உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மா —இரண்டு குழந்தைகளுக்கு தாயான, வயதான, கணவனை இழந்த என் தோழிக்கு, கருணை அடிப்படையில், மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் வேலை கிடைத்தது. மாநிறம் என்றாலும், இரண்டு குழந்தைகளுக்கு தாய் என, சொல்ல முடியாது; பார்க்க நன்றாக இருப்பாள்.வேலையில் சோர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு பின், அவள் பணிபுரியும் இடத்தில் ஒருவன், அவளை திருமணம் செய்ய பல வகையிலும் தொந்தரவு செய்தான். 'எனக்கு, இரண்டு மகன் உள்ளனர்; தொல்லை பண்ணாதே...' என, பலமுறை, தோழி சொல்லியும், நான்கு ஆண்டுகளாக அவள் பின்னாலே அலைந்து, மனதை கரைத்து, பதிவு திருமணம் செய்து கொண்டான். மூன்றாவதாக ஒரு மகன் பிறந்தான்.அதன்பின், என் தோழியின் கணவன் குணம் முற்றிலும் மாறி விட்டது. அவளின் இரண்டு மகன்களுக்கும் சாப்பாடு கொடுக்க விட மாட்டான். அடித்து, துன்புறுத்தி, கெட்ட வார்த்தை பேசியும், கடைசியில் மகன்களை விரட்டி விட்டான். பிள்ளைகளுக்கு படிப்பும் போய், அன்பும் கிடைக்காமல் போனது. இப்போது, தோழியின் அம்மா வீட்டில் வளர்கின்றனர், அப்பிள்ளைகள்.சில ஆண்டுகளுக்கு முன், அவள் கணவன், வீடு கட்ட பணம் கேட்டான். தோழியும், தன் சேமிப்பு பணம், நகை என, அனைத்தையும் கொடுத்தாள். இப்போது, 'இது என் வீடு, என் வீட்டிற்கு வராதே...' என்று, கதவில் வேறு ஒரு பூட்டு பூட்டி, வரவிடாமல் செய்து விட்டான்.உழைத்த பணம் அனைத்தையும் கொடுத்து, சம்பளம் இல்லா ஒரு வேலைக்காரியாக இருந்தாள். மேலும், கெட்ட வார்த்தையும், அடியும் வாங்கியதுடன் அல்லாமல், 'நீ கொடுத்த பணத்திற்கு சாட்சி எங்கே?' என கேட்டு, 'உன்னோடு வாழ முடியாது, விவாகரத்து கொடு. எனக்கு, வேறு மனைவி உண்டு...' என்று, இரக்கமில்லாமல் கூறி, துரத்தி விட்டான்.இப்போது என் தோழி, மனநலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தேன் எனக் கூறி, 30 ஆண்டுகளாக அவள் பணத்தில் சாப்பிட்டு, வீடு கட்டி, கொடுமை செய்து, இப்போது வேண்டாம் என்பது என்ன நியாயம்?கணவன் இல்லை என்கிறபோது, இந்த சமுதாயத்தில் வேலை பார்க்கும் பெண்கள் அனுபவிக்கும் துன்பம் சொல்ல முடியாது. விதவைகள் மறுமணம் செய்யவே கூடாது.என் தோழியை மீட்டெடுத்து, அவள் நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டும் அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்புள்ள மகளுக்கு —நாற்பத்தி ஐந்து வயதான விதவை பெண்களில், 9.5 சதவீதத்தினரும், 45 வயதுக்கு உட்பட்ட விதவை பெண்களில், 54 சதவீதத்தினரும், மறுமணம் செய்து கொள்கின்றனர். கணவனை இழந்த பெண்கள், கணவனை இழந்த துக்கத்திலிருந்து மீண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் மறுமணம் செய்து கொள்வது நல்லது. படித்த, வேலைக்கு செல்லும் விதவை பெண்களுக்கு, மறுமண வாய்ப்புகள் அதிகம். வயது, ஆரோக்கியம், இளமை மற்றும் பண இருப்பு ஆகியவை, விதவை மறுமணத்திற்கான ஈர்ப்பு சக்திகள்.உன் தோழிக்கு நடந்ததாக நீ சொல்வது அனைத்தும், உனக்கு நடந்திருக்குமோ என, சந்தேகப்படுகிறேன். உன் தோழிக்கு, கருணை அடிப்படையில் பணி கிடைத்தது, 30 வயதில் என, வைத்துக் கொள்வோம். துரத்தி துரத்தி காதலிக்கப்பட்டது, 35 வயதில். அவளுக்கு மறுமணமானது, 37 வயதில். எனவே, 30 ஆண்டுகளாக உன் தோழி, அவளது கணவனால் சுரண்டப்படுகிறாள் என்றால், உன் தோழிக்கு இப்போதைய, வயது, 67. நான் யூகிப்பது சரிதானே... உன் தோழி, அவளது பணியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பாள். அவளது இரு மகன்களுக்கும், வயது, 30ஐ தாண்டியிருக்கும்.இனி, உன் தோழி என்ன செய்ய வேண்டும் தெரியுமா...உன் தோழி, தகுந்த மன நல மருத்துவம் மேற்கொள்வது நல்லது.'முதல் திருமணத்தை மறைத்து, என்னை மறுமணம் செய்து கொண்டான். என்னுடைய பணம், நகைகளை ஏமாற்றி வாங்கி, வீடு கட்டிக் கொண்டான். மனதாலும், உடலாலும் சித்திரவதை செய்கிறான்...' என, உன் தோழி, அவளது கணவன் மீது, மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய சொல். காவல் நிலைய பஞ்சாயத்தின் மூலம், கணவன் கட்டிய வீட்டில், பாதி பங்கை உன் தோழி பெறட்டும். மகன்களுக்கு உரிய வரன் பார்த்து, திருமணம் செய்து வைக்க சொல், உன் தோழியை. ஓய்வூதியத்தில், கணவனுக்கு எதையும் தராமல், உன் தோழியையே முழுதாக அனுபவிக்க சொல்.பொதுவாக, மறுமணம் செய்து கொள்ளும் விதவை பெண்களுக்கு-...* இறந்து போன கணவன் மூலம், உங்களுக்கு குழந்தைகள் இல்லை என்றால், நீங்கள், உங்கள் வயதை விட மூன்று அல்லது ஐந்து வயது மூத்த, திருமணமாகாத ஆண்களை மறுமணம் செய்யலாம். இறந்து போன கணவன் மூலம், உங்களுக்கு ஆண் குழந்தைகள் இருந்தால், குழந்தைகள் இல்லாத விதவனை, நீங்கள் மறுமணம் செய்யலாம்.இறந்த போன கணவன் மூலம், உங்களுக்கு, பெண் குழந்தைகள் இருந்தால், அக்குழந்தைகளை தாத்தா, பாட்டி பராமரிப்பில் விட்டு, குழந்தைகள் இல்லாத விதவனை, நீங்கள் மறுமணம் செய்யலாம்* வேலை இல்லாத, குடி பழக்கம் உள்ள, விவாகரத்து பெற்ற, வயது உருவ பொருத்தமில்லாத ஆண்களை தவிர்ப்பது உத்தமம்* எடுத்தேன், கவிழ்த்தேன் முடிவுகள் ஆபத்தானவை. மறுமணம் செய்து கொள்ள போகும் ஆண், 10க்கு ஐந்து பழுதில்லாமல் இருப்பானா என்கிற ஆழ்ந்த அலசல் அவசியம்* மறுமணத்திற்கு பின் எந்த சொத்துகளை வாங்கினாலும், அது, இருவரின் பெயரில் அல்லது ஒரு சொத்து, கணவன் பெயரில், ஒரு சொத்து, மனைவி பெயரில் வாங்கப்படுவது அவசியம்* கணவன் இறந்த ஒரு ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும். இறந்து போன கணவனின் குழந்தைக்கு, ஐந்து வயது பூர்த்தி ஆகிவிட்டது என்றால், அக்குழந்தை, உங்கள் மறுமண வெற்றியை பாதிக்கும்* முதல் திருமணத்தை மறைக்கும் ஆண்களை, மறுமணம் செய்து கொள்வது படு ஆபத்தானது. அப்படி செய்யப்படும் மறுமணங்கள், இந்து திருமண சட்டப்படி செல்லாதவை* மறுமணம் தோல்வி அடைந்து விட்டது என்றால், நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை; உடனே, விவாகரத்து சட்டப்படி கேட்டு பெறலாம்* இறந்து போன கணவனின் தாம்பத்யத்தையும், மறுமணம் செய்து கொண்ட கணவனின் தாம்பத்யத்தையும் ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல* இறந்து போன கணவனின் நினைவு நாட்களை, மறுமணம் செய்து கொண்ட கணவனின் அனுமதி இல்லாமல், நினைவு கூர்வது மகா தவறு* இறந்து போன கணவனின் உறவினர்களை, மறுமணத்திற்கு பின் நட்பு பாராட்டுவது கூடாது.—என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !