உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 30. கணவர், சமீபத்தில் இறந்து விட்டார். 5 வயதில், ஒரு மகன் இருக்கிறான். நான், பிளஸ் 2 படித்து, அரசு துறையில், சொற்ப சம்பளத்தில் வேலை செய்கிறேன்.என்னுடையது, ஏழ்மையான குடும்பம் தான். பெற்றோருக்கு, நானும், என் தம்பி, இருவர் தான். தம்பி, பாலிடெக்னிக் படிப்பை முடித்து, தற்சமயம், இரு சக்கர வாகன விற்பனை கூடத்தில், வேலைக்கு சேர்ந்துள்ளான்.எனக்கு திருமணமான போது, வயது, 20. கணவனின் சந்தேக புத்தி மற்றும் வக்கிர பேச்சுக்கிடையே, வாழ்க்கை நரகமாக கழிந்தது. ஒரு கட்டத்தில், அவரது நடவடிக்கை சகிக்க முடியாமல் போக, மூன்று ஆண்டுகளுக்கு முன், அவரை விட்டு பிரிந்து, பெற்றோரிடம் தஞ்சமடைந்தேன்.அவருடன் வாழ்ந்த போதும் சரி, பிரிந்த போதும் சரி, எனக்கும், என் மகனுக்கும் எந்த செலவும் செய்ததே இல்லை. இத்தனைக்கும், மாமனார் - மாமியார் கூடவே இருந்தனர். அவர்களும், தன் பிள்ளைக்கு எந்த அறிவுரையும் கூறியதில்லை.என் சொற்ப சம்பளத்தில், வாழ்க்கை, போராட்டமாக கழிந்தது.இந்நிலையில், ஆறு மாதத்திற்கு முன், என் கணவர், திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு, இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன், அவருடன் தங்கியிருந்து, பணிவிடை செய்தேன்.கணவர் என்ன வேலை செய்தார், சம்பாதித்தார் என்ற விபரம் எதுவும் அவருடன் இருந்தபோது, எனக்கு தெரியாது; கேட்டாலும் சொல்ல மாட்டார்.கணவர் இறந்த பின், 'அவரது சேமிப்பு மற்றும் சொத்தில் பங்கு கேள்...' என, சில நல்ல உள்ளங்கள், கூறின. மகனை நன்கு படிக்க வைத்து, ஆளாக்க, பொருளாதார பலம் தேவை என்பதால், என் மாமனாரிடம் கேட்டேன்.வங்கி சேமிப்பில், தன் தந்தையை, 'நாமினி'யாக போட்டிருக்கிறார், என் கணவர். அந்த சேமிப்பு கணக்கிலிருந்து, பெருந்தொகை ஒன்றை, மாமனார் வாங்கி சென்ற விஷயம், என் கணவரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன்.அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட பணத்தையும், மாமனாரே வாங்கி சென்றுள்ளார். 'வாங்கிய பணத்தில் ஒரு சிறு தொகையை கொடுத்தால், உதவியாக இருக்கும்...' என்று, என் மாமியாரிடம் சொன்னேன். அடிக்காத குறையாக, மாமியாரும், நாத்தனாரும் என்னை கண்டபடி பேசி, துரத்தி விட்டனர். மகனுடன் தனிமையில், கண்ணியத்துடனும், சிரமத்துடன், 30 வயதில் விதவையாக நிற்கிறேன். என்னை ஏன் இப்படி பழி வாங்க வேண்டும்? சட்ட உதவி பெற, பொருளாதார சூழல் இடம் கொடுக்கவில்லை. இப்போது, நான் என்ன செய்வது?— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —திருமணமான முதல் நாளே, கணவனானாலும், மனைவியானாலும், தங்களை பற்றிய முழு விபரங்களை எதிர் தரப்பிடம் கூறி விடுவது நல்லது. தாமாக முன் வந்து கூறாவிட்டாலும், வற்புறுத்தி கேட்டு தெரிந்து கொள்வது சிறப்பு. எத்தனையோ பேர், வரன் பார்க்கும்போதே, மாப்பிள்ளையின் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஆணையின் நகல், சம்பள சான்றிதழ் நகல் வாங்கி பார்க்கின்றனர். திருமணம் ஆன, ஆணோ - பெண்ணோ, தங்களின் வாரிசுதாரராக, கணவன் - மனைவியை அறிவிப்பதே பொருத்தமானது. நாளை என்பது நிச்சயமில்லை, ஒருவேளை, நாம் இறந்து விட்டால், மனைவியும், குழந்தைகளும் நடுத்தெருவில் நிற்கக் கூடாது என்று, முன்னெச்சரிக்கையுடன் ஒரு ஆண் சிந்திக்க வேண்டும். சண்டையிட்டு பிரிந்த மனைவி பற்றியும், மனிதாபிமானமாக யோசிக்க வேண்டும். தன் மரணத்துக்கு பின், மனைவியும், குழந்தைகளும், நட்பு, உறவினர் வட்டத்தில் அன்றாட வாழ்க்கையை நகர்த்த யாசகம் கேட்டால், இறந்த தன்னை தான் துாற்றுவர் என, ஒரு ஆண் உணர வேண்டும்.கணவனுடன் ஏழு ஆண்டுகள் குடும்பம் நடத்தி இருக்கிறாய். ஆனால், கணவனை பற்றி எவ்வித தகவல்களையும் அறிய முயலாத அம்மாஞ்சியாய் இருந்திருக்கிறாய்.எத்தனையோ பெண்கள், திருமணமான மறு மாதமே, கணவனை, ஒரு பெரிய தொகைக்கு இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்க சொல்லி, வாரிசுதாரராக, தன் பெயரை போட்டுக் கொள்கின்றனர். மனைவியாக இருப்பவள், பண விஷயத்தில் கண் கொத்தி பாம்பாக, சுயநல பேயாக இருக்க வேண்டுமா என, நீ நினைத்திருப்பாய்... வாழ்க்கையை நகர்த்த, பணமும் முக்கியம். சொந்த காலில் நின்று, நீயும், உன் மகனும் ஜீவிக்க, குறைந்தபட்ச பண உத்தரவாதம் தேவை. மகனின் துர் நடத்தையை கண்டிக்காத, மாமனார் - மாமியார் செயலை, நீ கண்டித்திருக்க வேண்டும். கொடுமைக்கார கணவன், நோய்வாய்பட்டு மரண தருவாயில் கிடந்தபோது, கடைசி ஒரு மாதம் பணிவிடை செய்திருக்கிறாய், பாராட்டுகள்.அடுத்து, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...முதலில், ஊர் அல்லது உறவு பெரியவர்களையோ வைத்து, மாமனார் - மாமியாரிடம் பேசு. 'இறந்தவனின் பணத்தை பாதியாக பிரித்து, சமாதானம் கொண்டாடுவோம்...' எனக் கூறு. பேச்சுக்கு ஒத்து வராவிட்டால், 'காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்...' என மிரட்டு. 'எனக்கு கொடுக்க, உங்களுக்கு மனம் வரவில்லையென்றால், உங்கள் பேரனின் எதிர்காலத்திற்காவது கொடுத்து உதவுங்கள்...' என, 'சென்டிமென்ட்' ஆக பேசு. காவல்துறை உனக்கு உதவாவிட்டால், இலவச சட்ட ஆலோசனை மையத்தை அணுகு.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், வங்கி கணக்கு, பணியிட பரிவர்த்தனை மற்றும் பி.எப்.,க்கு, உன் கணவன், யாரை வாரிசுதாரராக போட்டிருக்கிறான் என்பதை உறுதி செய். ஈட்டிய விடுப்பு பணமாக்கல், பணிக்கொடை, ஓய்வூதியம் அனைத்திலும் உன் உரிமையை நிலைநாட்டு.அலுவலகத்தில், பணம் ஏதாவது கொடுக்கப்படாமல் இருந்தால், எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து, தடுத்து நிறுத்து.சாதுவாக தெரிந்தால், சுயநலக்காரர்கள் காலில் இட்டு மிதிப்பர்; பத்ரகாளியாக விஸ்வரூபம் எடுத்தால், கூனிக்குறுகி கும்பிட்டு நிற்பர். மொத்தத்தில், 'நம் மருமகள், தனக்குரிய பங்கை வாங்காமல் விடமாட்டாள்...' என்ற உண்மையை, மாமனார் - மாமியாருக்கு உணர்த்து.கொடுமைக்கார கணவனின் பணம் எதுவும் தேவையில்லை என, புது முடிவெடுத்தால், தகுந்த வரன் பார்த்து, மறுமணம் செய்து கொள். பணத்தை விட, இரட்டிப்பு பாதுகாப்பு மறுமணத்தில் கிடைக்கும் வண்ணம், அதை அர்த்த பொருத்தமாக செய்து கொள். எந்த முயற்சி செய்தாலும், வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன், மகளே!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !