உள்ளூர் செய்திகள்

திண்ணை!

இந்திய மன்னர்களின் விசித்திரப் பழக்கங்களைப் பற்றி ஒரு பழைய ஆங்கில இதழில் படிக்கக் கிடைத்தது. அதில் கண்டவை:* ஹூமாயூன், அபினுக்கும், மதுவுக்கும் முழு அடிமை. அதனால், ஆட்சிப் பொறுப்புகளையே கவனிக்க முடியாமல் விட்டு விட்டார். ஜஹாங்கீரும் மதுவில் மூழ்கிக் கிடந்தார். இவர், பகலில், 14 டம்ளர் மதுவும், இரவில், ஆறு டம்ளர் மதுவும் அருந்தி, அந்த மயக்கத்தில் பிதற்றிக் கொண்டிருப்பார்.ஜஹாங்கீரின் மகனான, 'குர்ரம்' என்ற ஷாஜகான் மாத்திரம் இந்த தீய பழக்கத்தை அறவே ஒழித்தவர். தம் கண்ணெதிரே மதுவால் துன்புற்று மடிந்த தம் சகோதரர்கள் இருவருடைய அவல நிலையை நினைத்து, அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகாமல், விலகியே இருந்தார்.* கன்வா யுத்தம் முடிந்தபின் பாபருக்கு போர், லாகிரிப் பழக்கம், சுகபோகங்கள் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. தன் அரண்மனையில் இருந்த தங்க பாத்திரங்களையும், விலை மிகுந்த பொருட்களையும் பக்கிரிகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் பங்கிடச் செய்தான்.* சிக்கந்தர் லோடிக்கு தனியாக விருந்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். பிறருடன் சேர்ந்து சாப்பிடுவது தம் கவுரவத்துக்கு குறைவு என்பது அவருடைய கருத்து. சிறிது காலத்துக்கு பின் அவர் தம் கருத்தை மாற்றிக் கொண்டார். நகரப் பிரமுகர்களை அவர் விருந்துக்கு கூப்பிடுவார். வேலைக்காரர் உணவு வகைகளை பரிமாறிய உடன், லோடி, தம் உணவை அவசர, அவசரமாக சாப்பிடுவார். மற்ற விருந்தாளிகளை சாப்பிட சொல்ல மாட்டார். தாம் சாப்பிட்டு முடித்த பின், வந்துள்ள பிரமுகர்களிடம் அவரவர்களின் சாப்பாட்டை வீட்டுக்கு கொண்டு போய் ஆற அமர சாப்பிடும்படி சொல்வார்.* அவுரங்கசீப் எல்லா சுக போகங்களையும் வெறுத்தவர். அவருடைய கோப தாபங்களாலும், கடுமையான நடத்தைகளாலும் ராஜ தர்பார் களையிழந்து போயிருந்தது. அவருக்கு சங்கீதம் என்றாலே ஆகாது. அரண்மனை பாடகர்கள் எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டார். ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாலை நேர பிரார்த்தனைக்காக அவுரங்கசீப் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில், பெருங்குரலில் சங்கீத வித்வான்கள் பலர் அழுது கொண்டே அவர் எதிரே வந்தனர். அவர்களுடைய துக்கத்துக்கு காரணம் என்ன என்று அவர் விசாரித்தார்.மன்னருடைய உத்தரவால் தங்களுடைய சங்கீதம் செத்து விட்டதாகவும், அதை புதைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினர்.'அப்படியா... நன்றாக ஆழப் புதையுங்கள்; உயிர் பெற்று வெளியே வந்துவிடப் போகிறது...' என்று கூறிவிட்டுப் போனார் அவுரங்கசீப்.***திருவாரூர் கோவிலில் தியாகேசர் தாபிக்கப் பட்டிருப்பது போல, தஞ்சை பெருவுடையார் கோவிலிலும் தியாகேசர் தாபிக்கப்பட்டிருக்கிறார். திருவாரூர் தியாகராஜாவுக்கு விடங்கர் என்று பெயர் உள்ளது போல, தஞ்சை யிலும் விடங்கர் என்று பெயர் உள்ளது. திருவாரூரில் தியாகராஜாவுக்குரியது அஜபா நடனம், தஞ்சையிலும் அதுதான். திருவாரூர் கோவிலில் நடைபெறுவது போல, தஞ்சையிலும் வசந்தோற்சவம், 18 நாட்கள். திருவாரூரில் தியாகராஜாவுக்கு உரிய சுத்த மத்தளம், எக்காளம் தஞ்சையிலும் உள்ளது. திருவாரூரில் தியாகராஜா எந்தெந்த நாட்களில் எவ்வாறு புறப்படுகிறாரோ, அவ்விதமே தஞ்சையிலும் நடக்கிறது. திருவாரூரில் தியாகராஜாவுக்கு பூஜை நடந்தபின் மூல லிங்கத்துக்கு பூஜை; தஞ்சையிலும் அவ்விதமே. திருவாரூரில் உற்சவத்தில் குறவஞ்சி நாடகம் நடைபெறும். தஞ்சையிலும் குறவஞ்சி நாடகம் உற்சவ காலத்தில் நடைபெற்று வருகிறது. (திருவாரூரில் சில காலமாக குறவஞ்சி நடைபெறுவது நழுவி இருப்பதாகத் தெரிகிறது). திருவாரூரில் சுவாமி புறப்படும் போது, சுந்தரமூர்த்தி சுவாமிகள் விக்கிரகத்தை முன் கொண்டு போவது வழக்கம். ஆனால், ராஜேந்திர சோழன் காலத்தில், அந்த ஸ்தானத்தில் தன் பிதாவாகிய ராஜராஜனது விக்கிரகத்தை கொண்டு போகும்படி ஏற்பாடு செய்தான். அது, இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.— கே.எஸ்.சீனிவாச பிள்ளையின், 'தமிழ் வரலாறு' நூலிலிருந்து.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !