அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —வயது: 40. என்னுடன் சேர்த்து பெற்றோருக்கு, நான்கு பெண்கள். நான், இரண்டாவது பெண். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.மத்திய அரசு பணியில் இருந்த என் அப்பா, நான்கு பேருக்கும், நல்ல இடத்தில், சிறப்பாக திருமணம் செய்து வைத்தார். எந்த பண்டிகை வந்தாலும், நான்கு பேருக்கும் ஒரே மாதிரியாக, போதும் போதும் என்ற அளவுக்கு சீர் செய்வார்.பணி ஓய்வுக்கு பின்னரும், ஓய்வூதியத்தை இதற்காகவே செலவழித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், உடல்நல குறைவால், இறந்து விட்டார். அப்பாவின் காலத்துக்கு பிறகும், அம்மா, சீர் செய்வதை நிறுத்தவில்லை. சமீபத்தில், சொந்த வீட்டை விற்று, அதில் எங்களுடைய பங்கை கொடுத்தார், அம்மா.சொந்த ஊரில், அத்தை, சித்தி, மற்ற உறவினர்கள் வசிக்கும் இடத்தில் சிறிய வாடகை வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார், அம்மா. அப்பாவின், 'பென்ஷன்' மட்டுமே அவருக்கு உதவுகிறது.இந்நிலையிலும், நான்கு மாப்பிள்ளைகளும், 'பிறந்த வீட்டிலிருந்து சீர் வாங்கி வரவில்லையா?' என்று கேட்கின்றனர். அம்மாவின் நிலையை எடுத்து சொல்லியும், 'அவருக்கு என்ன செலவு இருந்து விட போகிறது. 'பென்ஷன்' வாங்குகிறாரே...' என்கிறார், கணவர்.அம்மாவை கஷ்டப்படுத்த, நான் விரும்பவில்லை. தங்கைகள் இருவரும், வசதியில் குறைந்தவர்கள். அவர்களுக்கு, அம்மா மாதா மாதம் கொஞ்சம் பணம் அனுப்பி வைக்கிறார். அவர்களும், 'இனி, பணம் அனுப்ப வேண்டாம்...' என்று தான் கூறுகின்றனர். எனினும், அம்மா அனுப்பி வைக்கிறார்.நானும், மூத்த அக்காவும், சொந்த வீடு, தொழில் என்று வசதியாக இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், அம்மாவிடம் சீர் செய்ய சொல்லி கேட்பதற்கு அசிங்கமாக இருக்கிறது. சுயமரியாதையை இழந்து விடுவோம் என்றும், சகோதரிகளுக்கு இடையே உள்ள அன்பை கெடுத்து விடும் என்றும் அஞ்சுகிறேன்.கணவரையும், அவரது வீட்டினரையும் திருத்துவது எப்படி?— இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.அன்பு மகளுக்கு —இறந்து போன அப்பாவின் மீது நன்றி பாராட்டுவதும், அம்மாவின் மீது கரிசனம் கொள்ளும் உங்கள் நால்வரின் நல்ல குணங்களைப் பாராட்டுகிறேன்.ஒரு ஓய்வூதியர், ஓய்வூதியம் பெறுவதும், ஓய்வூதியர் இறந்ததும், அவரின் மனைவி குடும்ப ஓய்வூய்தியம் பெறுவதும், அவர்களின் அடிப்படை உரிமை. வயோதிகத்தில் அவர்கள் சொந்தக்காலில் நிற்க, அந்த ஓய்வூதியமே உதவும். உன் அம்மா, வீட்டை விற்று நான்கு மகள்களுக்கும் பங்கு வைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. தன் காலத்துக்கு பின், வீட்டை பங்கு பிரித்துக் கொள்ளுங்கள் என, அமைதியாக இருந்திருக்க வேண்டும்.வீட்டு பங்கு வரும் வரை, சீர் செனத்தி மீது, புகுந்த வீட்டார் அதிகம் ஆவலாதி கொண்டிருக்க மாட்டார்கள். இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...* உங்கள் அம்மாவை வாடகை வீட்டை காலி பண்ணச் சொல்லுங்கள். ஆண்டில் மூன்று மூன்று மாதங்களாக பிரித்து, உங்கள் நால்வர் வீட்டிலும் அம்மாவை தங்க சொல்லுங்கள். இந்த ஏற்பாட்டால், உங்கள் அம்மாவின் தனிமை நோய் அகலும். தினம் பேரன், பேத்திகளுடன் அளவளாவி மகிழ்வார். பாசம் கொட்டி பாசம் பெறுவது, இருவழிப்பாதை* நான்கு சகோதரிகளும், அவரவர் கணவரிடம், 'சீர் செனத்தி நீங்க வாங்கின வரைக்கும் போதும். இனி, சீர்னு வாயைத் திறந்தீங்க; நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி, 40 கேள்விகள் கேட்பேன்.'பிச்சைக்காரர்களா நீங்க... எப்ப பாத்தாலும் திருவோடை ஏந்திக்கிட்டு நிக்கறீங்க? நாளை உங்கள் மகளின் புகுந்த வீட்டார், சீர் கேட்டு வரும் போது தான், அதன் அவலம் உங்களுக்கு புரிபடும். சீர் செனத்தி கேட்கக் கூடாது என்று, உங்கள் பெற்றோரிடமும் அறிவுறுத்துங்கள்...' என, கண்டிப்பாக கூறுங்கள்* அம்மாவை தக்க துணையுடன், ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு செய்யும் ஆன்மிக சுற்றுலாக்களுக்கு அனுப்புங்கள்* அம்மா வயது உறவினர்களை, தோழிகளை வரவழைத்து, அவருடன் அளவளாவ வையுங்கள்* அம்மாவுடன் வாரா வாரம் கோவிலுக்கு போய் வாருங்கள்* அம்மாவின் கை பக்குவத்தை சமைக்கச் சொல்லி, ருசி பாருங்கள். அம்மாவுக்கு பிடித்த சமையலை நீங்கள் செய்து, அவருக்கு ஊட்டுங்கள்* எருது கதை தெரியும் அல்லவா, உனக்கு... நான்கு எருதுகள் ஒன்று சேர்ந்தால், வேட்டை சிங்கத்தை விரட்டி விடலாம். உங்களின் ஒற்றுமை, புகுந்த வீட்டாருக்கு ஒரு எச்சரிக்கை மணி. சீர் செனத்தி கேட்டால், சொல்லடி படுபயங்கரமாக விழும் என்பது அப்பட்டமானால், புகுந்த வீட்டார் தலைதெறிக்க ஓடி விடுவர்.பெற்ற தாயின் காலில் தான், சொர்க்கம் இருக்கிறது மகளே! இன்று, உங்கள் அம்மாவிற்கு செய்யும் பணிவிடை, பின்னாளில் உங்கள் மகள் மூலம் இரட்டிப்பாய் கிடைக்கும்.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.