அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 24 வயது, ஆண்; பி.இ., பட்டதாரி. தனியார் துறையில் ஓர் ஆண்டு பணிபுரிந்து, தற்போது அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறேன். பி.இ., இறுதி ஆண்டு படிக்கும்போது, உறவுக்கார பெண், முகநுாலில் தொடர்பு கொண்டாள்.என்னை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து, சொன்னாள். எனக்கு ஒரே ஆச்சரியம். உரையாடல்கள் தொடர்ந்தன. இரண்டு, மூன்று முறை நேரில் சந்தித்தாள். அதன்பின், 'லவ் ப்ரோப்பஸ்' செய்தாள்; எனக்கு, முறைப் பெண் அவள்.'நான், போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறேன். வெற்றி பெற்றவுடன், இருவரும் அவரவர் வீட்டில் சொல்லி, சம்மதம் பெறுவோம்...' என்ற ஒரே நிபந்தனையுடன், அவளின் காதலை ஏற்றுக்கொண்டேன்.அப்போது, அவள், இளநிலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். போட்டி தேர்வுக்கு முதல் நாள், அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது... 'என் அம்மாவிடம், நம் விஷயத்தை சொன்னேன். அவர்களும், நீங்கள் நல்ல பையன் தான் என்றார். இருந்தாலும், நாம் ஒன்று சேர இயலாது. உங்கள் அப்பாவுடைய சகோதரருக்கும், எங்கள் குடும்பத்திற்கும் பிரச்னை உள்ளது. 'விசேஷத்தில் அவர்களோடு ஒன்றாக பங்கேற்க முடியாது. 'நீ மட்டும் அந்த பையனோடு சேர்ந்து வாழ்ந்து கொள். நாங்கள் எந்த விசேஷத்திலும் கலந்து கொள்ள மாட்டோம்' என்று அம்மா கூறினார். நாம், இனி பேச வேண்டாம்...' என்றாள்.இதைக் கேட்டு, நிலை குலைந்து போனேன். மனம் வெதும்பி, மறுநாள், போட்டி தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இவ்விஷயத்தை என் பெற்றோரிடம் சொல்லவில்லை. என்னால் எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை. பொது இடங்களில் மற்றும் விசேஷத்தில் என்னை முறைத்து முறைத்து பார்த்தனர், அவளது உறவினர்கள்.நானோ, அமைதியாக சென்றேன். மனதில் ஒருவித பயம். இது, தொடர்கதை ஆனது. அவளின் உறவினர்கள் மத்தியில், நான் கெட்டவன் ஆனேன்; எங்கள் உறவினர் பார்வையில், அவள் நல்லவள்.எட்டு மாதங்களுக்கு பின், மீண்டும் என்னை தொடர்பு கொண்டவள், 'என் அம்மாவை சமாதானம் செய்து கொள்ளலாம்...' என்று கூறி, மீண்டும் என்னுடன் பேச ஆரம்பித்தாள்.திடீரென ஒருநாள், என்னை தொலைபேசியில் அழைத்தவள், 'என் அம்மா ஒத்துக்கொள்ளவில்லை. தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார்...' என்று கூறினாள்.அப்போதே நான் அவளிடம், 'உனக்கு, என்னால் எந்த தொந்தரவும் வராது...' என்று, உறுதி கொடுத்தேன்.அதன்பிறகு நடந்த போட்டி தேர்வுகளில் மனதை ஒருநிலைபடுத்தி படிக்க இயலவில்லை. விளைவு, தோல்வி. இப்போது, அவளுக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டதை, உறவினர் மூலம் அறிந்தேன். எங்கள் குடும்பத்திற்கும் அழைப்பு வந்தது. அவளது உறவினர்கள், என்னை வேண்டா வெறுப்பாக பார்க்கின்றனர். அவளோ, வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டாள்; நானோ, இன்னமும் அதே நிலையில். என் லட்சியமான அரசு பணியை அடைய, போட்டி தேர்வில் வெற்றி பெற ஆலோசனை கூறுங்கள் அம்மா.— இப்படிக்கு உங்கள் மகன்அன்பு மகனுக்கு —சில காதல்கள், ஓர் ஆணை குப்பையிலிருந்து கோபுரத்துக்கு உயர்த்தும்; சில காதல்கள், அதே ஆணை சிகரத்திலிருந்து படுபாதாளத்துக்கு தலைகுப்புறத் தள்ளி விடும். உன்னுடைய காதல், இரண்டாவது வகை.