அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரிக்கு — நான், 44 வயது ஆண். மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். எனக்கு பெற்றோர் இல்லை. உடன் பிறந்த அண்ணனும், தங்கையும், திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். என் மனைவிக்கு அம்மா மட்டும் உண்டு. அவர் எங்களுடன் வசிக்கிறார்.தனியார் நிறுவனத்தில், பெரிய பதவியில் இருந்தேன். என்னுடைய மேலதிகாரி, தில்லுமுல்லு பேர்வழி. அரசியல் பின்னணியும் கொண்டவர். அலுவலகத்தில் நேர்மையானவன் என்று பெயரெடுத்தவன்.எனக்கு ஒத்துவராத, சட்டத்துக்கு புறம்பான, அலுவலகத்துக்கு கேடு விளைவிக்கும் செயல் ஒன்றை, என்னை வைத்து, நடத்த பார்த்தார், மேலதிகாரி. நான் பிடிவாதமாக இருந்தேன்.அப்படியும் எனக்கு தெரியாமல், என் கீழ் பணிபுரிபவரை கைக்குள் போட்டு, தகாத செயல்களை செய்தார். குட்டு வெளியானதும், என்னை மாட்டி விட்டு விட்டார். எனக்காக, யாரும் பரிந்து பேச வர முடியாதபடி செய்து, வேலையிலிருந்தும் துாக்கி விட்டார்.இதற்கிடையில், மாமியாருக்கு சற்று உடல்நல குறைவு ஏற்பட, சிறிது பணம் கடன் வாங்க வேண்டியதாகி விட்டது. கையிருப்பை வைத்து, சில காலம் சமாளித்தோம். இப்போதும், மேலதிகாரிக்கு, என் மீது இருந்த கோபம் தணியவில்லை.நாங்கள் கடன் வாங்கியவரிடம் சென்று, ஏதேதோ கூறி, எங்களது கடனை உடனே செலுத்தும்படி நெருக்கடி கொடுக்குமாறு செய்து விட்டார்.வெளியூர் எங்காவது சென்று, வேறு வேலை தேடிக் கொள்ளலாம் என்றால், நாங்கள் ஏமாற்றி விடுவோம் என்று தினமும் கண்காணித்து வருகிறார், கடன் கொடுத்தவர். வேறு வேலைக்கு முயற்சி செய்தாலும், எப்படியோ மோப்பம் பிடித்து, அந்த வேலையும் கிடைக்க விடாமல் செய்து விடுகிறார், மேலதிகாரி.இட்லி மாவு அரைத்துக் கொடுத்து, சிறிது சம்பாதிக்கிறார், மனைவி. மாமியாரும், தனக்கு தெரிந்த அப்பளம், வத்தல் போட்டும், விசேஷ வீடுகளுக்கு சென்று பலகாரங்கள் செய்து கொடுத்தும் சம்பாதிக்கிறார்.அவர்களை கஷ்டப்படுத்துகிறோமே என்று மனம் சங்கடப்படுகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால், பயமாக இருக்கிறது. நான் என்ன செய்ய, சகோதரி.— இப்படிக்கு,உங்கள் சகோதரன்.அன்பு சகோதரனுக்கு —எங்கெல்லாம் பணம், புகழ், அதிகாரம் கொட்டிக் கிடக்கிறதோ, அங்கெல்லாம் நர வேட்டை தொடர்ந்து நடக்கும். பணி பாதுகாப்பு அதிகம் உள்ள அரசு பணிகளில், மேலதிகாரி என்பவர், கீழ் பதவிகளில் உள்ளவர்களை விட, சிலபல படிக்கட்டுகள் ஏறி நிற்பவர் மட்டுமே. பணி பாதுகாப்பு அறவே இல்லாத தனியார் பணிகளில், மேலதிகாரி என்பவர், ஏறக்குறைய கடவுள் போல. மேலதிகாரி, தனக்கு கீழ் பணிபுரிபவரை நர வேட்டையாட, பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் ஈகோ. 'நான் பெரியவன், என்னை, நீ விழுந்து வணங்க வேண்டும்...' என்ற எண்ணம்.இரண்டாவது காரணம், ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவராய் இருப்பார், மேலதிகாரி. கீழே பணிபுரிபவர்கள் வேறு மதங்களை சேர்ந்தவராய் இருப்பர். அதனால், மத வெறி பூக்கிறது.மூன்றாவது காரணம், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அழகான பெண்களை அடைவதில், மேலதிகாரிக்கும், கீழ் பணிபுரிவோருக்கும், நிழல்யுத்தம் நடக்கிறது.மகனே, உனக்கு இரு தெரிவுகளை தருகிறேன்; எதில் உனக்கு வெற்றி கிடைக்குமோ அதை தேர்ந்தெடு...உனக்கு கேடு விளைவிக்கும், மேலதிகாரியின் துர்நடத்தைகள் பற்றிய தகுந்த ஆதாரங்கள் உன்னிடம் இருந்தால், தலைமையக மேலதிகாரியை அணுகி, புகார் கொடு. உனக்கு பிரச்னை தரும் மேலதிகாரி, பூமி அதிபர் அல்ல. அவரின் அதிகாரமும், செல்வாக்கும் செல்லுபடி ஆகாத இடங்கள் நிறைய இருக்கும்.உன் மேலதிகாரியை எதிரியாக பாவிக்கும் நிறுவனங்கள் பல இருக்கும். அப்படி ஒரு நிறுவனத்தை அணுகி, புது வேலை பெறு.கடன் கொடுத்தவர், முழு அசலையும், வட்டியும் உடனே செலுத்த நிர்பந்தப்படுத்தினால், 'முடியவே முடியாது...' என, அழிச்சாட்டியமாக தெரிவி. மிகவும் வற்புறுத்தினால், 'பணத்தை, என் முன்னாள் மேலதிகாரியிடம் பெற்றுக் கொள்...' என கூறி விடு. இந்த போராட்டத்துக்கு, மனோதிடமும், விவேகமும் மற்றும் தாக்குபிடிக்கும் திறனும் அதிகம் தேவை.இரண்டாவது தெரிவு...உன்னை தொடர்ந்து வேட்டையாடும், முன்னாள் மேலதிகாரியின் முன், இரு கைகளையும் உயர்த்தி, சரணாகதி அடைந்துவிடு.'நான், உங்களுக்கு தவறான காரியம் ஒன்றில் ஒத்துழைக்க மறுத்து விட்டேன். என்னை வேலையை விட்டு நீக்கி விட்டீர்கள். அத்துடன், உங்களுக்கும் எனக்குமான உறவு துண்டிக்கப்பட்டு விட்டது. இனி, நீங்கள் யாரோ, நான் யாரோ... நான், உங்களை பற்றி யாரிடமும் அவதுாறு பேசவில்லை.'நீங்கள், பெரிய மீன்; நான் சின்ன மீன். உங்களால் என்னை விழுங்க முடியும்; என்னால் உங்களை விழுங்க முடியாது. என்னை விட்டு விடுங்கள். நீங்கள் நீந்தாத கடல் பக்கம் சென்று பிழைத்துக் கொள்கிறேன்...'- என, வெள்ளைக்கொடி காட்டு.எவ்வளவு கல் மனம் கொண்டவராய் இருந்தாலும், உன் இறைஞ்சல் அவரை கரைத்து விடும். சமாதானம், இருபக்க வெற்றி. எந்த பணியில் இருந்தாலும், கொஞ்சம் நாணல் போல் வளைந்து கொடுத்தால் தான், அதிகார சுனாமியிலிருந்து தப்பிப்பாய். கால் பந்து விளையாடுபவர், மிகவும் சாதுர்யமாக விளையாடினால் தான், கோல் அடிக்க முடியும். விதிகளை மீறியும், மீறாமல், கால்பந்து வீரரான மெஸ்ஸி போல் விளையாடு.— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.