கோலத்தில் கலக்கும் ரங்கவல்லி அணி!
சமீபத்தில், சென்னை, வடபழநி முருகன் கோவிலுக்கு, காஞ்சி, விஜயேந்திரர் வந்தார். அவரை, வித்தியாசமான முறையில் வரவேற்பதற்காக, வரும் வழியெங்கும், வண்ண கோலம் போட்டிருந்தனர்.அழகாகவும், பிரமாண்டமாகவும், புதுமையாகவும் இருந்த கோலங்களை பார்த்து மகிழ்ந்த, விஜயேந்திரர், 'யார் இந்த கோலங்களை போட்டது...' என்று விசாரித்து, பாராட்டினார்.அவர்கள், ஒருவர் இருவர் அல்ல; ஒரு அணி. அந்த அணிக்கு பெயர், ரங்கவல்லி அணி.சென்னையை சேர்ந்தவர், லட்சுமி தேவி. கோலம் போடுவதில் ஆர்வம் அதிகம். தான் போட்ட கோலங்களை, 'வாட்ஸ் - ஆப்'பில், தோழியருக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அவர்களும், பதிலுக்கு தாங்கள் போட்ட கோலங்களை அனுப்பி வைத்தனர்.'நாம் போடும் கோலங்களை, நமக்குள் மட்டுமே பரிமாறி கொள்கிறோமே... இதை, பொது மக்கள் பார்வைக்கு எடுத்து சென்றால் நன்றாக இருக்குமே...' என்று முடிவு செய்தனர்.ரங்கவல்லி என்ற பெயரில், கோலமிடும் பெண்கள் அணியை அமைத்தனர். இந்த அணியின் அழகிய கோலங்களை பார்த்து, வடபழநி முருகன் கோவிலில், நவராத்திரிக்கு கோலம் போட, முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.நவராத்திரி விழாவிற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோலங்களை பார்த்து பாராட்டினர். அதன்பின் வந்த அழைப்பின்படி, இந்த அணியினர், சென்னை மற்றும் கர்நாடக மாநிலம், பெங்களூரு உட்பட, 29 கோவில்களில் கோலமிட்டு, பாராட்டுகளை பெற்றுள்ளனர். விரைவில், ஆந்திர மாநிலம், கர்நுால் மாவட்டத்தில் உள்ள, மந்திராலயம் கோவிலுக்கு செல்ல இருக்கின்றனர்.'இப்போது, ரங்கவல்லி அணியில், 250 உறுப்பினர்கள் உள்ளனர். எங்கே கோலம் போடப் போகிறோம் என்பதை முன்கூட்டியே சொல்லி விடுவோம். உறுப்பினர்கள், அந்த பகுதிக்கு வந்து விடுவர். பின், கோலமிட்டு திரும்பி விடுவோம்.'கோலம் போடுவது, நம் பாரம்பரியமான அழகு கலை. இதனால், மனதிற்கும், உடம்பிற்கும், பயிற்சி கிடைப்பதுடன், ஆத்ம திருப்தியும் உண்டாகிறது. எங்கே கோலமிடுவது என்றாலும், அதற்கு தேவையான பொருட்களையும் நாங்களே கொண்டு செல்வோம்.'இதில், நாங்கள் செய்யும் புதுமையை பார்த்து, இளைய தலைமுறை பெண்கள் பலரும், 'எங்களுக்கும் இதை சொல்லிக் கொடுங்கள்...' என்று கேட்கின்றனர். நாங்களும், சந்தோஷமாக சொல்லிக் கொடுக்கிறோம்.'ரங்கவல்லி அணி சார்பாக, மிக அதிக கோலங்கள் போட்டு, 'கின்னஸ் ரிக்கார்ட்' செய்ய வேண்டும் என்பது, எங்கள் விருப்பம். அதை நோக்கியே தற்போது நாங்கள் பயணிக்கிறோம்...' என்கிறார், லட்சுமிதேவி.தொடர்புக்கு: rangavallikolam@gmail.comஎல். எம். ராஜ்