உன் காதலி, ஒரு ஆர்வக்கோளாறு பெண்மணி; கோழை; பிரச்னைகளை கண்டு புறமுதுகு காட்டி ஓடுபவள். நிலையில்லாத மனம் கொண்டவள்.நீ, அவளை துரத்தி சென்று காதலிக்கவில்லை, அவள் தான் உன்னை முகநுாலில் மோப்பம் பிடித்து, வலிய வந்து காதலித்தாள். உங்கள் காதல், உடல் ரீதியானதல்ல.காதலியின் உறவினர்களிடம், உன்னை பற்றி ஏதோ அவதுாறாய் கூறியிருக்கிறாள், அவளது அம்மா. அவர்களை கண்டு நீ ஏன் பயப்பட வேண்டும். அவளது உறவினர்களிடம், நீ நல்லவன் என பெயர் வாங்கி என்ன பிரயோஜனம். உன்னுடைய குற்ற உணர்ச்சி தேவையில்லாதது.இனி நீ செய்ய வேண்டியது...* உன் காதலியை அடியோடு மறந்து விடு. அவளுடைய தொலைபேசி எண்ணை, உன் கைபேசியிலிருந்து அகற்று; உன் கைபேசி எண்ணை மாற்று* அரசு போட்டி தேர்வு எழுதி, தேர்வாக, ஏதாவது ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படி. பதறாமல், சிதறாமல், கவனத்தை தேர்வில் வை* சிறு மனஸ்தாபத்தை மனதில் வைத்து, மகளின் காதலை நிறைவேற்ற மறுத்த பெற்றோர், ஆபத்தானவர்கள். இப்போதாவது அவர்களிடமிருந்து விலகினாய் என்று சந்தோஷப்படு. அவர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு, அதன் பின், சிறுசிறு பிரச்னைகளை எல்லாம் ஊதி பூதாகரமாக்கினால் என்ன செய்வாய்* காதலியின் திருமணத்திற்கு போகாதே. அவளது திருமண நாளன்று, வேறு ஏதாவது உபயோகரமான வேலைகள் இருந்தால் செய். வாழ்த்து கூட அனுப்பாதே* உன்னை குரோதமாய், இழிவாய் பார்த்து சிரித்த அவளது உறவினர்கள், உன் அசுர வளர்ச்சியை பார்த்து திகைத்து நிற்க வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது போல், உனக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்* போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் வயது வரம்பை கடந்து விட்டால் கவலைப்படாதே. முதுகலை பொறியியல் பட்டப்படிப்பை படித்து, ஏதேனும் ஒரு கல்லுாரியில் விரிவுரையாளராகு* 'நீ ஒரு இளித்தவாயன்'- என்கிற முத்திரை, உன் முகத்தில் குத்தப்பட்டுள்ளது. இனி, யாரையும் காதலிக்காதே; காதலிக்கிறேன் என, எவள் வந்தாலும் ஏற்றுக் கொள்ளாதே* நல்ல வேலைக்கு போனதும், உனக்கு வரன் பார்க்க சொல். உறவுக்கார பெண்களிடம் சிக்கிக் கொள்ளாதே. அயல் பெண்ணாக பார்த்து மணந்து கொள் * முகநுாலில் பெண்களிடமிருந்து, நட்பு விண்ணப்பம் வந்தால் ஏற்காதே. முகநுால் வழி காதல்கள் ஆபத்தானவை* ஒரு பெண் காதலிக்கிறேன் என வந்ததால், பலமுறை அரசு போட்டி தேர்வுகளில் தோற்றிருக்கிறாய். அவ்வளவு பலவீனமானவனா நீ... யோகா வகுப்புகளுக்கு போய், மன வலிமையைக் கூட்டு* உன்னை ஆசை காட்டி மோசம் செய்த பெண்ணின் திருமண வாழ்வு, வீணாக போய்விட வேண்டும் என, கடவுளிடம் வேண்டாதே. அவள், அவளின் கணவனுடன் சந்தோஷமாக இருக்கட்டும். நீ, உன் மனைவியுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்து* உன்னை மாதிரி அப்பாவி ஆண்கள், மியூசியத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள். உன்னையும், உன் கடிதத்தையும் பார்த்து வியந்து நிற்கிறேன். ஆணினம் முழுவதும் கெட்டு போய் விடவில்லை என்கிற ஆசுவாச பெருமூச்சு, என்னிடமிருந்து எழுகிறது. — என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.