அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரிக்கு,நான், எம்.இ., முடித்து, தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பெண்; எனக்கு ஒரு அக்காவும், தம்பியும் உள்ளனர். அக்காவிற்கு திருமணம் ஆகிவிட்டது. என் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.நான், பி.இ., படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். மூன்று ஆண்டுகள் தொடர்ந்த எங்கள் காதல், அவரின் சந்தேக புத்தியால், பிரச்னை ஏற்பட்டு, பிரிந்து விட்டோம். இதனால், நான் சாகும் வரை சென்று பிழைத்து வந்தேன். இவ்விஷயம், என் அம்மாவிற்கும் தெரியும்.அவருக்கு இன்று திருமணம் ஆகிவிட்டது. அதன்பின், என் அம்மா எனக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். ஆனால், எனக்கோ, என்னை திருமணம் செய்து கொள்பவருக்கு, என் காதல் விபரம் தெரிந்து விடுமோ, அவருக்கும் சந்தேகம் புத்தி இருந்து விட்டால் என்ன செய்வது என்று ஏதேதோ எண்ணி, 'இன்னும் சில ஆண்டுகள் போகட்டும்...' என்று பிடிவாதம் பிடித்து, திருமணத்தை தள்ளி வைத்தேன்.அதன்பின், எம்.இ., முடித்து, தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்த போது, உடன் வேலை பார்த்த ஒருவர், நண்பனாக அறிமுகமானார். அவரிடம், என் காதல் பிரச்னையை கூறி வருத்தப்பட்டேன். இதனால் தானோ என்னவோ, அவருக்கு என் மேல் காதல் ஏற்பட்டு, 'அவனை போல் நடந்து கொள்ள மாட்டேன்; உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன். உன் பழைய வாழ்க்கையை மறந்து, புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்...' என்று கூறினார்.அவரது வார்த்தையை நம்பி, 'என் அம்மாவிடம் வந்து பேசுங்கள்; என் அம்மா ஏற்றுக் கொண்டால், எனக்கு சம்மதம்...' என்றேன். அதன்பின், அவரது வீட்டிலிருந்து வந்து பேசினர்; அம்மாவும் இதற்கு சம்மதித்ததால், வார்த்தை அளவில், திருமணம் உறுதி செய்யப்பட்டது.ஆனால், சில நாட்களில் இவரின் நண்பர் ஒருவர், என் அம்மாவிடம், 'அவனுக்கு, உடலில் சரி செய்ய முடியாத நோய் உள்ளது...' என்றார். அதை விசாரித்த போது, அந்த நபர் கூறியது உண்மை என்று தெரிய வந்து, திருமண ஏற்பாட்டை நிறுத்தி விட்டார் அம்மா. நானும், அந்த வேலையை விட்டு, வேறொரு கல்லூரிக்கு சென்று விட்டேன்.அதன்பின், திருமணமே வேண்டாம் என்ற எண்ணத்துடன் நானும், எனக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற வேதனையுடன் அம்மாவும் என, சில ஆண்டுகள் கடந்து விட்டன.நான் எம்.இ., படித்த போது, என்னிடம் படித்த ஒருவர், தற்போது, ஐ.டி., கம்பெனியில் பணிபுரிகிறார். பல ஆண்டுகளுக்கு பின், என்னை போனில் தொடர்பு கொண்டவர், 'அப்போதிருந்தே உன்னை காதலிக்கிறேன்; உன்னிடம் என் காதலை சொல்லும் நிலையில், அன்று உன் வாழ்க்கை இல்லை. உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பி, உனக்காகவே காத்திருக்கிறேன்; உன் வாழ்க்கையில் நடந்த அத்தனை பிரச்னைகளும் எனக்குத் தெரியும். அதனாலேயே என் காதலை உன்னிடம் சொல்ல முடியவில்லை...' என்று வருத்தத்துடன் கூறினார்.ஆனால், என்னால், அவருடைய காதலை ஏற்க முடியவில்லை. ஏற்கனவே, என் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், என்னை மட்டும் இல்லாமல், என் அம்மாவையும் மிகவும் வேதனைப்படுத்தி விட்டது. அதனால், 'நீயாக தேர்ந்தெடுக்க நினைத்த வாழ்க்கை தவறாக போய் விட்டது; இனிமேலாவது, நான் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து கொள்...' என்று கூறிவிட்டார் அம்மா.அதை மனதில் வைத்து, அவரிடம், 'நண்பனாக பேசினால் மட்டும் பேசு; இல்லையென்றால் என்னிடம் பேச வேண்டாம்...' என்றேன். அதன்பின், கடந்த ஒரு ஆண்டாக நண்பர்களாக மட்டுமே பேசுகிறோம். அவர் மனதில் என்ன உள்ளது என்பது தெரியாது; ஆனால், நான் தோழியாகத் தான் பேசினேன்.கடந்த ஒரு மாதத்திற்கு முன், அவருக்கு விபத்து ஏற்பட்டது. ஆண்டவரின் கருணையால், உயிர் தப்பினார். உடல் நலம் விசாரிக்க, அவரது வீட்டிற்கு சென்றேன்; அவரின் வீட்டார்கள் என்னிடம் நன்றாக பேசினர். பின், நானும், அவரும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம்.கட்டுப்படுத்தி வைத்திருந்த என் மனதில், இப்போது மாற்றங்கள் வந்துள்ளன. நானும், அவரை விரும்புகிறேன். இதுவரை அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம், 'இவரை திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருப்பேன்...' என்ற முழு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், மிகவும் குழப்பத்தில் உள்ளேன். என் வயது, 29; அவருக்கு, 30.அன்பு சகோதரியே... அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்; அதேநேரம் பயமும், குழப்பமாகவும் உள்ளது. இனியும் என் அம்மாவை, என்னால் கஷ்டப்படுத்த முடியாது. அம்மாவின் அன்பை இழந்து விடாமல், அவரின் அன்பை பெறுவதற்கு, ஒரு தீர்வு கூறுங்கள்.— இப்படிக்கு,உங்கள் சகோதரி.அன்புள்ள மகளுக்கு,படித்து, வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் ஆண்களில் பெரும்பாலோருக்கு இரண்டு, மூன்று காதல்கள் இடறி, அடுத்த காதலிலோ அல்லது பெற்றோர் பார்த்து வைக்கும் வரனிலோ செட்டிலாகின்றனர். திருமணத்திற்கு பின், பழைய காதல் பிரச்னைகள் கிளப்பும் என பயப்படுவது அபத்தம். காதல் அனுபவமே தனக்கு இல்லை என்கிற பாவனையில் நடந்து கொள்வதே உசிதம்.உனக்கு இரு வழிகள் உள்ளன; ஒன்று, காதல் கத்திரிக்காயில் சிக்கிக் கொள்ளாமல் அம்மா பார்த்து வைக்கும் வரனை மணந்து கொள்வது. இரண்டு, அம்மாவின் சம்மதம் பெற்று, காதலிப்பவனை மணந்து கொள்வது!இந்த இரண்டிலும் சிறப்பானது, நீ காதலிக்கும் வரனை மணந்து கொள்வதே! வருபவனுக்கு உன் முன் கதை தெரியும். மனித மனம் ஒருமுறை ஏமாறும், இரு முறை ஏமாறும்; மூன்றாவது முறை ஏமாறாது.உன் அம்மாவிற்கு, தான் பார்க்கும் வரனையே மகள் மணமுடிக்க வேண்டும் என்கிற வறட்டு பிடிவாதம் இல்லை. மகள் திருமண வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற ஆற்றாமையே அதிகம். நீ காதலிக்கும் வரன் சிறப்பானவன் என்றால், உன் தாயை விட, இவ்வுலகில் அதிகம் மகிழ்ச்சியடையப் போவது யார்?எதற்கும் ஆறு மாதம், நீ காதலிப்பவனை நடுநிலையான மனதுடன் ஆராய்ந்து, அவன், உன் வாழ்க்கை துணையாக வர பொருத்தமானவனா என்பதை உறுதி செய். உன் அவ்வப்போதைய நடவடிக்கைகளை, அம்மாவிடம் ஒளிவு மறைவில்லாமல் தெரிவி. காதலனின் உண்மை தன்மையில், சிறிதளவு சந்தேகம் வந்தாலும், அவனை உதறி, அம்மா சுட்டிக் காட்டும் வரனை மணந்து கொள். திருமணத்திற்கு முன், ஆணோ, பெண்ணோ எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். திருமணத்திற்கு பின், வாழ்க்கை துணைக்கு உண்மையாக இருப்பது தான் முக்கியம்.அம்மாவின் நம்பிக்கையை இழக்க விரும்பாத உன் நல்ல மனதை சிலாகிக்கிறேன். உன் காதல் கை கூட நெஞ்சார வாழ்த்துகிறேன்.— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.