அரசியல் தகுதி தேர்வு!
குளித்து, உள்ளாடைகளான பட்டாப்பட்டி டவுசரும், கை வைத்த பனியனும் அணிந்து கொண்டான், செந்தமிழன். உள்ளாடைகளின் மேல், ஒட்டிக்கோ, கட்டிக்கோ வேட்டியும், மினிஸ்டர் ஒயிட் சட்டையும் உடுத்தினான்.முரட்டு தலைக்கேசத்தை வாரி, சாமி கும்பிட்டு திருநீறு பூசி, அரை பாட்டில் சென்ட்டை உடல் மேல் பீய்ச்சிக் கொண்டான்.மகன் தகுதித்தேர்வுக்கு தயாராவதை பார்த்துக் கொண்டிருந்தார், பொன்னம்பலம். அவர், மஞ்சள் கட்சியில், 40 ஆண்டுகளாக இருந்து, குப்பை கொட்டியவர். பெரிய பதவிகள் எதையும் வகித்ததில்லை. ஒருமுறை, கவுன்சிலர் தேர்தலில் நின்று, தோற்றார்.''செந்தமிழா.'' ''நைனா.''''வெகுஜனம் மற்றும் மீடியா வற்புறுத்தலுக்காக, எம்.எல்.ஏ.,களுக்கும், எம்.பி.,களுக்கும், நாடு தழுவிய தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தி உள்ளது, மத்திய அரசு.''எம்.எல்.ஏ.,களுக்கான தகுதித்தேர்வு எழுதுபவர்கள், இளங்கலை சரித்திரம் அல்லது இளங்கலை அரசியல் விஞ்ஞானம் படித்து முடித்திருக்க வேண்டும். நீ, எம்.எல்.ஏ.,களுக்கான தகுதித்தேர்வு எழுதப் போகிறாய்.''''ஆம் நைனா.''''நல்லா படிச்சிருக்கியா?''''ஓரளவு.''''பிட்கிட் எடுத்துட்டு போறியா?''''எடுத்துட்டு போனா பிடிச்சிருவாங்க.''''மொத்தம் எத்தனை மார்க்குக்கு கேள்விகள் கேட்பாங்க, எத்தனை மார்க் எடுத்தா பாஸ்?''''மொத்தம், 150 கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் ரெண்டு மார்க். மொத்தம், 300 மார்க். அதில் நாம, 120 மார்க் எடுத்தா பாஸ்.''''சரிடா செல்லம்... 200 மார்க் எடுத்து, பாசாகு.''''நீ வேற... 50 மார்க் எடுப்பேனான்னே சந்தேகம்.''இரண்டு சக்கர வாகனத்தில் தேர்வு மையத்துக்கு சீறிப் பாய்ந்தான். தேர்வு மைய வாசலில் நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் குழுமியிருந்தனர். மாணவ - மாணவியரை, சீருடை அணிந்த நால்வர் சோதித்துக் கொண்டிருந்தனர்.''உன் ஹால் டிக்கெட்டை எடு.''நீட்டினான், செந்தமிழன்.''உன் பேரு உண்மையிலேயே செந்தமிழனா அல்லது வேறு யாருக்காவது, 'பிராக்சியா' பரிட்சை எழுத வந்திருக்கியா?''''போட்டோவை பாருங்க... வடசென்னை மூஞ்சி சார், இது.''குருவிக்கூடு போலிருந்த தலைகேசத்துக்குள் கை விட்டு துழாவினார், சீருடை பணியாளர்.''என்ன சார் தேடுறீங்க?''''பிட்கிட் ஒளிச்சு வச்சிருக்கியான்னு பார்க்கறேன்.''''இருந்தா எடுத்து வச்சுக்கங்க.''''இதென்னடா காதுல கடுக்கன், மணிக்கட்டுல, 10 கலர்ல கயிறுகள் கட்டியிருக்க?''''கடுக்கன், அம்மா போட்டது; கயிறுகள், தகுதித்தேர்வுல பாஸாக வேண்டி கட்டியிருக்கேன்.''''கழற்றி வீசுடா.''அழுதபடியே கழற்றினான். செந்தமிழனின் வேட்டியை உருவினார், சீருடை பணியாளர். ''என்னடா பட்டாபட்டி டவுசர் போட்டிருக்க, அதில பிட்கிட் வச்சிருக்கியா?''உடல் முழுவதும் துழாவி, உதடு பிதுக்கினார். ''எதுவுமில்லை... பரிட்சை எழுத நீ ஹாலுக்குள் போடா.''தனக்குரிய இருக்கையில் போய் அமர்ந்தான், செந்தமிழன்.ஓ.எம்.ஆர்., கேள்வித்தாள் வந்தது, வாசித்தான். * எம்.எல்.ஏ., ஒருவர் கட்சி மாற, பொருத்தமான தொகை எவ்வளவு?அ) பத்து கோடிஆ) ஐந்து கோடிஇ) 15 கோடிஈ) அது சூழ்நிலையை பொறுத்தது* ஆளுக்கட்சி எம்.எல்.ஏ., எப்படி இருக்க வேண்டும்?அ) முதல்வர் பேசும்போது, மேஜையை தட்ட வேண்டும்ஆ) முக்கியமான விஷயம் விவாதிக்கப்படும் போது, உட்கார்ந்தபடியே துாங்க வேண்டும்இ) மொபைல் போனில் நீலப் படம் பார்க்க வேண்டும்ஈ) அனைத்தும்* எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., எப்படி இருக்க வேண்டும்?அ) ஆளும் கட்சி எதாவது சட்டம் நிறைவேற்றினால், சட்ட நகலை கிழித்து போட வேண்டும்ஆ) அடிக்கடி வெளிநடப்பு செய்து, கேன்டினில் முட்டை போண்டா தின்ன வேண்டும்இ) சபாநாயகருடன் முரண்டி, சபை பாதுகாவலர்களால் குண்டுக்கட்டாய் சபைக்கு வெளியே துாக்கி போடபடவேண்டும்ஈ) அனைத்தும்* எம்.எல்.ஏ.,க்களுக்கு எது அழகு?அ) ஜெயித்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறை கூட தொகுதி பக்கம் எட்டி பார்க்க கூடாதுஆ) நுாறு வார்த்தைகள் பேசினால், அதில், 80 கெட்ட வார்த்தைகள் இருக்க வேண்டும்இ) எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,வுடன் கூட்டணி வைத்து, பினாமி பெயரில், 'கான்டிராக்ட்' எடுக்க வேண்டும்ஈ) அனைத்தும்* தொடர்ந்து எம்.எல்.ஏ., பதவியை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்அ) ஜாதி அரசியல் பண்ண வேண்டும்ஆ) கோஷ்டி அரசியல் பண்ண வேண்டும்இ) மண்ணின் மைந்தர் அரசியல் பண்ண வேண்டும்ஈ) அனைத்தும்* எம்.எல்.ஏ.,க்களுக்கான பிற தகுதிகள் என்னென்ன?அ) குத்தாட்டம் போட தெரிய வேண்டும்ஆ) வீட்டில், தெலுங்கு பேசுவதையும், டில்லியில், ஹிந்தி பேசுவதையும் மறைக்க வேண்டும்இ) மக்கள் நலனை மைக்ரோ அளவும் சிந்திக்காத ஜந்துவாக உலவ வேண்டும்ஈ) அனைத்தும்* குடும்ப அரசியல் என்றால் என்ன?அ) மனைவியை நகராட்சி சேர்மனாக்கி, மகனை சக எம்.எல்.ஏ.,வாக்கி, தம்பியை மாவட்ட செயலராக்கி, மச்சினனை, நிழல் எம்.எல்.ஏ.,வாக்கி, பதவி இல்லாத குடும்ப அங்கத்தினர்களே கிடையாத நிலையை உருவாக்க வேண்டும்ஆ) கட்சியை கார்ப்பரேட் நிறுவனம் ஆக்குவதுஇ) தானும் குடும்ப அரசியல் பண்ணிக் கொண்டே, குடும்ப அரசியல் பண்ணும் பிறரை சபித்துக் கொண்டே இருப்பதுஈ) அனைத்தும்* மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பது யாருக்கு நல்லது?அ) அரசியல்வாதிகளுக்குஆ) இலவசங்களை தயாரித்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்குஇ) இடைத்தரகர்களுக்குஈ) கல்வியையும், மருத்துவத்தையும் மட்டும் இலவசமாய் வழங்கினால் மக்களுக்கு நல்லது* இந்திய தேசியக்கொடியில் ஆரஞ்சு நிறம் கீழே வருமா, பச்சை நிறம் கீழே வருமா?அ)ஆரஞ்சு நிறமும், பச்சை நிறமும் நம் தேசியக்கொடியில் உள்ளதா என்ன?ஆ) என் கட்சி கொடி பற்றியே எனக்கு தெரியாதுஇ) தேசியக் கொடி என்றால் என்ன?ஈ) இந்தக் கேள்வி இந்திய அரசியல்வாதிகளுக்கு தேவையில்லாத ஒன்று* 'இன்கம்டாக்ஸ் ரெய்டு' என்றால் என்ன?அ) மத்திய அரசு காட்டும் தற்காலிக பூச்சாண்டிஆ) 'ரெய்டை' எதிர்த்து கோஷம் போடும் தொண்டர்களுக்கான உணவு திருவிழாஇ) அரசியல்வாதி ஊழலில் டாக்டரேட் பெற்றுவிட்டதற்கான விருதுஈ) இன்கம்டாக்ஸ் அதிகாரிகளின் சோம்பேறிதனம் முறிக்க, ஒரு செயல் திட்டம்* ஜனநாயகம் என்றால் என்ன?அ) குழுகுழுவாய் கட்சி அமைத்து, ஓட்டு அரசியல் பண்ணி, அதிகாரத்தை கைப்பற்றி மக்கள் பணத்தை திருடுவதுஆ) மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக் கொள்வதுஇ) வாய் சவடாலுக்கு மயங்கி இடுப்பு கோமணத்தை கழற்றி தருவதுஈ) ஒழுங்குபடுத்தினால் ஜனநாயகம் சிறப்பானதே* அடுத்த, 50 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கும்?அ) யாருக்கு தெரியும்?ஆ) மக்களின் புலம்பலும் அரசியல்வாதிகளின் சுரண்டலும் தொடரும்இ) இன்னொரு எத்தியோப்பியாஈ) பிரிட்டிஷாரிடம் திருப்பி ஒப்படைத்து விடும் நிலை ஏற்படும்கேள்விகள் தொடர்ந்தன. அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தான் செந்தமிழன். ஓ.எம்.ஆர்., தாளை கொடுத்துவிட்டு, சீட்டியடித்தபடி தேர்வு மையத்திலிருந்து வெளியேறினான்.-அரசியல்வாதிகளுக்கான, 'நீட்' தேர்வின் முடிவுகள் வெளியாகின. 300க்கு 290 மார்க் எடுத்து முதலிடம் பெற்றான், செந்தமிழன். மொபைல் போன் சிணுங்கியது, எடுத்து காதில் இணைத்தான்.''நான், வயலட் கட்சி தலைவர் பேசுறேன், செந்தமிழன். அரசியல்வாதிகளுக்கான, 'நீட்' தேர்வில், நீ எழுதிய விடைத்தாளை பார்த்தேன். அசத்தி விட்டாய். நீ இப்ப எந்த கட்சியில் இருக்கிறாய்?''''வானவில் கட்சியில் இருக்கிறேன்.''''பேசாமல் என் கட்சியில் வந்து சேர்ந்துவிடு. வரும் இடைத்தேர்லில் உன்னை வேட்பாளராக நிறுத்தி, வெற்றி பெற வைக்கிறேன்.''''அப்பாவிடம் கலந்தாலோசித்து விட்டு கூறுகிறேன், சார்!''''வேற உனக்கு எதாவது தேவைகள் இருந்தால் தயங்காமல் கேள், தருகிறேன்.''''நன்றி தலைவரே.''மக்களின் ரத்தத்ததை அதிகாரப்பூர்வமாய் உறிஞ்ச, ஒரு அட்டைப்பூச்சி தயார்.ஆர்னிகா நாசர்