உள்ளூர் செய்திகள்

நினைத்ததை அடையலாம்...

அடியார்களின் வேண்டுதலை நிறைவேற்ற, ஆண்டவன் ஒருபோதும் மறப்பதில்லை; மறுப்பதுமில்லை.வள்ளலாரின், 'மகாதேவ மாலை' எனும், 100 பாடல்கள் அடங்கிய நுாலை, 10 நாட்களில் மனப்பாடம் செய்தவர்; ரசபதி. அப்போது, அவருக்கு வயது, ஒன்பது.இளம் வயதிலேயே, குடும்ப சூழ்நிலை காரணமாக, தச்சுப்பட்டறையில் வேலைக்கு சேர்ந்தார். ஒருநாள், தச்சுப்பட்டறை முதலாளி, ரசபதியை நன்கு அடித்து விட்டார். மனம் வருந்திய ரசபதி, மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று, தேவார- - திருவாசக பாடல்களை மனமுருகி, கண்களை மூடி பாடிக் கொண்டிருந்தார்.பாடி முடிக்கும் வேளையில், ரசபதியின் கைகளில் நிறைய பிரசாதம் வைக்கப்பட்டது. அன்றோடு வேலையை விட்டு, கோவிலில் தரப்படும் பிரசாதங்களையே உண்டு, அங்கேயே தங்கினார்.தேவார - -திருவாசக பாடல்களை, ரசபதி பாடும்போது, பெருங்கூட்டம் கூடும். நாளாவட்டத்தில், சொற்பொழிவும் செய்ய துவங்கினார். நுால்களுக்கு உரை எழுதும் பழக்கத்தை மேற்கொண்டிருந்த, ரசபதி, ஒரு சொல்லுக்கு தெளிவு பெறாமல் தவித்தார்; பலரிடம் கேட்டும் பலனில்லை. சென்னை கந்தக்கோட்ட,- கந்தசுவாமி கோவிலுக்கு போய், 'முருகா... அடியேன் தெளிவுபெற அருள வேண்டும்...' என, மனமுருக வேண்டி திரும்பினார், ரசபதி.அதிகாலை, 5:00 மணியளவில், ரசபதியின் கனவில் காட்சி தந்த, கந்தசுவாமி, 'வருந்தாதே அன்பனே... நீ விரும்பிய உரை, சென்னை, மந்தைவெளியில், ஒரு பாட்டியிடம் உள்ளது. விரைவாக போய் அதை பெற்றுக்கொள்; ஓடு...' என்று, விலாசத்தையும் கூறி, மறைந்தார். முருகப்பெருமான் சொன்ன விலாசத்திற்கு விரைந்தார், ரசபதி. அது ஒரு குடிசை; முன் பகுதியில், அடுப்பில் வெந்நீர் போட்டுக் கொண்டிருந்தார், ஒரு பாட்டி. எரியும் நெருப்பில் ஏதோ தாள்களை கிழித்துப் போட்டவாறே, 'தம்பி... யார் நீ, என்ன வேணும்...' என, கேட்டார். 'பாட்டி... என்ன இது...' என, கேட்டார்.'இந்த பழைய பொஸ்தகங்கள படிக்கறதுக்கு, இங்க யாரும் இல்ல. வீணா செல்லரிச்சுப்போறத விட, அடுப்பெரிக்கவாவது உதவட்டுமேன்னு தான், கிழிச்சு போட்டுக்கிட்டிருக்கேன்...' என்றார். அடுப்பின் அருகில் இருந்த நுாலை எடுத்து பிரித்தார். பல நாட்களாக அவர் தேடிய விளக்கம், அந்நுாலில் இருந்தது கண்டு வியந்தார். பாட்டியிடம் ஐந்து ரூபாய் கொடுத்து, அவ்வளவு நுால்களையும் கட்டாக கட்டி எடுத்து, கந்தசுவாமி கோவிலுக்கு விரைந்தார். அந்நுால்களை சுவாமி முன் சமர்ப்பித்து, நன்றி கூறினார்.தன் இறுதி காலத்தை, வடசென்னையில், 97, சஞ்ஜீவிராயன் கோவில் தெருவில் வாழ்ந்த அடிகள், 1968ல்- சித்தியடைந்தார். உள்ளன்புடன் வேண்டுபவருக்கு உதவி புரிய, ஒருபோதும் தெய்வம் மறந்ததில்லை என்பதை விளக்கும் நிகழ்வு இது. ஆன்மிக தகவல்கள்!* அன்னம் முதலியவற்றை, எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக் கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து, அதில் உணவை வைத்து, நிவேதனம் செய்யலாம். பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !