உள்ளூர் செய்திகள்

திண்ணை!

இந்திய விடுதலைப் போராட்ட சமயம், அண்டை நாடான, தற்போதைய பாகிஸ்தானில் இருக்கும் லாகூர் கல்லுாரி ஒன்றில் சொற்பொழிவாற்ற, 'கவிக்குயில்' சரோஜினி நாயுடு சென்றார்.அவரை வரவேற்றுப் பேசிய கல்லுாரி மன்றத்தின் மாணவச் செயலர், இந்தியாவின் மிகுந்த செல்வாக்கு பெற்ற பெண் என்ற அர்த்தத்தில், 'ஷீ ஈஸ் தி பெஸ்ட் பப்ளிக் உமன் ஆப் இண்டியா' என்று, குறிப்பிட்டார்.இதற்கு தமிழில், 'இந்தியாவின் செல்வாக்குப் பெற்ற விலைமகள்' என்றும் பொருள்.சிலர் இப்படியும் அர்த்தம் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்த சரோஜினி நாயுடு, தான் பேசும்போது, 'மாணவ நண்பர் குறிப்பிட்டதைப் போல, நான் இந்தியாவின், 'பப்ளிக் உமன்' இல்லை.'ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி. அதில், கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் அர்த்தமே மாறி, விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதனால் தான், அந்த மொழிக்குச் சொந்தக்காரர்கள் இந்த மண்ணில் இருக்கக் கூடாது என்று, நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்...' என்றார்.சரோஜினி நாயுடுவின் இந்த சாதுரியமான விளக்கத்தை, மாணவர்கள் கை தட்டி ரசித்தனர்.இந்தியாவுக்கு, ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திரம் என்று முடிவானது. உடனே, 'எந்த நேரத்தில் விடுதலை பெற்றால் நாட்டுக்கு நல்லது...' என்று, கேள்வி எழுந்தது. நேரு உட்பட பல தலைவர்களின் நீண்ட நேர விவாதத்திற்கு பின், கோல்கட்டாவில் இருந்த சுவாமி மதனானந்த் என்பவரை அழைத்து கேட்க முடிவானது. 'ஆகஸ்ட் 15 பகலில் சுதந்திரம் பெற்றால் செல்வம், கீர்த்தி, இயற்கை வளம் எல்லாம் அழிந்து விடும். எனவே, நள்ளிரவு சுதந்திரம் கிடைத்தது என்று அறிவித்தால், நாட்டுக்கு நல்லது...' என்றார்.அதன்படியே, நள்ளிரவில் விடுதலை பிரகடனம் செய்யப்பட்டது.இந்தியாவில் சுதந்திரப் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த நேரம், ஆங்கிலேயரின் காட்டு தர்பாரால், மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து சுதந்திர காற்றை உயிர்ப்பித்தனர். அவர்களில் ஒருவர் தான், வாஞ்சிநாதன். சாதாரண குடும்பத்தில் பிறந்து, பட்டப்படிப்பு முடித்ததும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷ் துரையின் எல்லை மீறிய கொடுமைகளை கண்டு கொதித்தெழுந்தார், வாஞ்சிநாதன். புதுவையில், 1910ம் ஆண்டு, ஆங்கிலேயர்களை ஆயுத வழியில் தான் விரட்ட வேண்டும் என்று, வ.வே.சு.ஐயர், 'பாரத மாதா சங்கம்' என்ற அமைப்பை துவங்கி, போராளிகளுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று ஆயுதப் பயிற்சி பெற்றார். மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திலிருந்து வ.வே.சு.ஐயரால் வரவழைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை கொண்டு, ஜூன் 17, 1911ல், கொடைக்கானலில் இருந்த தன் குழந்தைகளை பார்க்க ரயிலில் வந்த, ஆஷ் துரையை, மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுத் தள்ளினார், வாஞ்சிநாதன். எனவே, மணியாச்சி ரயில் நிலையம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறி விட்டது.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !