அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 28; திருமணமாகி இரண்டாண்டு ஆகிறது. கணவர் வேற்று மதத்தவர் என்பதால், என் வீட்டார் சம்மதிக்கவில்லை. ஆனால், அவரது வீட்டில், மதம் மாறினால் திருமணம் செய்து வைப்பதாக கூறினார், விதவை அம்மா. கணவரால், அம்மாவின் பேச்சை மீற இயலவில்லை. கணவர் வீட்டு உறவுகளாவது வேண்டும் என்று, மதம் மாற சம்மதம் தெரிவித்தேன். ஆனால், இப்போது அவர்கள் மதத்தையும் பின்பற்ற இயலாமல், என் மதத்திற்கும் திரும்ப இயலாமல் மன நோயாளியாகி விட்டேன். எனக்கு குழந்தை பிறந்து, ஓராண்டு ஆகிறது. தற்கொலை மற்றும் குழந்தையை என்னிடமிருந்து பிரித்து விடுவர் என்ற எண்ணம், என்னை மிகவும் கொல்கிறது. கணவர் மற்றும் மாமியார் நல்லவர்கள் தான். எனினும், என் மனம் ஏற்க மறுக்கிறது. எனக்கு நல்ல வழியை கூறுங்கள் அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும், அது தொடர்பான செயல்பாடுகளும், சமய சடங்குகளும் அடங்கியது, மதம்.மனிதர்களை தீமைகளிலிருந்து விலக்கி, நன்மைகள் பக்கம் அழைத்து சேர்ப்பது மற்றும் இறைவனை அடைய ஆயிரக்கணக்கான வழிகளில் ஒரு வழி, மதம். அது, அளவாக இருக்கும் வரை மருந்து, மிஞ்சினால் விஷம். மகளே... கணவர் எந்த மதத்தை சேர்ந்தவர், நீ எந்த மதத்தை சேர்ந்தவள் என்பதை, கடிதத்தில் குறிப்பிடவில்லை. ஆனாலும், நான் யூகித்து விட்டேன். ஒரு மதத்தின் கொள்கைகளால், கோட்பாடுகளால் ஈர்க்கப்படாது, திருமணத்துக்காக மட்டும் மதம் மாறுவதை மறுத்து, அவ்வகை திருமணங்கள் செல்லாது என அறிவித்துள்ளது, அலகாபாத் உயர்நீதிமன்றம். அப்படி பார்த்தால், உன் திருமணமும் செல்லாததாக ஆகிறது.எத்தனையோ இஸ்லாமியர்கள், திருப்பதிக்கு சாமி கும்பிட வருகின்றனர். எத்தனையோ ஹிந்துக்கள், நாகூர் தர்காவுக்கு சென்று வேண்டுதல் நிறைவேறியதால், புறாக்களை பறக்க விடுகின்றனர். மதத்தை ஏன் துாக்கி சுமக்கிறாய் மகளே... அதன் மீது ஏறி, சவாரி செய்.கீழ்க்கண்ட ஐந்து யோசனைகளை உன் முன் எடுத்து வைக்கிறேன். பிடித்ததை தேர்ந்தெடு...* கணவனை சட்டப்படி விவாகரத்து செய்து, தாய் மதத்துக்கு திரும்பு. குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பதை, நீதிமன்றம் முடிவு செய்யட்டும்* பெயருக்கு கணவனின் மதத்திலேயே இரு. ஆனால், உன் மத சம்பிரதாயங்களை பின்பற்றி கொள்* நீ, தாய் மதத்துக்கு திரும்புவதோடு நில்லாமல், கணவனையும் உன் மதத்துக்கு மாற்று. பெரும்பாலான கணவன்மார்கள் இந்த யோசனைக்கு ஒத்து வர மாட்டார்கள்.* எம்மத நம்பிக்கைகளையும் பின்பற்றாமல், ஏறக்குறைய ஒரு நாத்திகர் போல செயல்படு* எல்லா மத நம்பிக்கையும் பின்பற்றும், மதம் சேராத ஆத்திகனாக மாறு. குழந்தையை பிரித்து விடுவர் என்கிற உன் எண்ணம் மிகை. உன் தற்கொலை எண்ணத்துக்கு, வெறும் மதம் காரணமல்ல. அதற்கும் மேலே வேறெதுவோ ஒளிந்திருக்கிறது. நீ ஒரு மனநோயாளி போல் சிந்திக்கிறாய். நம்பிக்கையே ஆன்மாவின் நங்கூரம். நீ கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியில், பெருங்கடல்.உலகின் மிகச்சிறந்த கடவுள், மனசாட்சி. மனசாட்சியின் படி நடந்து, வாழ்க்கையை எளிதாக்கு மகளே. மதம் துாக்கி சுமக்கும் பாரமல்ல, சிறகுகள் என, உணர் தங்கம்.— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.