உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவிற்கு —நான், 35 வயது பெண்; பிரபல மென்பொருள் நிறுவனத்தில், மேலாளராக பணி புரிகிறேன். திருமணமாகி, நாலரை வயதில் ஒரு மகன் உண்டு. என் கணவரும், மென்பொருள் நிறுவனத்தில், சேல்ஸ் மேனேஜராக உள்ளார். வரவிற்கேற்ப கடன்கள் உண்டு. என் மாமனார், மாமியாரிடம் குழந்தையை விட்டு விட்டு அலுவலகம் செல்கிறேன். 70 வயதான என் பெற்றோருக்கு நான், ஒரே பெண்.என் கணவருக்கு குடி மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. இது, என் மாமனார் - மாமியார் உட்பட யாருக்கும் தெரியாது. திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் கழித்தே இவ்விஷயம் எனக்கு தெரிய வந்தது. இரு ஆண்டுகளுக்கு முன், முழு உடல் பரிசோதனை செய்யும் போது, இவருடைய கல்லீரல், மிக பழுதடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனால், இப்பழக்கங்களை கைவிடுமாறு அவரிடம் அழுது புலம்பினாலும், சிலசமயம், 'குறைத்து விடுவேன்; பொறுமையாக இரு...' என்றும், மற்றொரு சமயம், 'இதனால் உனக்கென்ன பிரச்னை...' என்றும் கூறுகிறார் என் கணவர்.எங்கள் இருவருக்குமே வேலைப்பளு அதிகம். என் மகன் மிகுந்த சுட்டி. வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும், என் மாமியாரிடம் இருந்து, மகனை பற்றிய குற்றப்பத்திரிகையை கேட்கவே சரியாகி விடுகிறது. அதற்கு மேல், வீட்டு வேலைகள் வேறு. இவற்றையெல்லாம் என் கணவர் எல்லா சமயமும் புரிந்து கொள்ள மாட்டார். இப்பழக்கத்தை பற்றி இவரின் பெற்றோரிடம் தெரிவிப்பேன் என்றால், 'நான் சேல்ஸ் பிரிவில் இருப்பதால், இப்படித்தான் இருக்க முடியும்...' என்கிறார்.என் மாமனாருக்கும், இவர் போல எல்லா பழக்கமும் இருந்தது. கடந்த, ஐந்து ஆண்டுகளில், அவற்றை நிறுத்தி விட்டார். என் மாமியாரின் உடன்பிறப்புகள், என் மாமியாருக்கு மிகவும் உறுதுணை. அதனால், மாமனாரைப் பற்றிய கவலை அவருக்கு பெரிதாக இல்லை. ஆனால், நான், என் பெற்றோர், மகன் மற்றும் என் வாழ்க்கை எல்லாவற்றையும் காக்க போராடுகிறேன்.இதனால், சமீபகாலமாக, எனக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. உங்கள் ஆலோசனைகளை வாரம் தவறாமல் படிப்பேன். எனக்கு நல்ல ஆலோசனையை, சொல்லும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.— உங்கள் பதிலை எதிர்பார்க்கும்,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிவோரில், 90 சதவீதம் பேர் குடிநோயாளிகளாகவே உள்ளனர். காரணம், மேற்கத்திய கலாசாரம்!இளம் வயதிலேயே, தேவைக்கு அதிகமான சம்பளமும், காலை, இரவு ஷிப்ட் என, மாறி மாறி பணிபுரிவதால், மன அழுத்தமும், தூக்கமின்மையும் ஏற்படுவதால், பணி புரியும் நிறுவனங்களே பாட்டில்களை பரிசளித்து, விருந்துகளை நடத்தி, குடிப்பதை ஊக்குவிக்கின்றன.உன் கணவரை, இரவு ஷிப்ட்களை தவிர்த்து, பகல் ஷிப்ட் பணிபுரிய வை. தினமும் குடிப்பதை வாரம் ஒருமுறையாகவும், வாரம் ஒருமுறை குடிப்பதை, மாதத்திற்கு ஒரு முறையாகவும் கொஞ்சம் கொஞ்சமாக மது அருந்துவதை குறைக்கச் சொல்.கணவரை குற்றவாளி கூண்டில் நிறுத்தாமல், கரிசனத்துடனும், அன்புடனும் அணுகி, குடியை குறைப்பதில் ஒத்துழை. சிகரெட்டை அடியோடு நிறுத்த, மருந்துபொருள் அடங்கிய, 'சிக்லட்'கள் கடைகளில் கிடைக்கும்; அவற்றை உபயோகிக்க சொல்லலாம் அல்லது ஆல்கஹால் அனானிமஸ் அமைப்பில் உன் கணவரை உறுப்பினர் ஆக்கலாம். நீங்களிருவரும் சேர்ந்திருக்கும் நேரத்தையும், உங்கள் குழந்தையுடன் சேர்ந்திருக்கும் நேரத்தையும் அதிகப்படுத்து.கணவனின் போக்கில் சென்று, கணவனை திருத்து.வாழ்த்துகள்.— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !