உள்ளூர் செய்திகள்

திண்ணை!

எஸ்.கிருபாகரன் எழுதிய, 'ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... அம்மாவின் கதை!' நுாலிலிருந்து:படப்பிடிப்புக்காக கொடைக்கானலில் தங்கியிருந்தார், ஜெயலலிதா.அதைக் கேள்விப்பட்ட பெரும்புள்ளி ஒருவர், தன் கடைத் திறப்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வார் என, அவரிடம் அனுமதி பெறாமல், ஊரெல்லாம், 'போஸ்டர்' அடித்து ஒட்டினார்.பின்னர், ஜெயலலிதாவை அணுகிய போது, 'வர முடியாது...' என, மறுத்து விட்டார். 'வரவில்லை என்றால், எனக்கு அவமானம் ஆகிவிடும்... வேண்டுமானால், நீங்கள் கேட்கும் தொகையை தந்து விடுகிறேன்...' என, கெஞ்ச ஆரம்பித்தார், பெரும்புள்ளி.கொதித்துப் போன ஜெயலலிதா, 'அனுமதியின்றி பெயரை போட்டதோடு, பணம் தருவேன் என்கிறீர்கள். நடிகை என்றால் இளக்காரமா... உங்களைப் போன்றவர்களை நான் மதிப்பதே இல்லை.'எத்தனை லட்சம் கொடுத்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு நான் வரமாட்டேன். உங்கள் தவறுக்கு நீங்கள் அவமானப்படுவது தான், சிறந்த தண்டனை. மீறி வற்புறுத்தினால், காவல்துறைக்கு தகவல் சொல்வேன்...' என்றதும், ஓடிப்போனார், பெரும்புள்ளி.கடந்த 1972ல், பெங்களூருவில், ஒரு நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்ட ஜெயலலிதா, நிகழ்ச்சி நடத்துபவர்கள், மொழி வெறியாளர்கள் என்பது தெரிய வந்ததையடுத்து, அந்நிகழ்ச்சியை புறக்கணித்தார்.'கன்னடச்சியாக இருந்து கொண்டு எங்களை அவமானப்படுத்திய ஜெயலலிதாவை விடமாட்டோம்...' என, கொதித்தனர், அவர்கள்.அதுகுறித்து, பத்திரிகை ஒன்றின் கேள்விக்கு, 'நான் மைசூரில் பிறந்திருந்தாலும், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் தாய்மொழி தமிழ். நான் ஒரு தமிழச்சி...' என்று, பதிலளித்திருந்தார், ஜெயலலிதா.இது, அங்குள்ள கன்னட மொழி உணர்வாளர்களை உசுப்பி விட்டது. இந்த சமயத்தில், கங்கா கவுரி என்ற படத்தின் படப்பிடிப்புக்காக, மைசூர் பிரிமியர் ஸ்டுடியோவுக்கு சென்றிருந்தார், ஜெயலலிதா.விஷயமறிந்து, 'கன்னட சலுவாலியர்' என்ற அமைப்பைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர், ஆயுதங்களுடன் பிரிமியர் ஸ்டுடியோவை முற்றுகையிட்டு, தகராறில் ஈடுபட்டனர்.'கன்னடியர் என ஜெயலலிதா ஒப்புக் கொள்ளவில்லை எனில், யாரும் வெளியேற முடியாது...' என, மிரட்டினர்.பயந்து போன தயாரிப்பாளர் பந்துலு, பிரச்னையை சமாளிக்க, ஜெயலலிதாவை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார்.'மிரட்டுகின்றனர் என்பதற்காக, இல்லாத ஒன்றை சொல்ல மாட்டேன்...' என, தன் கருத்தில் உறுதியாக நின்றார், ஜெயலலிதா.ஜெயலலிதாவை சிலர், தாக்க முயன்றனர்.'என்ன நடந்தாலும் சரி, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்...' என, அப்போதும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மறுத்து விட்டார், ஜெயலலிதா.வேறு வழியின்றி, 'கன்னடத்திலாவது தங்கள் முன் பேசிக் காட்ட வேண்டும்...' என, போராட்டக்காரர்கள் இறங்கி வந்தனர்.அப்போதும், 'எனக்கு, எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும், அதை என் தேவைக்காக மட்டுமே பேசுவேன். என்னை மிரட்டி, பேச வைக்க முடியாது...' என, விடாப்பிடியாக நின்றார்.நிலைமை விபரீதமாவதை கண்டு, படக்குழுவைச் சேர்ந்த ஒருவர், தந்திரமாக வெளியேறி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், காவல்துறை அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, சென்னையிலிருந்த எம்.ஜி.ஆருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார், பந்துலு.உடனடியாக கர்நாடக முதல்வரை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., விஷயத்தைக் கூற, அதன்பிறகே சம்பவ இடத்துக்கு வந்தது, போலீஸ். போராட்டக்காரர்களை விரட்டியடித்தது. உயிருக்கே ஆபத்து உருவான இக்கட்டான நேரத்திலும், தன் துணிச்சலை வெளிப்படுத்திய ஜெயலலிதாவின் குணம், திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. - நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !