகளுக்கு எங்கே இருக்கிறது...' என்று, அடுத்த கேள்வியை கேட்டார், வாரியார்.சிறுவர்கள் பதில் தெரியாமல், மிரட்சியுடன் அவரை பார்த்தனர். சிரித்துக்கொண்டே, 'இதோ இங்கே இருக்குது... மாமிசம் சாப்பிடும் அனைவருக்கும், அவரவர் வயிறே சுடுகாடு...' என்று கூறி, வயிற்றை தடவி காண்பிக்க, கூட்டத்தில், பலத்த சிரிப்பொலி.திருவாரூரில், மேடையில் இருந்த வாரியாருக்கு, மாலை அணிவிப்பதற்காக, அன்பர் ஒருவர் வந்தார். ஏற்கனவே, வாரியாரின் கழுத்தில் மாலை இருந்ததால், தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல், கையில் வைத்தபடியே நின்றார். இதை அறிந்த வாரியார், மாலையை கழற்றி, அருகில் இருந்தவரிடம் கொடுத்தார். உடனே, இதற்காகவே காத்திருந்தவர் போல், விறுவிறுவென, வாரியாருக்கு மாலை அணிவித்தார், அன்பர்.அப்போது, கூட்டத்தினரை பார்த்து, 'எப்போதும் நம்மிடம் இருப்பதை எவருக்காவது கொடுத்தால் தான், அடுத்தவர்கள் நமக்கு கொடுப்பர்...' என்றார், வாரியார்.நடுத்தெருநாராயணன்