உள்ளூர் செய்திகள்

புரட்டாசி புடலங்காய்!

வெகு சுலபமாக முடியக் கூடிய செயலை, 'புடலங்கா விஷயம்... இதைப் போய் பெரிசுபடுத்திகிட்டு இருக்கியேப்பா...' என்பது வழக்கம்.புடலங்காயை அவ்வளவு சாதாரணமாக நாம் எடை போட்டு விட்டோம். ஆனால், ஆன்மிகத்தில் புடலங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் தந்துள்ளனர். அதிலும், புரட்டாசி சனியன்று, புடலங்காய் கூட்டு சமைத்து, பெருமாளுக்கு நைவேத்யம் செய்து பிரசாதமாக எடுத்துக் கொண்டால், குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும்.புரட்டாசி சனியன்று, நாம் பெருமாளுக்கு முக்கியத்துவம் தருகிறோம். இதற்கு ஆன்மிக, அறிவியல் காரணங்கள் உள்ளன. வாரத்தின் ஏழு நாட்களிலும், சூரியனிலிருந்து ஒவ்வொரு விதமான கதிர்கள், பூமியை அணுகுகின்றன.ஞாயிறன்று பொன்னிற கதிர், திங்கள் - வெண்மஞ்சள், செவ்வாய் - சிவப்பு, புதன் - பச்சை, வியாழன் - மஞ்சள், வெள்ளி - பால் வெண்மை, சனி - கருப்பு நிற கதிர்கள் பூமியை அணுகுகின்றன.இதில், சனியின் நிறம் கருப்பு. புரட்டாசி மாதத்தில் இந்த நிறத்திற்கு மகத்துவம் அதிகம். காரணம், இது முன்னோர்களுக்குரிய மாதம். மகாளய பட்சம் எனப்படும், 15 நாள், முன்னோர் வழிபாட்டு காலம், இந்த மாதத்தில் தான் வருகிறது.மனிதன் மரணமடைந்ததும், அவனது ஆன்மா, சனிக்குரிய கரியநிற உலகில் தான் தங்கும். அடுத்து எங்கு செல்வதென தெரியாமல், இருளில் தவிக்கும். இந்த சமயத்தில், மறைந்த ஆன்மாவின் வாரிசுகள், எள் கலந்த மாவு பிண்டத்தை, நீரில் கரைப்பர். அது, அந்த ஆன்மாவுக்கு உணவாகும்.அத்துடன் கோவில்களிலும், வீட்டு வாசலிலும் தீபம் ஏற்றுவர். இது இருளுலகில் தவிக்கும் ஆன்மாவுக்கு, அடுத்து செல்வதற்குரிய பாதையைக் காட்டும். இதை மோட்ச தீபம் என்பர். அந்த ஆன்மா, நிறைந்த புண்ணியம் செய்திருந்தால் மோட்சம் செல்லும், இல்லாத பட்சத்தில் மறு பிறப்பெடுக்கும்.மொத்தத்தில், அந்த ஆன்மா மீண்டும் பழைய நிலையை அடைய உதவுவது, எள். எள்ளின் நிறம் கருப்பு. இது பெருமாளின் உடலிலிருந்து தோன்றியது. இதனால் தான் புரட்டாசி சனியன்று, பெருமாள் கோவிலில் எள் தீபம் ஏற்றுகின்றனர். அன்று பெருமாளை வணங்குவதன் நோக்கம், நம் முன்னோர் நற்கதியை அடைய வேண்டும் என்பதே.இத்துடன், புரட்டாசி சனியன்று மதியம், புடலங்காய் கூட்டு சமைத்து பெருமாளுக்கு படைக்க வேண்டும்.புடலங்காயிலுள்ள விதைகள், நம் முன்னோர்களின் வித்துக்களாக கருதப்படுகின்றன. இதன் மூலம், வம்சம் விருத்தியடையும். குழந்தை இல்லாதவர்கள், இந்த முயற்சியை எடுக்கலாம். மாலையில், பெருமாளுக்கு பாயசம் படைத்து உண்ண வேண்டும்.புரட்டாசி சனியின் மகத்துவம் அறிந்து, பெருமாள் வழிபாடு, சனி வழிபாடு, முன்னோர் வழிபாடு செய்யுங்கள். முன்னோர்களுக்கு மரியாதை செய்து, அவர்களின் ஆசியுடன் நல்வாழ்வைப் பெறுங்கள். தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !