திண்ணை!
'இன்னும் சில சிந்தனைகள்' தொகுப்பில், மார்கழி உற்சவம் பற்றி, எழுத்தாளர் சுஜாதா எழுதியது:சிறு வயதில், ஸ்ரீரங்கத்திலேயே வளர்ந்த எனக்கு, மார்கழி மாதத்தில் நடைபெறும், பகல் பத்து, ராப்பத்து உற்சவங்களோ, வைகுண்ட ஏகாதசியன்று, அதிகாலையில், பரமபத வாசல் திறப்பதோ அத்தனை முக்கிய விழாக்களாக இருந்ததில்லை.காரணம், உள்ளூர் தானே எங்கே போகிறோம், சாவகாசமாக அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று, ஒவ்வொரு ஆண்டும் தள்ளிப் போட்டு விட்டு, இப்போது நினைத்துப் பார்த்தால் நம்ப மாட்டீர்கள்.அதிகாலையில், பரமபத வாசலை நான் கடந்ததே இல்லை. ஆயிரங்கால் மண்டபத்தில், உற்சவர் எழுந்தருளுவார். 'திருவாய் மொழி' சேவிப்பர். சன்னமாக கேட்கும். அதை, சில தினங்கள், சில சமயம் கேட்டிருக்கிறேன்.***நல்லி குப்புசாமி எழுதிய, 'வியாபாரத்தை பெருக்குவது எப்படி?' என்ற நுாலிலிருந்து:இந்த முடிவுக்கு நானாக வரவில்லை. அமெரிக்காவை சேர்ந்த, மோட்டார் மன்னன், 'போர்டு' தான் எனக்கு முன்னுதாரணமாக இருந்தார். போர்டு மோட்டார்கள் உழைப்புக்கும், உறுதிக்கும் உலகப் புகழ் பெற்றவை. அதற்கு போட்டியாக, 'ஜெனரல் மோட்டார்ஸ்' என்ற நிறுவனம் தோன்றியது. போர்டு கார்கள் அளவு ஜெனரல் மோட்டார்ஸ் கார்கள் உழைப்பது இல்லை. ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.போர்டு கார்களில், மெக்கானிக்கல் பிரேக் பொருத்தப்படுகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் கார்களில், ஐட்ராலிக் பிரேக் பொருத்தப்படுகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் கார்களில் உள்ள ஐட்ராலிக் பிரேக் எளிதானது; உடனடியாக செயல்படக் கூடியது. ஆனால், நம்பிக்கையானது அல்ல; திடீரென்று காலை வாரி விட்டு விடும்.ஆனால், போர்டு கார்களின் மெக்கானிகல் பிரேக், உறுதியானது. நிச்சயம் நம்பலாம்.இருந்தாலும், ஜெனரல் மோட்டார்ஸ் கார்களையே வாங்கினர், மக்கள். இதனால், ஜெனரல் மோட்டார்ஸ், விற்பனையில், முதல் இடம் பிடித்தது. போர்டு கார், விற்பனையில் பின்னுக்கு தள்ளப்பட்டது.ஹென்றி போர்டு, தரத்தில் உறுதியாக இருந்ததால், பிரேக்கை மாற்றி அமைக்க முன் வரவில்லை. பலன், விற்பனை மந்தம்.இது, எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. மலிவான விலையில், துணிகளை வாங்க வருகிறவர்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.வியாபாரம் என்பதே எல்லா தரப்பு வாடிக்கையாளர்களின் தேவையையும் நிறைவேற்றுவது தானே. எனவே, மற்ற ரக துணிகளையும் நாங்கள் விற்க ஆரம்பித்தோம். அவை, விலையில் குறைந்தவையே தவிர, தரத்தில் குறைந்தவை அல்ல. விற்பனையை பெருக்க, இதுவும் தேவையே என்று புரிந்தது!- நடுத்தெரு நாராயணன்