திண்ணை
குன்றில்குமார் எழுதிய, 'மாமன்னன் ராஜராஜன்' நுாலிலிருந்து: தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் அறிவித்த திட்டங்களில், மிகவும் குறிப்பிடத்தக்கது, 'சாவாமூவா பேராடு' திட்டம்.இது என்ன புது திட்டம்... பெயரே ஒரு மாதிரியா, வித்தியாசமா இருக்கிறதே என்ற எண்ணம் எழுகிறதா... பெயரை போலவே, இந்த திட்டமும் சற்றே வித்தியாசமானது தான்.அதாவது, இந்த திட்டத்தை பற்றி சுருக்கமாக கூற வேண்டுமானால், 'கோவில் விளக்கும் எரிய வேண்டும்; ஏழைகளின் வயிறும் நிறைய வேண்டும்...'தன் நாட்டு மக்கள் மீது, மாமன்னனுக்கு தான் எத்தனை பற்றும், பாசமும் இருந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்ட, இந்த ஒரு திட்டமே போதுமானது.பொருளாதார வலிமை மிகுந்த குடும்ப பெண்மணி ஒருவருக்கு, தீராத மனக்கவலை, மனப்பிணி என்றும் கூறலாம். தன் கவலைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, பெருவுடையார் கோவிலில் வந்து வேண்டுதல் செய்தாள். அவளது வேண்டுதல், மிக தீவிரமாக இருந்ததை கண்டு, அங்குள்ள கோவில் அதிகாரிகள் வியப்புற்றனர்.வேண்டுதலின் முடிவில், அந்த பெண்மணி, 'என் கவலைகளை போக்கினால், அதற்கு பிரதிபலனாக, தினமும், கோவிலில் விளக்கெரிய தேவையான நிதியை காணிக்கையாக வழங்குகிறேன்...' என்று, நேர்ந்துக் கொண்டாள்.சில தினங்களில், வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது. அவளது மனக்கவலை நீர்க்குமிழி போல, திடீரென மறைந்தும் போனது.உடனே, கடவுளிடம் நேர்ந்து கொண்டது போல, தினமும், கோவிலில் விளக்கெரிய தேவையான அளவு நிதியை எடுத்து வந்து, கோவில் அதிகாரியிடம், கொடுத்து விட்டுப் போனாள், அந்த பெண்மணி.இந்த விபரம், மாமன்னருக்கு தெரிவிக்கப்பட்டது.சற்றே யோசித்தான், ராஜராஜ சோழன். இந்த நிதியை வைத்து, எத்தனை நாட்களுக்கு, மாதங்களுக்கு அல்லது ஆண்டுகளுக்கு விளக்கு எரிய வைக்க முடியும் என்று மனதால் கணக்கிட்டான்.கோவிலில் நிரந்தரமாக விளக்கு எரிய வேண்டும். அதற்கு என்ன வழி என்று சிந்தித்தவனுக்கு, ஒரு அற்புதமான யோசனை பளிச்சிட்டது. உடனே, கோவில் அதிகாரியிடம், சில விபரங்களை தெரிவித்து, அதன்படி நடக்க உத்தரவிட்டான்.மன்னனின் உத்தரவின்படி, ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் ஒரு ஏழையை அழைத்து வருமாறு உத்தரவிட்டார், அதிகாரி.அப்படி அழைத்து வரப்பட்ட ஏழையிடம், 'கோவிலில் தினமும் விளக்கெரிய, ஆழாக்கு நெய் கொடுக்க வேண்டும் என்றால், உன்னிடம், எத்தனை ஆடுகள் இருக்க வேண்டும்...' என்று கேட்டார், அதிகாரி.கணக்கு போட்டு பார்த்த ஏழை, '96 ஆடுகளும், இனம் பெருக்க, ஒரு கிடாவும் இருந்தால், அதை மேய்த்து, தினமும் ஆழாக்கு நெய் தர முடியும். நானும், மூன்று வேளை தாராளமாக உண்டு, என் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும்...' என்றான்.மன்னனிடம், இந்த விபரம் தெரிவிக்கப்பட்டது. உடனே, அந்த பெண்மணி நன்கொடையாக அளித்த பணத்திலிருந்து, பரம ஏழைக்கு, 96 ஆடுகள் வழங்கப்பட்டன. அந்த ஆடுகளை மேய்த்து, வருமானத்தை பெருக்கிக் கொண்ட ஏழை, கோவிலுக்கு விளக்கெரிக்க தொடர்ந்து நெய் வழங்கி வந்ததோடு, அவன் வாழ்க்கையையும் வளப்படுத்திக் கொண்டான். மேலும், அவனது ஆடுகள் பல்கிப் பெருகின.நிர்வாகம் எப்போது, ஏழையிடமிருந்து, அந்த பொறுப்பை வேறொருவருக்கு மாற்ற நினைக்கிறதோ, அப்போது, அந்த ஏழை, கோவிலுக்கு திருப்பி தரவேண்டியது, 96 ஆடுகள் மட்டுமே. ஆனால், அவனிடம் அப்போது இருப்பது, நுாற்றுக்கணக்கான ஆடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி ஒரு அற்புதமான திட்டத்திற்கு தான், 'சாவாமூவா பேராடு' திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், பல ஏழைகள் பயனடைந்ததுடன், தங்கு தடையின்றி, கோவில் விளக்கும் எரிந்தது. இவ்வாறு, நெய் விளக்கு எரிக்கப்பட்டு வந்த நிலை மாறி, 1935ம் ஆண்டு முதல், மின்சார விளக்குகள், இக்கோவிலுக்குள் பிரவேசம் நடத்தியது. அதை செயல்படுத்தியவர், தமிழகத்தின் அப்போதைய அமைச்சராக இருந்த, பி.டி.ராஜன்.நடுத்தெரு நாராயணன்