அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மா — தோழியின் மகிழ்ச்சிக்காக ஏங்கும், இன்னொரு தோழியின் கடிதம்.என் தோழி அவளுடைய வீட்டை எதிர்த்து, மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்டாள். காதலிக்கும் போது, அவரும், அவர் குடும்பமும் நல்லவர்களாக தெரிந்தனர். அந்த வீட்டிற்குள் போன பிறகு தான், அவருடைய அப்பா - அம்மா சரி இல்லை என்பது தெரிந்தது; குடும்பத்தில் ஏகப்பட்ட கடன். எல்லாம் சகித்து, வாழ ஆரம்பித்தாள். பிறகு, ஒரு பிரளயம் அவள் வாழ்க்கையில் வந்தது. இவர்களுக்கு திருமணம் ஆன ஆறு மாதத்தில், கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது, தெரிய வந்தது. அந்த பெண்ணுக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த தொடர்பை விட்டு விடும்படி, இரண்டு, மூன்று ஆண்டுகள் சண்டையில் போய், விவாகரத்து செய்யும் அளவிற்கு வந்து விட்டனர். 'உன்னோடு தான் வாழ்வேன்; நீதான் வேண்டும்...' என்று ஆசை காட்டி, சேர்ந்து வாழ துவங்கினார், தோழியின் கணவர். இப்போது, திருமணம் முடிந்து நான்கு ஆண்டிற்கு பிறகு, ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. மீண்டும், அதே பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.'இப்ப தான் நமக்கு குழந்தை பிறந்துள்ளது. இனிமேல் நீ ஒழுக்கமா இருக்கணும்...' என்று கூறியுள்ளாள், தோழி.'என்னால அந்த பெண்ணை விட முடியாது. எனக்கு நீங்க இரண்டு பேரும், இரண்டு கண்கள் மாதிரி. நீ அவ கூட, 'அட்ஜெஸ்ட்' பண்ணிட்டு இரு, இல்லைன்னா விட்டு விலகிடு...' என, சண்டை போடுகிறார். என் தோழி ஏதாவது கூறினால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவள் என்று கூட பார்க்காமல் அடிக்கிறாராம். அவளது அம்மா வீட்டில் இப்போது தான், சேர்த்து கொண்டுள்ளனர். தினமும் என்னிடம் சொல்லி அழுகிறாள்.தோழியின் கணவர், 'ஆக்டிங்' டிரைவர் வேலைக்கு போகிறார். அதுவும், தினமும் போவது இல்லை. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை மருந்து வாங்க வேண்டும் என்று, என் தோழி போன் செய்தால், நம்பர், 'பிசி பிசி' என்று வரும். திரும்ப அழைப்பதும் இல்லை. கடன்காரன் கழுத்தை நெறிக்கும்போது, என் தோழியிடம் வந்து, 'பணம், 'ரெடி' பண்ணி கொடு...' என்று தொல்லை பண்ணுகிறார். 'போலீசில் புகார் செய்யப் போகிறேன்...' என்று சொன்னால், 'உங்க அப்பா - அம்மாகிட்ட வந்து, நான் சண்டை போடுவேன்...' என்று, 'ப்ளாக்மெயில்' பண்ணுகிறார். அப்பா - அம்மாவுக்கு தெரிந்தால் வருந்துவர் என்று, கணவரின் அயோக்கியத்தனத்தை மறைக்கிறாள், தோழி. குழந்தைக்கு பால் பற்றாக்குறையாக உள்ளதாக, மருத்துவரிடம் கேட்டால், 'மிகுந்த மன அழுத்தம் இருந்தால், பால் சுரப்பு குறையும்...' என, கூறியிருக்கிறார். என் தோழிக்கு நல்ல வழி காட்டுங்கள் அம்மா. — இப்படிக்கு,அன்பு மகள்.அன்பு மகளுக்கு — கடிதத்தில் உன் தோழி என்ன படித்திருக்கிறார் என்று, நீ குறிப்பிடவில்லை.உன் தோழி செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...* கணவனின் துர்நடத்தையை மகளிர் காவல்நிலையத்தில் புகார் பண்ணட்டும், உன் தோழி. கணவரின், 'பிளாக் மெயிலுக்கு' சிறிதும் பயப்பட வேண்டாம். போலீஸ் நாலு மிதி மிதித்தால் தோழியின் கணவருக்கு புத்தி வரும்* உன் தோழியை உடனடியாக தாய் மதத்திற்கு திரும்ப சொல்* ஒரு பெண் வழக்கறிஞரை வைத்து, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரட்டும், உன் தோழி. கடன்காரன், பெண் பித்தன், தான் பெற்ற குழந்தைக்கு மருத்துவ செலவு செய்யாதவன், வேலைக்கு தினமும் செல்லாத வாழைப்பழ சோம்பேறியான அவன், கணவன் என்ற ஸ்தானத்துக்கு துளியும் அருகதை இல்லாதவன்* குழந்தைக்கு கணவன் வைத்திருக்கும் பெயரை மாற்றி, தாய் மத பெயரை சூட்டட்டும். தாய் மதத்துக்கு சட்டரீதியாய் மாற தேவையான ஆலோசனைகளை, ஒரு வழக்கறிஞரிடமிருந்து பெறலாம்* பெற்றோருடன் மனம் விட்டு பேச சொல். கடந்த கால செயல்பாடுகளுக்கு மன்னிப்பு கேட்கட்டும். குழந்தையை அவள் பெற்றோர் பார்த்துக் கொள்வர். தோழி மேலே படித்துக் கொண்டே எதாவது ஒரு வேலைக்கு போகட்டும்* தோழியின் வயது, 30 இருக்கும் என, யூகிக்கிறேன். சட்டப்படி விவாகரத்து கிடைத்தவுடன், மறுமணத்திற்கு அவசரபட வேண்டாம். மீண்டும் சூடு படாமல் கவனமாய் இருக்கட்டும்* விவாகரத்து கிடைத்ததும், தாய் மதத்திற்கு திரும்பியதும், கணவனிடமிருந்து விடுதலை பெற்றதை பத்திரிகையில் விளம்பரமாய், தோழியை வெளியிடச் சொல்* உன் தோழி, தன் மொபைல் போன் எண்ணை மாற்றட்டும். பழைய ரேஷன்கார்டிலிருந்து புது ரேஷன் கார்டுக்கு பதிவு பண்ணச் சொல்* உப்புமூட்டை ஏறி, காலையும் இடறிவிடும் சுயநல மிருகத்தை துறந்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்கட்டும் உன் தோழி. வாழ்த்துக்கள்!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.