உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —வயது: 22, பெற்றோருக்கு செல்ல மகள். எனக்கு ஒரு தம்பி உண்டு. கல்லுாரியில் முதல் ஆண்டு படித்து வருகிறான்.பி.இ., முடித்து, 'கேம்பஸ் இன்டர்வியூ'வில் தேர்வாகி, பெங்களூரில் இருக்கும் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம், விடுதி வாழ்க்கை என, இனிமையாகவே சென்றது.நான் தங்கியிருந்த விடுதியில், வசதியான, மாடர்னான பெண்களும் தங்கியிருந்தனர். அவர்களோடு பழக பழகத்தான், வெளி உலகமே தெரிய ஆரம்பித்தது. அச்சமயத்தில் தான், என் தோழி ஒருவள் மூலமாக, 'மாடலிங்' செய்ய வாய்ப்பு கிடைத்தது.'மாடலிங், எல்லாருக்கும் அமைந்து விடாது. சினிமாவில் நுழைவதற்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்...' என்று, உற்சாகப்படுத்தினர், தோழியர்.வீட்டில் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு சொல்லாமல், 'போட்டோ ஷூட்'டில் கலந்து கொண்டேன்.நீண்ட நாட்களாக சொந்த ஊருக்கு செல்லாமலும், பெற்றோரிடம் சரியாக போனில் பேசாததாலும், என்னமோ ஏதோ என்று அலறியடித்து, பெங்களூருக்கு வந்து விட்டனர், பெற்றோர்.நான், 'மாடலிங்' செய்யும் விஷயம் அறிந்து, கண்டபடி திட்டி, ஊருக்கே அழைத்து வந்து விட்டனர்.இங்கு வந்த பிறகும், நிறைய வாய்ப்பு வருகிறது. அதை பார்த்ததும், மொபைல் போனை பிடுங்கி உடைத்த அப்பா, அவசர அவசரமாக, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்.தம்பி கூட என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறான். வீட்டில் யாரும் என்னுடன் சரியாக பேசுவதில்லை. 'மாடலிங்' செய்வது, கேவலமானதா... மன உளைச்சலில் இருக்கிறேன். ஓய்வு நேரத்தில்தானே, 'மாடலிங்' செய்கிறேன். மற்றபடி, ஐ.டி., வேலையை சரியாக செய்து, நல்ல பெயரையும் சம்பாதித்துள்ளேன்.இப்போது, நான் என்ன செய்வது, அம்மா. எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள்.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —'மாடலிங்' ஒரு குதிரை; மென்பொருள் நிறுவனப்பணி, இன்னொரு குதிரை. இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது, மகளே.அமைதியான வாழ்க்கை வேண்டுமென்றால், 'மாடலிங்' பணியை நிறுத்தி, மென்பொருள் நிறுவனத்து பணியில் முழுமையாக இறங்கு. 26 வயதில் திருமணம் செய்து, வாழ்க்கையில், 'செட்டில்' ஆகு.'மாடலிங்'கும், சினிமாவும் என் இரு கண்கள் என்றால், குடும்பத்தை பகைத்து, 'மாடலிங்'கில் இறங்கு. கோஹினுார் வைரத்தை துாக்கி பிடித்து, தனி மரமாக நிற்பாய்.'மாடலிங்' வாழ்க்கையோ, சினிமா வாழ்க்கையோ, ஒரு சில ஆண்டுகள் தான். அழகிய புதுமுகங்கள் வந்ததும், நீ கைவிடப்படுவாய்.புகழின் உச்சிக்கு சென்று தலைகீழாக விழுதல் உடலுக்கும், உயிருக்கும் ஆபத்தானது.என் ஆத்மார்த்தமான அறிவுரை...'மாடலிங்' வேண்டாம் மகளே!மின்மினி பூச்சியாக இருப்பதைவிட, கோவில் கோபுரத்து அகல் விளக்காக இரு!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !