உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள சகோதரிக்கு —என் வயது 42, கணவர் வயது: 46. நான், இல்லத்தரசி. ரயில்வே துறையில் பணிபுரிகிறார், கணவர். எங்களுக்கு ஒரே மகள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். சொந்த பந்தங்களும் சாதாரண குடும்பத்தினர் தான். கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் பட்டப் படிப்பு படிக்கிறாள், மகள். படிப்பை முடித்ததும், அரசியலில் ஈடுபட போவதாக கூறி வருகிறாள்.'முதலில் படிப்பை முடி, பிறகு பார்த்துக் கொள்ளலாம்...' என்று கூறியுள்ளோம்.பாடப் புத்தகங்களை விட, அரசியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை நுாலகத்திலிருந்து எடுத்து வந்து படிக்கிறாள். 'டிவி'யில், அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கிறாள். கண்ணாடி முன் நின்று, உரக்க, தலைவர்களின் பேச்சை பேசி பார்க்கிறாள்.'இதெல்லாம் நமக்கு சரி வராது. மற்ற பெண்களை போல், படித்து, வேலைக்கு செல் அல்லது திருமணம் செய்து வைக்கிறோம்...' என்று கூறினால், கோபப்படுகிறாள். ரொம்ப வற்புறுத்தினால், விபரீத முடிவு எடுத்து விடுவாளோ என்று பயமாக உள்ளது.அவளை திருத்த நல்ல வழி சொல்லுங்கள், சகோதரி!—இப்படிக்கு,உங்கள் சகோதரி.அன்பு சகோதரிக்கு —இந்த பதிலை உன் மகளிடம் படிக்க கொடு.உலகின் எல்லா அரசியல் கட்சிகளும், கார்ப்பரேட் அமைப்புகளாய் தான் செயல்படுகின்றன.உலக அரங்கில், பெண்களுக்கு, அரசியல் முக்கியத்துவம் தரும் நாடுகள், -ருவாண்டா, கியூபா, நிகரகுவா, நியூசிலாந்து, மெக்சிகோ, ஸ்வீடன், கிரானடா, அண்டோரா மற்றும் பொலிவியா போன்றவை.இந்தியாவில், ஒரு ஆண், கவுன்சிலராவதற்கு, குறைந்தது, 20 ஆண்டுகள் ஆகின்றன. அதன்பின், அவன் முட்டி மோதி, எம்.பி.,யாகவோ, எம்.எல்.ஏ.,வாகவோ ஆக, அடுத்த, 30 ஆண்டுகள் ஓடி விடுகின்றன.இங்கு, அபூர்வமாய் ஒரு பெண், அரசியலில் வெற்றி பெற்றால், அவளுக்கு பின் அவளது தந்தையோ, சகோதரனோ, கணவனோ, மகனோ நின்று இயக்குகின்றனர். யாருடைய பொம்மலாட்டமும் இன்றி, ஒரு பெண், அரசியலில் சுதந்திரமாக இயங்கினால், அவளது நடத்தை மீது களங்கம் கற்பிக்கின்றனர்.ஓட்டுக்கு துட்டு அரசியல், மத அரசியல், மொழி அரசியல், பிராந்திய அரசியல் நிலவும் இன்றைய சூழலில், பெண்களுக்கான அரசியல் வாய்ப்பு, 10 லட்சத்தில் ஒன்று தான். அரசியலில் வெற்றி பெற, பெண்கள் கொடுக்க வேண்டிய விலை அதிகம்.'உன்னுடைய கனவுகளின் அளவு, எப்போதுமே உன் நடப்பு செயல்திறனை விட, அதிகமாக இருக்க வேண்டும். உன் கனவுகள் உன்னை பயமுறுத்தவில்லை என்றால், அவை மிக மிக சாதாரணமானவை என்றே நினை...'- என்றார், ஆப்ரிக்க முன்னாள் ஜனாதிபதி, எலன் ஜான்ஸன் சர்லீப்.மகளே... உன் பேச்சுத் திறமை, வாசிப்பு, அரசியல் கூர்நோக்கு எதுவும் வீணாகாது. ஐ.ஏ.எஸ்., - இந்தியக் குடிமையியல் பணிகளுக்கான தேர்வு எழுது. எட்டு லட்சம் பேர் எழுதினால், மூன்றில் ஒரு பகுதியினர் தான், பிரதான தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். அரசியலை விட இதில் வெற்றிக்கான சாத்தியம் பல மடங்கு அதிகம். மாவட்ட ஆட்சி தலைவரானால், ஆறு எம்.எல்.ஏ.,க்களின் மேலே நீ. ஓய்வு பெறுவதற்கு முன், நீ தலைமை செயலரானால், முதல்வருக்கு இணையான அதிகாரம் கொண்டவளாக திகழலாம். கல்வியின் மூலம் அதிகாரத்தை பெற்று, மக்கள் சேவையாற்று மகளே!— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !