உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள தோழிக்கு —வயது: 52. கணவர் வயது: 56. ஒரே மகன். கல்லுாரியில் படித்து வந்தான்.எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் மகளும், என் மகன் படிக்கும் அதே கல்லுாரியில் படித்தாள். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள். ஒரு தோழியாக மகனுடன் பழகினாள். நாங்கள் அதை விகல்பமாக எடுத்துக் கொள்ளவில்லை.அவளுடைய அம்மா, வெளிநாட்டில் வசிக்கும், தன் மூத்த மகளை பார்க்க போகும் போதெல்லாம், இளைய மகளான இவளை, எங்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்வார்.ஒருநாள், அவளை காதலிப்பதாகவும், அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி, பதறினான், என் மகன்.நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், காதில் வாங்கவே இல்லை, மகன்.சிறிது நாளில், அவளுக்கும், வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளைக்கும் திருமணம் பேசினர், அவள் பெற்றோர்.என் மகன், தன் காதலை அவளிடம் கூற, அவளோ, ஏதேதோ சொல்லி அவமானப்படுத்தி இருக்கிறாள்.இதனால், மன வருத்தமடைந்த மகன், தற்கொலை செய்து கொண்டான். மகனுக்கு சரியான வழி காட்டாமல், பறிகொடுத்து தவிக்கிறோம், நாங்கள்.அப்பெண்ணோ, பணக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து, எந்த குற்ற உணர்வும் இல்லாமல் வெளிநாட்டுக்கு பறந்து விட்டாள்.எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மன உளைச்சலில் நாங்கள், தவறான முடிவெடுத்து விடுவோமோ என்று பயமாக இருக்கிறது.நாங்கள் இதிலிருந்து விடுபட, நல்ல வழி காட்டுவீர்கள் என்று நம்புகிறேன், தோழி.— இப்படிக்கு,அன்பு தோழி.அன்பு தோழிக்கு —ஒரு தலை காதல் வயப்பட்டு, உன் மகன் தற்கொலை செய்து கொண்டது, ஒரு துன்பியல் நிகழ்வாகும். உனக்கும், கணவருக்கும் பல மாதிரியான வார்த்தைகளை கூறி ஆறுதல் படுத்தியிருக்கக்கூடும் தற்கொலை என்பது, நுட்பமான மைக்ரோ நொடி கோழைத்தனம். இனி, நீ செய்ய வேண்டியது-...* மகனின் ஒருதலை காதலை, அவள் பக்குவமாக கையாண்டிருக்கலாம். அவளை சபிக்காதே. அவளுக்கு மகனாய் கூட, உன் மகன் மறுபிறப்பு எடுக்கலாம். பிறவிகளின் சூட்சமத்தை யார் அறிவர்!* உறவுக்கார பையன்களை அதிகாரப்பூர்வம் இல்லாமல் தத்து எடுத்து, அவர்களை படிக்க வைத்து, திருமணம் செய்து வைக்கலாம். ஆண்டுக்கு இரு திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கலாம். அனாதை இல்லம், முதியோர் இல்லத்தின் ஒருநாள் செலவை, 'ஸ்பான்சர்' செய்யலாம். இரு மனநல ஆலோசகர்களை பணிக்கு அமர்த்தி, தற்கொலை தடுப்பு மையம் நடத்தலாம்.* ஒரே மகனின் மரணத்தை தத்துவார்த்தமாக எடுத்துக் கொள்ள கூறி, எளிதாக ஆறுதல் வார்த்தை கூறி விடலாம். ஆனால், அந்த பிரிவுத்துயர் சம்மட்டிக் கொண்டு இதயத்தை நொடிக்கொரு தரம் சாத்துகிறதே! சம்மட்டி தாக்குதலை நிறுத்த என்ன செய்வது? சமூகசேவைகள், ஆக்கரீதியான பொழுதுபோக்குகள், ஆன்மிகம், கர்நாடக இசை, மகன் வயதுள்ள இளைஞர்கள் அனைவரின் மீது பாசத்தை கொட்டுதல், இளவயது மகன், மகளை இழந்த பெற்றோருடன் கைகோர்த்தல் மூலம் நீயும், கணவரும் மனஆறுதல் அடையலாம். காலம், உங்கள் துக்கத்திற்கான மருந்தாகட்டும்.உன் மகனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.— -என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !