உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —நான், 32 வயது பெண். பட்டப் படிப்பு முடித்து, பள்ளியில் பணிபுரிகிறேன். திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறார், கணவர். அவரது தம்பிக்கும் திருமணமாகி, மாடியில் குடியிருக்கிறார். கணவரின் உறவினர்கள், வெவ்வேறு ஊர்களில் உள்ளனர்.வீட்டில் விசேஷம் என்றால், மொத்த உறவினர்களும் கூடி, வீடே கலகலப்பாக இருக்கும். என்னிடமிருக்கும் கெட்ட குணமான கோபத்தால், இப்போது, உறவினர்கள் வருகை குறைந்து விட்டது.மாமனார் - மாமியார் மற்றும் மச்சினர் குடும்பத்தினர், என்னை எதிரி போல் பார்க்கின்றனர்.ஒருமுறை, மச்சினர் குழந்தைக்கு பிறந்தநாள் என்று, உறவினர்கள், வீட்டில் கூடியிருந்தனர். வேலைக்கு சென்று, மாலை திரும்பிய நான், வீடே களேபரமாகி இருந்ததை பார்த்து, கோபத்தில் தாறுமாறாக பேசி விட்டேன். உடனே சமாளித்து, அவர்களுடன் சிரித்து பேசி, சூழ்நிலையை சகஜமாக்கினேன். ஆனால், 'கேக்' வெட்டிய உடனே, அவரவர் கிளம்பி விட்டனர்.மாமனார் - மாமியார், கடிந்து கொள்ளவில்லை என்றாலும், அதன்பின், அவர்கள் சகஜமாக என்னுடன் பழகவில்லை. மச்சினர் மற்றும் அவர் மனைவியும், பாராமுகமாக உள்ளனர்.என் கோபத்தை பொறுத்துக் கொண்டவர், கணவர் மட்டுமே.'எங்கள் மீது, நீ வைத்துள்ள பாசமும், அக்கறையும் தான், கோபப்பட வைத்தது என்று எனக்கு புரிகிறது. ஆனால், அதை மற்றவர்கள் இயல்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கோபத்தை குறைத்துக் கொள்...' என்று அறிவுறுத்தினார்.என்னால் நிம்மதி இழந்து தவிக்கும் புகுந்த வீட்டினர் மற்றும் உறவினர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. வீடே வெறிச்சோடி, களை இழந்தது போல் இருக்கிறது.நான் இப்போது என்ன செய்ய வேண்டும் அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —கோபப்படுதல், மிருக குணம். பிறர் மீது நாம் பிரயோகிக்கும் வன்முறைகளில் மிக கொடூரமானது, கோபம் தான். பிரச்னைகளை பேசித் தீர்க்க தெரியாத பலவீனர்களே, கோபக்காரர்களாய் மாறுகின்றனர். கோழைகளின் மாறுவேஷம், கோபம். அதனால் அடையும் லாபம், ஒன்று என்றால், நஷ்டம், 999.தான் என்கிற அகம்பாவமே, கோபத்தின் வெளிப்பாடு. கோபக்காரியான உன்னை, சாந்த சொரூபியாக்க சில யோசனைகளை கூறுகிறேன்...* தினமும் யோகா செய். மருத்துவரிடம் சென்று, முழு உடல் பரிசோதனை செய்து கொள். இப்போதெல்லாம், இள வயதினருக்கே ரத்த அழுத்தம் வந்து விடுகிறது. எதற்கும் முன்னெச்சரிக்கையாக, உணவில் உப்பை குறை* அலுவலக பிரச்னையை வீட்டுக்கு எடுத்து வராதே; வீட்டு பிரச்னைகளை அலுவலகத்திற்கு எடுத்து செல்லாதே. மன அழுத்தத்தை குறைத்துக் கொள்* பிறரை மதிக்க கற்றுக்கொள். உறவு, நட்புகளை முழு மனதுடன் அங்கீகரி. ஒருவரிடம் கோபப்படும் முன், அவர், உனக்கு செய்த நல்லவைகளை அசை போடு* பிறர், உன்னிடம் எவ்வளவு இனிமையான வார்த்தைகளை பேச வேண்டுமென விரும்புகிறாயோ, அதே அளவு இனிமையான வார்த்தைகளை பிறரிடம் நீ பேசு* வார்த்தைகளை கொட்டும் முன், தொண்டை பெட்டியில் ஒரு தணிக்கை குழு வைத்து, வார்த்தைகளை மென்மையாக்கு* பிறரிடம், உன்னை மீறி கடுமையாக நடந்து கொண்டால், மன்னிப்பு கேள். பிறர், உனக்கு நல்லது செய்தால், நன்றி கூறு. மன்னிப்பும், நன்றியும் உன் இதயத்திலிருந்து வரட்டும்* உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள். வீட்டில், நாய் அல்லது பூனை வளர். நல்ல இசையை கேள். வீட்டில் தோட்டம் போடு. இறுக்கமாய் இராதே. நகைச்சுவைகளை ரசித்து, சிரிக்க கற்றுக்கொள். கணவர், குழந்தைகளுடன் வாரா வாரம் கோவிலுக்கு சென்று வா* தினமும் இரவில், பகல் முழுக்க எத்தனை முறை கோபப்பட்டோம்... இனி, அதே தருணங்கள் வந்தால், எப்படி கோபப்படாமல் இருப்பது என, ஆய்வு செய். ஆயுள் முழுக்க நல்லுறவை பேண, மாமனார் - மாமியாரிடம் மன்னிப்பு கேள்; தகவல் தொடர்பை ஏற்படுத்து. மச்சினர் குடும்பத்திடம் இதயப்பூர்வமாய் கண்ணீர் விட்டு இறைஞ்சு; விருந்துக்கு அழைத்து அளவளாவு. திடீரென்று நீ மாறி விட்டதை, அவர்கள் நடிப்பு என்று சந்தேகப்படக் கூடும். உண்மையாகவே, மருமகள் மாறி விட்டாள்; அண்ணி மாறி விட்டார் என்கிற, 'இமேஜை' உழைத்து பெறு.உறவு என்ற கோடி ரூபாய் வைரம் கோபப்பட்டால், கரித்துண்டு ஆகிவிடும் என்ற உண்மையை, ஆத்மார்த்தமாக உணர். தனி மரம் தோப்பாகாது, மகளே...— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !