உள்ளூர் செய்திகள்

திண்ணை!

'பெரியோரின் வாழ்வில் சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து: ராஜாஜி எழுதிய, 'வியாசர் விருந்து' எனும் நுால் வெளியீட்டு விழா, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெற்றது. ராஜாஜி, நுாலை பற்றி பேசி அமர, அடுத்து பேச வந்த, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், 'காஞ்சனத்தின் மூலம் (அரச பதவி) அழிந்தவன், துரியோதனன்; காமத்தின் மூலம் அழிந்தவன், ராவணன்.'காமத்தின் மூலமாக உலகம் என்னிலை பெறும். எத்தகையனும் எப்படி கெடுவான் என்பதை காட்டவே, ராமாயணம் நுாலாக வந்தது.'மண்ணாசையையும், பொண்ணாசையையும் வைத்து பங்காளிக்கு உரிய மரியாதை கொடுக்க மறுக்கும் காஞ்சனம், எப்படி சாம்ராஜ்யங்களை அழிக்கும் என்பதை காட்டவே, மகாபாரதம் வந்தது...' என பேசி முடித்ததும், பலத்த கைத்தட்டல் எழுந்தது.நர்மதா பதிப்பகம், எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன் எழுதிய, 'தன்னம்பிக்கை தருகிறது ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு' நுாலிலிருந்து: அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி நடிக்க வந்த போது நடந்த சம்பவம் இது: 'சிவாஜிராவ்... நீங்களே உங்களுக்கு ஒரு நல்ல பெயரை யோசனை பண்ணி சொல்லுங்க...' என்றார், இயக்குனர் கே.பாலசந்தர்.சிவாஜி ராவுக்கு, சரத் அல்லது தன் குடும்ப பெயரான, ஆர்.எஸ்.கெய்க்வாட் என, இரண்டில் ஒன்றை வைக்க ஆசை. நண்பர்களிடம் ஆலோசித்தபோது, யாருமே அந்த இரு பெயர்களையும் ஆதரிக்கவில்லை.இதனால் அடுத்த நாள், பாலசந்தரிடம், 'எனக்கு யோசனை வரலே சார்... நீங்களே என்னை ஆசிர்வாதம் பண்ணி, பேரு ஒன்றை வெச்சிடுங்க சார்...' என்றார்.'சரி... ஒனக்கு ரஜினிகாந்த்ன்னு பேர் வெச்சுருக்கேன். 'காந்த்' என்னோட ராசி பேர். என்னோட, மேஜர் சந்திரகாந்த் நாடகத்திலே வர்ற சந்திரகாந்துக்கு ரெண்டு பிள்ளைங்க. ஒரு கேரக்டர் ஸ்ரீகாந்த். அந்த பெயரில் ஏற்கனவே ஒரு, 'ஆர்டிஸ்ட்' இருக்கார்.'இன்னொரு கேரக்டர், ரஜினிகாந்த். இந்த பேரை யாருக்கு வைக்கலாம்ன்னு, ரொம்ப நாளா யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்போ நீ வந்துட்டே... ஒனக்கே அந்த பேரை வைச்சுடறேன்! ரஜினிகாந்த், என்ன திருப்திதானே...' என்றார்.சட்டென பாலசந்தரின் காலைத் தொட்டு வணங்கி, 'சார், நல்ல வில்லனா வரணும்ன்னு, என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க...' என வேண்டினார், ரஜினிகாந்த்'நல்ல வில்லனா... எதுக்குப்பா... நிச்சயமா, நீ ஒரு பெரிய நடிகனா வரத்தான் போற பார்...' என கூறினார், பாலசந்தர்.'கலைவாணர் என்.எஸ்.கே., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்' நுாலிலிருந்து: சென்னை, ராயப்பேட்டை, சண்முக முதலி தெருவிலிருந்த வீட்டை, கடைசி காலத்தில் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு.நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அதை விற்கலாம் என்ற பேச்சு வந்தது. வாயளவில் ஒரு தொகையும் பேசப்பட்டது; பணம் கை மாறவில்லை; பத்திரம் எதுவும் முடியவில்லை. அதற்குள், அதிக தொகைக்கு அவ்வீட்டை கேட்டார், ஒரு மார்வாடி. என்.எஸ்.கே.,வுக்கும் பணத் தேவை அதிகம் தான். சில நண்பர்கள், மார்வாடிக்கு விற்கும்படி துாண்டினர். ஆனால், மறுத்து விட்டார். 'நீண்ட ஆண்டுகளாக, நான் வசிக்கும் வீடு. இதை விற்ற பிறகு, எப்போதாவது இந்தப் பக்கம் வரும்போது, 'இது, நம்முடைய பழைய வீடு. ஒரு மார்வாடிக்கு போய் விட்டதே...' என்று நினைக்க நேர்ந்தால், மனம் வருத்தப்படும்.'அதே சமயம், இந்த வீடு, சிவாஜியின் கைக்கு போனால், நம் வீட்டில், தம்பி சிவாஜி இருக்கிறார் என்று நினைத்து, மனம் சந்தோஷப்படும். வீட்டுக்குள்ளே போகவும் மனம் கூசாது...' என்றார்.சொன்னது போலவே, அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, அந்த வீட்டை மார்வாடிக்கு விற்காமல், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே விற்றார் என்.எஸ்.கே.,நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !