அதிர்ச்சி வைத்தியம்!
'சரவணா... தனியா போயிடுவேல்ல?'என்றனர் நண்பர்கள்.''போயிடுவேன்...'' என்று, அவர்களிடமிருந்து விடைபெற்ற சரவணனுக்கு, மனைவி சுகன்யாவின் ஞாபகம் வந்து, போதை பாதியாக குறைந்தது.அவர்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரு பெண் குழந்தை உண்டு. எப்போதாவது ஒரு முறை என ஆரம்பித்த குடிப் பழக்கம், மாதம் ஒரு முறை என மாறி, இப்போது, வாரம் ஒருமுறை என்று ஆகிவிட்டது.இதுகுறித்து மனைவி கண்டிக்கும் போதெல்லாம்,' நான் என்ன லோக்கல் குடிகாரன் மாதிரி கண்ட கண்ட சரக்கை குடிச்சிட்டு, ரோட்ல விழுந்து கிடக்கிறனா இல்ல எல்லார்கிட்டயும் சண்டை போடுறனா...' என, விதண்டாவாதம் பேசுவான்.'நீங்க ஆயிரம் சமாதானம் சொன்னாலும், குடிக்கிறது சரிங்கிறத நான் ஒத்துக்க மாட்டேன்; நமக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு. நாளைக்கு அதுக்கு வர்ற புருஷன், இப்ப நீங்க சொல்ற மாதிரி சொன்னா ஒத்துப்பீங்களா...' என்பாள் சுகன்யா கோபத்துடன்!பதில் பேசாமல் மவுனமாக இருப்பான் சரவணன்.ஒரு மாதத்திற்கு முன், இப்படித்தான் சரவணன் குடித்து விட்டு வந்த போது, 'இனிமே குடிச்சிட்டு வந்தீங்க, அப்பறம், என்னோட நடவடிக்கையும் கடுமையாக இருக்கும்...' என்று எச்சரித்தாள் சுகன்யா.இந்நிலையில், இன்று நண்பனின் பிறந்தநாள், 'ட்ரீட்' என்ற பெயரில், நன்றாக குடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் சரவணனுக்கு, மனைவியை நினைத்து லேசாக பயம் ஏற்பட்டது.தெருமுனையில் இருந்த பெட்டிக்கடையில் பாக்கு பொட்டலம் வாங்கி, வாயில் போட்டு, 'வீட்டிற்கு போனதும், சீக்கிரமே படுத்துடணும்...' என நினைத்தவனுக்கு, வழக்கமாக சிறிது நேரம் லேட்டானாலே பல முறை போன் செய்யும் மனைவி, இன்று இரவு, 9:00 மணியை தாண்டியிருந்தும், தன்னை ஒருமுறை கூட போனில் கூப்பிடாதது ஆச்சரியமாக இருந்தது.வீட்டு வாசலை நெருங்கியதும், உடம்பை உலுக்கிக் கொண்டவன், மெதுவாக கதவைத் தட்டினான். கதவு திறக்கப்படவில்லை என்றதும், ''சுகன்யா...'' எனக் கூப்பிட்டு, வேகமாக கதவைத் தட்டினான். அப்போதும் கதவு திறக்கவில்லை.'என்ன இது! ராத்திரி, 10:00௦௦ மணி வரை சீரியல் பாப்பாளே... சத்தத்தையே காணோமே...' என பயந்து, ''சுகி... சுகி... ரேஷ்மா... ரேஷ்மா...'' என, மனைவியையும், மகளையும் சத்தம் போட்டு கூப்பிட்டான்; பதில் இல்லை.தொடர்ந்து பத்து நிமிடங்கள் தட்டியும், கத்தியும் பார்த்தான்; கதவு திறக்கப்படவில்லை. சாலையில் செல்வோர் தான் அவனை வேடிக்கை பார்த்தபடி சென்றனர். 'எங்கே போனா... பிள்ளைகளோட வெளியில போயிருந்தாக் கூட, வீடு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருக்குமே... ஒரு வேளை இருவரும் நன்றாக தூங்குகின்றனரோ...' என நினைத்தவாறு நின்றிருந்த போது, பக்கத்து வீட்டு ராமநாதன் வந்தார்.''என்ன சார்... ரொம்ப நேரமா தட்டறீங்களா?'' என்று கேட்டார்.''ஆமா சார்,'' வாய் பொத்தி மெதுவாக சொன்னான். வந்ததற்கு அவரும் பலமுறை கதவை தட்டினார்; எந்த பலனும் இல்லை.மனைவியின் மொபைலுக்கு போன் செய்ததில், 'உங்கள் அழைப்பை ஏற்கவில்லை...' என்ற பதிலே வந்தது. பின், ஏதோ யோசித்தவாறே தன் மாமனாருக்கு போன் செய்தான்.''மாமா... சுகன்யாகிட்ட கொஞ்சம் போன் போட்டு பேசுங்க; நான் என் வீட்டு வாசல்ல நிக்கறேன்,'' என்றான்.அடுத்த சில நிமிடங்களில், ஜன்னல் கதவு மட்டும் திறந்தது. ஏதோ பிரச்னை என்று புரிந்து கொண்ட பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டிற்கு சென்று விட்டார். ''உங்களுக்கு வெக்கமா இல்ல... பார்ல தண்ணி அடிச்சீங்க சரி, இப்ப எதுக்கு எங்க அப்பாவுக்கு போன் செய்தீங்க?'' என, கோபமாக கேட்டாள் சுகன்யா.'நான் தண்ணியடிச்சது இவளுக்கு எப்படி தெரியும்... யார் சொல்லியிருப்பாங்க....' என்று நினைத்தான்.''என்ன முழிக்கறீங்க... குடிச்சீங்களா, இல்லயா?'' அவளது கேள்வியில் அனலடித்தது.'ஆமாம்' என்பது போல் மெதுவாக தலையாட்டினான்.''எங்க அப்பா, 'ஏம்மா... உனக்கும் மாப்பிள்ளைக்கும் சண்டையா'ன்னு கேட்கிறாரு... அவருகிட்ட சொல்லிட்டேன்... 'உங்க மாப்ள குடிச்சிருக்காரு... 10 வருஷமா சொல்லி பாத்துட்டேன்; திருந்தல. இனி கடுமையா நடந்துக்கிட்டாத்தான் திருந்துவாரு'ன்னு! அதனால, இன்னிக்கு கதவ திறக்கப் போறதில்ல; வெளியிலேயே கிடங்க,'' என்று சொல்லி, ஜன்னல் கதவை பட்டென்று சாத்தினாள்.சரவணனுக்கு போதை முற்றிலுமாக போய் விட்டது. 'சே... நாலு சுவத்துக்குள்ள பேச வேண்டியத தெருவுக்கு கொண்டு வந்துட்டாளே...' என, மனதிற்குள் மருகியவன், 'இது என்ன உலக மகா குற்றமா... தெருவில் தள்ளி கதவை மூட! புருஷனை கண்டிக்கலாம்; அதுக்காக இப்படியா அவமானப்படுத்துவது...' என எண்ணியவனுக்கு, 'இதை சாதாரணமா விடக்கூடாது... நாம யார்ங்கிறத காட்டியே ஆகணும். என்ன செய்யலாம்... கதவை உடைக்கலாமா... ம்கூம் உறவினர்களை அழைக்கலாம்; வேணாம்... நாளைக்கே அவங்க சொல்லிக் காட்டுவாங்க. 'கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கலாமா... அதுவும் உறவினர்களுக்கு தெரிந்து, பின், குடிச்சது தெரிய வருமே... ச்சே... இப்ப என்ன செய்றது... இரவு முழுக்க வாட்ச்மேன் வேலை பாக்கணுமா...' என்று வெறுப்போடு படியில் அமர்ந்தான்.என்ன பிரச்னையோ என எண்ணி, ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்த மாமனார், வாசலில் அமர்ந்திருந்த சரவணனைப் பார்த்து, ''மாப்ளே...வீட்டுக்கு வாங்க,'' என, பவ்யமாக கூப்பிட்டார்.''மாமா... முடிஞ்சா உங்க பொண்ணை கதவ திறக்கச் சொல்லுங்க; இல்ல கிளம்புங்க,'' என்றான் கறாராக!''அவ கிட்ட சொன்னேன் மறுத்துட்டா,'' என்று சொன்னவர், சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பினார்.பதினோரு மணியளவில், சரவணனின் தங்கை கல்யாணி ஆட்டோவில் வந்தாள். துணுக்குற்ற சரவணன், '' நீ எங்க இங்க?'' என, கோபப்பட்டான்.''அண்ணே... அண்ணியோட அப்பா விஷயத்தை சொன்னாரு... எல்லாத்தையும் காலையில பேசிக்கலாம்; நீ வா என் வீட்டுக்கு போகலாம்,'' என அழைத்தாள்.''நான் வரல; போ,'' விரட்டினான்.''இல்லண்ணே... நீ வராம நானும் போக மாட்டேன்,'' கல்யாணி ஆட்டோவில் சென்று அமர்ந்து கொண்டாள்.''தோ பாரு கல்யாணி... இது எனக்கும், அவளுக்கும் உள்ள பிரச்னை; நீ தலையிடாத! ராத்திரி பூரா வெளியில இருந்தா தான், என் கோபம் குறையாம இருக்கும். அதனால, நீ போ,'' என்றான்.''அண்ணே... நீ வராம போக மாட்டேன்,'' உறுதியாக சொன்னாள் கல்யாணி. கடுப்பான சரவணனுக்கு, சுகன்யா மீது கோபம் அதிகமானது. பின், ஏதோ முடிவெடுத்தவனாக தங்கையை அழைத்து, ''நீ, உன் அண்ணிக்கு போனை போட்டு, ஜன்னல திறக்கச் சொல்லு; ரெண்டு வார்த்தை சொல்லிட்டு வர்றேன்,'' என்றான்.சுகன்யாவை அழைத்தாள் கல்யாணி.உடனே, ஜன்னல் கதவு திறந்தது. மனைவியை நோக்கி, ''உன்னோட மறு முகத்த காமிச்சிட்டீல்ல... நாளையிலிருந்து என்னோட மறுமுகத்த நீ பாரு,'' என கூறிவிட்டு, தங்கையுடன் ஆட்டோவில் ஏறினான் சரவணன்.எந்த உணர்ச்சியையும் காட்டாமல், ஜன்னல் கதவை சாத்தினாள் சுகன்யா.மறுநாள் காலை, 7:00 மணி; வாசலில் சரவணன் வருவது தெரிந்தது. செருப்பை கழற்றி விட்டு உள்ளே நுழைந்தவன், நேராக சமையலறைக்கு வந்தான். சமைத்துக் கொண்டிருந்த சுகன்யாவையே சில நொடிகள் சலனமில்லாமல் பார்த்தவன், பின் சட்டென்று, அவள் கைகளை பற்றி கண்ணில் ஒற்றி, ''இத காலா நெனச்சுக்க; என்ன மன்னிச்சிடு,'' என்றான் கெஞ்சும் தொனியில்!அடுத்த நொடி பதறிய சுகன்யா, ''என்னங்க இது! கையை விடுங்க,'' என்று விலகி, ஹாலுக்கு வந்தாள். அமைதியாக அவளை பின் தொடர்ந்த சரவணன், ''என்ன மன்னிச்சிடு சுகன்யா... இனிமே நான் மதுவ தொட மாட்டேன்,'' என்று கண் கலங்கினான்.இரவில், தான் கடுமையாக நடந்து கொண்டதற்காக, கணவன் தன்னை என்ன சொல்வானோ என நினைத்து பயந்த சுகன்யாவிற்கு, சரவணனின் செயல் வியப்பாக இருந்தது. மெதுவாக அருகில் வந்து, அவன் தோளைப் பற்றி, ''என்னாச்சுங்க... ஏன் இப்ப குழந்தை மாதிரி அழறீங்க... ராத்திரி ரொம்ப கோபமா போனீங்களே...'' என்றாள்.அவள் கைகளை எடுத்து, தன் கண்களை துடைத்துக் கொண்டவன், ''நேத்து கல்யாணி, என்னை பிடிவாதமாக அவ வீட்டுக்கு அழைச்சிட்டு போனவ, 'அண்ணே... அண்ணி கதவை திறக்கலன்னு நீ கோபப்படறதுல கொஞ்சம் கூட நியாயமில்ல; நீ என்ன குழந்தையா... கண்டிச்சு மறுபடியும் சேத்துக்க. பகுத்தறிவுள்ள மனுஷன்; ஆபிஸ்ல பொறுப்பான வேலை பாக்குற உனக்கு, உடம்பை கெடுக்கிற போதை பழக்கம் தேவையா... அவங்க, 10 வருஷமா சொல்லிப் பாத்துட்டாங்க; நீ கேட்கிற மாதிரியில்ல. பின்ன அவங்க என்னதான் செய்வாங்க. அவங்க யாரை நம்பி இந்த குடும்பத்துக்கு வந்தாங்க. உன்ன நம்பி தானே... உன்னை வச்சு தான் அவங்க சித்திரம் வரைய முடியும்; ஆனா, நீயே வீணாப் போனா...'இதுவரை அவங்க தனக்குன்னு உன்கிட்ட ஏதாவது கேட்டிருக்காங்களா... உன் ஆரோக்யத்தைத் தானே கேட்கிறாங்க. அதக் கூட நீ தரலன்னா எப்படி? நம்ம அம்மாவுக்கு அப்புறம், உன்னோட நல்லது, கெட்டது அனைத்துலயும் அவங்களுக்கு தானே பங்கிருக்கு... ஆனா, நீ, உன் நண்பர்களோட சேர்ந்து குடிச்சு கும்மியடிக்கறே... கேட்டா ஆம்பளைன்னா அப்படி, இப்படி தான் இருப்பாங்கன்னு தத்துவம் பேசுறே...'நீ எப்ப வருவேன்னு காத்துகிட்டிருக்கிற மனைவி முன், போதையில போய் நிக்கறே! உன் மேல இருக்கிற அன்பால தான், அவங்க கேள்வி கேக்கிறாங்க. இப்ப கூட நீ வாசல்ல நிக்கிறத அவங்கதான் எனக்கு போன் செய்து சொன்னாங்க; உன் மாமனார் சொல்லல. 'உன்கிட்ட அவங்க காட்டின உறுதி, அவங்க அன்போட உச்சகட்டம். அப்பவாவது நீ திருந்துவியான்னு ஒரு எதிர்பார்ப்பு. புரிஞ்சுக்கண்ணே... அம்மா இல்லாத உன்னை, அம்மா மாதிரி பாதுகாக்கறாங்க. அவங்களுக்கு நீயும் நம்பிக்கையா நடக்க வேணாமா... காலையில வீட்டுக்குப் போனதும் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு அவங்களுக்கு ஆதரவா இரு...' என்று, என் தங்கை கூறிய வார்த்தைகள், ஆணி அடிச்சது போல என் நெஞ்சல இறங்கியது; அதான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டு நிற்கிறேன்,'' என்றான்.அவன் திருந்தி விட்டான் என்று புரிந்து, நிம்மதி பெருமூச்சு விட்டாள் சுகன்யா.டி.சீனிவாசன்