உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரிக்கு —நான், 46 வயது பெண். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்துள்ளேன். என் கணவரின் வயது, 50. அரசு பணியில், உயர் அதிகாரியாக இருக்கிறார்.திருமணம் ஆன நாள் முதல், என்னை, ஒரு பெண்ணாகவோ, மனைவியாகவோ, தோழியாகவோ நடத்தியதே இல்லை. அவரை பொறுத்தவரை, நான் சம்பளமில்லாத வேலைக்காரி; அவ்வளவே. மாமியார் - மாமனார், கணவரது சகோதரர் வீட்டில் வசிக்கின்றனர்.எங்களுக்கு ஒரு மகள். கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள்.திருமணமான புதிதில், வீட்டுக்கு வரும் உறவினர்கள் முதல், பால்காரர், மளிகை கடைக்காரர் வரை, எந்த ஆண்களிடம், சாதாரணமாக பேசினாலும் கூட, அவர்களுடன் சம்பந்தப்படுத்தி, அசிங்கமாக, சத்தமாக பேசுவார்.அக்கம்பக்கத்தினர் காதில் விழுந்தால், மானம் போகும் என்று, மறு பேச்சு பேசாமல், அடங்கி போனேன். இது, அவருக்கு சாதகமாகி போனது. தொடர்ந்து, வார்த்தைகளால் என்னை சித்திரவதை செய்ய ஆரம்பித்தார்.சமீபத்தில், அவர், புது மொபைல் போன் வாங்கவே, பழைய போனை என்னிடம் கொடுத்தார். அதில், எப்படி பாடல்கள் கேட்பது என்று, மகளிடம் கற்றுக்கொண்டேன்.ஒருநாள், பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது, நடுவே, சில பெண்களுடன் நெருக்கமாக, என் கணவர் பேசிய உரையாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. அதைக் கேட்க கேட்க, உடலும், உள்ளமும் துடித்துப் போனது.ஏற்கனவே, வாழ்க்கையில் சந்தோஷத்தையே அறியாத எனக்கு, இவ்வுரையாடல், பேரதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.அவர், வீடு திரும்பியதும், இது பற்றி கேட்டேன்.'சரி... சரி... அதையெல்லாம் அழிக்க மறந்து, உன்னிடம் கொடுத்து விட்டேன் போலிருக்கு... அதனால் என்ன இப்ப... உன்னால் என்ன செய்ய முடியுமோ, செஞ்சுக்க...' என்று, ஆணவமாக பேசினார்.மகளுக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டுமே என்று, அப்போதும் அடங்கிப் போனேன்.அவரிடம் அன்பு தான் கிடைக்கவில்லை; சுயமரியாதையும் போய், அடிப்படை உரிமை கூட கிடைக்காமல், இதென்ன வாழ்க்கை என்று தோன்றுகிறது.மகளின் திருமணத்திற்கு பின், அவரை விட்டு போய்விட வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன். எனக்கு, அப்பா இல்லை; அம்மா மட்டும் கிராமத்தில், தம்பியுடன் வசிக்கிறார்.வெளி உலகமே தெரியாமல், என்னை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருந்ததால், தனியாக என்னால் மீதி காலத்தை ஓட்ட முடியுமா என்ற தயக்கமும் உள்ளது.எனக்கு, நல்ல வழி காட்டுங்கள்.— இப்படிக்கு,சகோதரி.அன்பு சகோதரி —உன் கணவரின் நம்பிக்கை துரோகத்துக்கு, கீழ்கண்டவை காரணங்களாக இருக்கக்கூடும்.* குறைந்தபட்சம், ஒரு இளங்கலை பட்டப் படிப்போ, அதிகபட்சம் ஒரு முதுகலை பட்டப் படிப்போ படிக்கவில்லை நீ* தட்டிக்கேட்க இயலாத, வயதான மாமியார். அக்காளின் வாழ்க்கையில், தலையிட விரும்பாத, மைத்துனன்* உயர் பதவி, கை நிறைய சம்பளம் வாங்கும் ஆணாதிக்க மனோபாவம் கொண்ட எல்லா ஆண்களும், திருமண பந்தம் மீறிய உறவுகளில் அதிகம் ஈடுபடுவர்; உன் கணவர் உட்பட* உனக்கு, மகள் இருப்பதற்கு பதில், மகன் இருந்திருந்தால், தந்தையின் துர்நடத்தையை தட்டிக் கேட்டிருப்பான். எப்போது தப்பு செய்தாலும், மகள்கள், அப்பா பக்கம் தான் நிற்பர். காரணம், மரபியல் ஈர்ப்பு.மகளின் திருமணத்திற்கு பின், கணவரை விட்டு பிரிந்து, எங்கு செல்லப் போகிறாய்... திருமணமான மகள்கள், அவரவர் அம்மாக்களை, ஆயா வேலை செய்ய வைக்கவே விரும்புகின்றனர். மீதி ஆயுளுக்கும், உன்னை வைத்து எப்படி பராமரிப்பாள்...அவள் விரும்பினாலும், மருமகன் ஒத்துக்கொள்ள வேண்டுமே... பொருளாதார நிலையில் நலிந்து, கிராமத்தில் வசிக்கும் அம்மா, உன்னை வைத்துக் கொள்வாளா... தம்பி, உன்னை வைத்துக் கொள்வானா... அவன் ஒத்துக்கொண்டாலும், அவன் மனைவி ஏற்றுக் கொள்வாளா... யாருமே ஆதரிக்க வாய்ப்பிருக்காத போது, எங்கு போய் நிற்பாய்?வீட்டை விட்டு வெளியேறுவதோ, கணவரை சட்டப்படி விவாகரத்து செய்வதோ, உனக்கு சரி வராது. வீட்டுக்குள்ளேயே ஒத்துழையாமை இயக்கம் நடத்து; கலகம் செய். கணவருக்கு எதிராக, அகிம்சாவழி போராட்டங்களை ஆரம்பி, கணவருடன் பேசாதே...'திருமண பந்தம் மீறிய உறவுகளை, நீ துண்டித்துக் கொள்ளாவிட்டால், வீட்டில் சமைக்க மாட்டேன்...' என, அடம்பிடி.'நான் வேலைக்காரி அல்ல. எனக்கும் சுயமரியாதையும், தன்மானமும் உண்டு. என் அடிப்படை உரிமைகளில் கை வைக்காதே. உன் துர்நடத்தையை தொடர்ந்தால், அலுவலகத்திற்கு வந்து புகார் செய்வதோடு, என்னை அடித்து துன்புறுத்துவதாக, காவல் நிலையத்திலும் புகார் செய்வேன். தினம் இரவு, உன் கைபேசியை சோதித்து பார்ப்பேன். திருத்திக் கொள்ளாவிட்டால், இனி, உனக்கு வீடு, நரகம் தான்...' என, உள்நாட்டு போர் பிரகடனம் செய்.கல்நெஞ்சக்காரர்கள் கூட, அகிம்சாவழி போராட்டங்களில் நிலைகுலைந்து போவர். மனைவி ஒரு வாயில்லா பூச்சி என்ற, உன் கணவரின் அபிப்ராயத்தில் மண் விழும்.கணவருடன், ஆயுதம் தரிக்காத போராட்டத்தை நடத்தியபடியே, மகளின் திருமணத்திற்கு முன், தொலைதுார கல்வி இயக்கம் மூலம், இளங்கலை பட்டப் படிப்பை முடி. உன்னிடமுள்ள நகைகளில் ஒரு பகுதியை விற்று, 'ஜெராக்ஸ்' கடையோ, கைபேசி, 'ரீசார்ஜ்' கூப்பன்கள் விற்கும் கடையோ நடத்து.வீட்டு வேலைகளை முடித்து, கடையை திற. உனக்கென தனியாக வங்கி கணக்கு ஆரம்பி. ஆதார், வாக்காளர் அட்டை, இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஏ.டி.எம்., அட்டை முதலியவற்றை, உன் பாதுகாப்பில் வை.அகிம்சா வழி போராட்டங்கள் பயனளிக்கா விட்டால், சொந்த காலில் நிற்கும் வேலையை, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து முடித்துவிட்ட தைரியத்தில் இருக்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு சகோதரி.- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !