உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மா —எனக்கு, 49 வயதாகிறது. 10 ஆண்டுகளாக பிசினஸ் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடன் மூன்று பேர் வேலை செய்கின்றனர். நல்ல வருமானம். திருமணமாகி, 24 ஆண்டுகள் ஆகிறது. சொந்த தாய் மாமன் மகளை தான் மணந்தேன்.முன்பு, ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அங்கு என்னுடன் பணிபுரிந்த என் அன்புத் தோழி, என்னை நன்கு அறிந்தவள்.முதல் திருமணம் முடிந்த, மூன்று ஆண்டுகள் கழித்து, மாமன் மகளுக்கு தெரியாமல், முன்பு இருந்த அலுவலக தோழியை, இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். ஆனால், இரண்டாவது மனைவியோ, எங்கள் திருமணத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று, ஐந்து ஆண்டுகள் கழித்து, திடீரென என் வீட்டிற்கு வந்து விட்டாள். அன்றிலிருந்து இன்று வரை, 15 ஆண்டுகளாக நிம்மதியற்ற வாழ்வு வாழ்கிறேன். முதல் மனைவிக்கு ஒரு பெண், ஒரு ஆண். 23, 16 வயது. இரண்டாவது மனைவிக்கு, 20, 15 வயதில் இரண்டு பெண்கள். நால்வரும் நன்கு படித்துக் கொண்டிருக்கும் நற்குணம் மிக்கவர்கள்.தற்போது, இரண்டாவது மனைவி தன் பெற்றோருடன், நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று துாரத்தில், இரண்டு மகள்களுடன் வசிக்கிறாள்.பகலில் நேரம் கிடைக்கும்போது சென்று, அவர்களை பார்த்து வருவேன். ஆனால், என் முதல் மனைவியோ, என்னை உளவு பார்ப்பதே வேலையாக உள்ளார். அதனால், பிள்ளைகளை சரி வர கவனிப்பதில்லை. அதே நேரத்தில், அங்கும் நிலைமை மோசம்.'ஏன் அப்பா, இங்கு ஒரு நாள் கூட தங்க மாட்டீங்களா...' என, இரு மகள்களும் பாசத்தில் அழுகின்றனர். என்னால், என் தாய் மாமன் மகளை சமாளிக்க முடியவில்லை... நான் என்ன செய்ய, தாங்கள் தான் எனக்கு ஒரு நல்ல வழி சொல்ல வேண்டும், அம்மா.— இப்படிக்கு,அன்பு மகன்.அன்பு மகனுக்கு —இரண்டு திருமணங்கள் செய்வதற்கான தண்டனை, ஆண்களுக்கு இரு மனைவியர், இரு மனைவியர் வழி பிறந்த குழந்தைகள் மூலம் கிடைத்து விடுகிறது. ஆப்பு அசைத்த குரங்கு, நீ. வால் வசமாய் மாட்டிக் கொண்டது. ரத்தக்காயம் இல்லாமல் வாலை எடுக்க ஆலோசனை கேட்கிறாய். ஒரு குரங்கு படும் வேதனையை பார்த்து, பல குரங்குகள் திருந்தாதா... இரண்டாம் கல்யாணம் எனும் ஆப்பை அசைக்காமல், நிம்மதியாய் வனம் சுற்றாதா என்று ஏங்குகிறேன்.முதல் மனைவியிடமும், இரண்டாம் மனைவியிடமும் தனித்தனியாக மனம் விட்டு பேசு. இரண்டு பெண்மணிகளும் தத்தம் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிக்கத் தயாரா என, கேள். முடியாது என தான் சொல்வர்.ஒரு வாரத்தை இரண்டாக பிரி. முதல் நான்கு நாட்கள் முதல் மனைவி குடும்பத்துடன் இரு. மீதி மூன்று நாட்கள், இரண்டாவது மனைவி குடும்பத்துடன் இரு. இருவரையும் சமமாக நடத்து. இந்த ஆலோசனைக்கு இரு பெண்களும் ஒத்துக்கொண்டால், இருவர் கால்களிலும் விழு. ஒட்டுமொத்த சரணாகதியே நல்லது. உன் யோசனைக்கு ஒத்துவராத மனைவியை விவாகரத்து செய்து, குழந்தைகளுக்கு பணம் கொடுத்து, செட்டில் செய்து விடுவேன் என, பயமுறுத்து.இரண்டாம் மனைவியை திருமணம் செய்து கொண்டாயே... அது சட்டப்பூர்வமானதா? சட்டப்பூர்வமானது என்றால், மேற்சொன்ன ஆலோசனையை அமல்படுத்து. சட்டப்பூர்வமானது இல்லை என்றால், போதுமான பணம் கொடுத்து, செட்டில் செய்து, குட்பை சொல்லி விடு.உன் இரு மனைவியருக்கு இடையே கோவிலிலோ அல்லது ஹோட்டலிலோ ஒரு, 'கெட் டு கெதர்' ஏற்பாடு செய். முட்டல் மோதல்களுக்கு பிறகு, இருவரும் பேச ஆரம்பித்து விடுவர். ஒரு கிழட்டு ஆண் சிங்கத்தை, இரு பெண் சிங்கங்கள் எப்படி பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதை, அவர்கள் கூடி முடிவு செய்யட்டும்.முதல் மனைவி உன்னின், 90 சதவீத ஷேர் ஹோல்டர். அவரின் ஷேர்கள் திருடப்படாமல் இருக்க, அவர் உளவு வேலை பார்க்கத்தான் செய்வார். அவரை குறை சொல்ல உனக்கு யோக்கியதை இல்லை. பிரச்னையை சுமூகமாக தீர்க்க முயற்சிப்பதே புத்திசாலித்தனம்.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !