அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மா அவர்களுக்கு,எனக்கு வயது 49; திருமணமாகி கல்லூரி யில் படிக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். அழகான குடும்பம்; அளவான வருமானம்; நிறைவான வாழ்க்கை. ஐந்து ஆண்டுகளுக்கு முன், விவாகாரத்து பெற்ற, ஒரு பையனுக்கு தாயான, 35 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், அந்தப் பெண் மீது அனுதாபம் ஏற்பட்டு, காலம் முழுவதும் அவளை கண் கலங்காமல் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானித்து, அதைக் கடைபிடித்து வருகிறேன். இது, என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தெரியும் என்றாலும், நான் ஏதாவது ஒன்று செய்தால், அதில் நியாயம் இருக்கும் என்று கருதி, அதை பெரிதுபடுத்தாமல், 'எதுவானாலும் வெளியில் இருக்கட்டும்; வீடு வரை கொண்டு வர வேண்டாம்...' என்பதில் மட்டும் உறுதியாக உள்ளனர்.அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டது எந்த அளவுக்கு தவறோ, அதைவிடத் தவறானது அவளை விட்டு விலகுவது என்ற எண்ணம், தற்போது ஏற்பட்டுள்ளது. அம்மா, நான் பழகிவரும் பெண், மிகுந்த காம வேட்கை கொண்டவளாக இருக்கிறாள். உறவில் முழு திருப்தி ஏற்படும் அளவுக்கு செயல்படுவேன். அவளும், 'நான்தான் உலகில் முழு சுகமும் பெறுகிற பெண்ணாக இருப்பேன்...' என்று சந்தோஷமாக கூறுவாள். இருப்பினும், நாங்கள் இருவரும் வெளியில் செல்லும் போது, ஆண்களை உற்றுப் பார்ப்பது, குறிப்பாக, சிவப்பாய், உயரமாய் இருப்போரையும், வடமாநில ஆண்களையும், மோகத்துடன் பார்ப்பாள். இதை, நான் பலமுறை நாசுக்காக தெரிவித்து, கண்டித்திருக்கிறேன். அப்போதெல்லாம், என் உறவு அற்று போய்விடுமோ என்ற பயத்தில், எந்த இடமாக இருந்தாலும், என் காலில் விழுந்து விடுவாள்.ஆனால், தன் தவறுகளை திருத்திக்கொள்ள வில்லை. என்னுடன் பழக்கம் ஏற்படாத காலத்தில், சுய இன்பம் அனுபவித்து வந்திருக்கிறாள். தற்போது, அவளின் குரல், ஆண் குரல் போல் மாறி வருகிறது. அழகு நிலையம் வைத்திருக்கும் அவள், தன்னிடம் ஒப்பனை செய்துகொள்ள வரும் பெண்களின் மார்பகத்தை கையால் பிடிக்க வேண்டும் போல் தோன்றுகிறது என்று கூறுவாள். அண்டை வீட்டில் நடக்கும் ரகசிய உறவுகளை மறைந்திருந்து பார்க்கும் பழக்கம் அவளுக்கு இருக்கிறது. இதையெல்லாம் அவள் உளறிக்கொட்டி, பின், அவள் பேசியதை, அவளே புரிந்து கொள்ள முடியாமல் திண்டாடுவாள். எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், செருப்பை எடுத்து தலையிலும், வயிற்றிலும் அடித்து, தன்னை வருத்திக் கொள்வாள். நல்ல செய்திகளை காது கொடுத்து கேட்பதில் ஆர்வம் காட்டாமல், உடலுறவு சம்பந்தப்பட்ட ஆபாச வார்த்தைகளுக்கு எளிதில் மயங்கி விடுவாள்.நான் ஒரு விளையாட்டு வீரன் என்பதால், என் உடல் வனப்போடும், வலிமையோடும் இருக்கும். அவள் குள்ளமானவள்; நிறமும் குறைவு. சற்று பருத்த தேகமும், கவர்ச்சியும் உடையவள். ஆனால், என் மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்று நினைக்கும்படி, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், என்னை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, உப்பு சுற்றி, திருஷ்டி கழிப்பாள். அவள்மீது நான் விட முடியாத விருப்பம் வைத்திருக்கிறேன். அவளது விரும்பத்தகாத நடவடிக்கைகளை சரிசெய்து, நிம்மதியாக வாழ்வது எப்படி என்பதை விளக்குங்கள் அம்மா.குறிப்பு: நான் அவளுக்கும், அவள் குடும்பத்திற்கும் எல்லா வகையிலும் பயன்பட்டு வருகிறேன் என்பதை, அவளே என்னிடம் கூறியுள்ளாள். அவளுக்கு இந்த உலகில் இருக்கும் ஒரே ஆறுதல் நான் மட்டுமே!— இப்படிக்கு,தங்களின் உண்மை மகன்அன்புள்ள சகோதரருக்கு,நிம்போமேனியாக் கள்ளக்காதலியின், செக்ஸ் சபலங்களை நீக்கித்தர வழிவகை கேட்டுள்ளீர்கள். கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் கணவனை, வெளிப்படையாக கண்டிக்காத மனைவி; கல்லூரியில் படிக்கும் மகன் மற்றும் மகள். நிறைவான வாழ்க்கை வாழும் உங்களுக்கு, எதற்கு இந்தக் கள்ளத் தொடர்பு?அதீத உண்மை மிக்கவர் தாங்கள் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளது. அதனால், ஒரு விருது பெறும் விருப்பத்துடன், திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபட்டு வருகிறீர்கள்.தவறான உறவில் ஈடுபடும் பெண், எப்படி ஒழுக்கமானவளாக இருப்பாள்? உங்களுக்கு அவள் முழு விசுவாசமாய் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது, கடைந்தெடுத்த முட்டாள்தனம்.உங்களுடன் இருக்கும்போது, 'உலகத்திலேயே முழுசுகமும் பெறுகிற பெண் நானே...' என, அவள் கூறுவது, உங்கள் ஈகோவை திருப்திபடுத்த! வயோதிக ஆண்களிடம் தாம்பத்யம் செய்யும் இளம் பெண்கள் மிழற்றும் வழக்கமான, 'டயலாக்' தான் இது. பொது இடங்களில் அவள் உங்கள் கால்களில் விழுவதும், பவுர்ணமி கடற்கரையில் உங்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடுவதும், உங்களால் கிடைக்கும் பொருளாதார பாதுகாப்பு கைவிட்டு போய்விடக்கூடாது என்கிற சுயநலத்தால் தான்!இந்த தவறான உறவு, பாதுகாப்பாய் செல்லும் உங்கள் குடும்ப வாகனத்தை தலைகீழாய் கவிழ்த்து விடும். உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்கி புழுங்கி உங்கள் மனைவி மனநோயாளி ஆகலாம். அப்பாவே தைரியமாய் தப்பு செய்யும்போது, நாமும் தப்பு செய்தால் என்ன என்கிற மனோபாவம் உங்கள் மகள் மற்றும் மகனுக்கு வர வாய்ப்பு உள்ளது. உங்கள் சபலப்பெண், உங்களின் சொத்துகள் மீது கண் வைத்து, உங்களை, உங்களது குடும்பத்தாரிடமிருந்து பிரிக்க முயற்சிக்கவோ, சொத்துகளை அவள் மீது எழுதி வைக்க சொல்லியோ தூபம் போடலாம். உங்களுடனான உறவுக்கு அங்கீகாரம் வேண்டி அவளை, நீங்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவாள்.உங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், தன் தலையிலும், வயிற்றிலும் செருப்பால் அடித்துக் கொள்ளும் அவள், ஒரு, 'ஹிஸ்டீரி'கலான பெண்ணாக தெரிகிறாள். இவ்வகை பெண்கள் படு ஆபத்தானவர்கள். தன் உறவில் எதாவது பிரச்னை என்றால், கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள். உங்கள் சபலத்துணையிடம் லெஸ்பியன் பழக்கமும் இருக்கக்கூடும் என சந்தேகம் எழுகிறது.இந்த பெண்ணிடம் உங்கள் தொடர்பு நீடித்தால், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்; ஊரார் கைகொட்டி சிரிப்பர்.உங்களைவிட பணக்கார பார்ட்டி கிடைத்தால், அங்கு போய் ஒட்டிக் கொள்வாள். ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் தொடர்பு வைத்து, உங்களின் நிம்மதியை கெடுப்பாள்.இனி, நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா சகோதரா...வயிறு நிறைய வீட்டில் சாப்பிட்டு விட்டு, தெருவில் கையேந்துவதை உடனடியாக நிறுத்துங்கள். காமவேட்கையை மட்டுப்படுத்தி, உங்கள் வீரபிரதாபத்தை மனைவியிடம் காட்டுங்கள். சபல பெண்ணின் தொடர்பை நைச்சியமாக கத்தரித்து விடுங்கள். சைவத்துக்கு மாறுங்கள். ஆயிரம் ஏக்கர் ஆப்பிள் தோட்டத்திற்கு சொந்தக்காரராய் இருந்தாலும், பசிக்கு ஒன்றிரண்டு ஆப்பிள்தான் தின்ன முடியும். மனைவி, மக்களுடன் மனம் விட்டு பேசி உறவை பலப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று புதிதாய் பிறந்தோம் என, பழையவைகளை தலை முழுகுங்கள்.— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.