உள்ளூர் செய்திகள்

உயிரோடு உறவாடு... (1)

'டும் டும்' என்ற கல்யாண மேளச்சத்தம், ரிஷியை வேகமாகவே எழுப்பி விட்டது.கண்களை கசக்கி எழுந்தவன், இரு காதுகளையும், தன் சில்வர் வளையம் தரித்திருந்த கைகளால் மூடி, திரும்ப துாங்க முடியுமா என்று முயன்று பார்த்தான்; முடியவில்லை.முதல் நாள் இரவு களைந்து போட்டிருந்த, 'இயரிங் லிங்க்' அடையாள அட்டை மற்றும் புத்தகம், மேற்கு மாம்பல வெங்கட்ரமணாவின் காலி போளி பாக்கெட் போன்ற இத்யாதிகள், அவன் அருகில் இருந்தன. 'ஐபாட் பேட்டரி' தீர்ந்து போய் போர்வைக்குள் கிடந்தது.சோம்பல் முறித்து எழுந்து, ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். பக்கத்தில் இருந்த கல்யாண மண்டபத்தின் சீரியல் அலங்காரம் கண்ணில் பட, தொடர்ந்து அங்கு வாசித்த நாதஸ்வர மேள ஒலி, காதில் கேட்டது. அதிகாலை, 5:00 மணிக்கே துவங்கி விட்டனர்.எப்போதும், ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெறும், நகரின் பிரதான கல்யாண மண்டபம் அது. அதனால், தினமும் அது ஒளியில் ஜொலிக்கும்; ஒலியில் கல கலக்கும்.மதுரையில், 'விஷுவல் கம்யூனிகேஷன்' படிப்பை முடித்து, தன்னந்தனியே, 'சோனி' கேமராவுடன் சென்னை வந்து குடியிருக்க வீடு தேடினான், ரிஷி.அப்போது, விபரம் தெரிந்த உள்ளூர்காரர்கள், எட்டிப் பார்க்க விரும்பாத, மாடி போர்ஷன், இவனுக்கு வாடகைக்கு கிடைத்தது. மாத வாடகை, 6,000. அது, ரிஷிக்கு கொஞ்சம் அதிகம் தான்.'டாப் 10' வரிசையில், மூன்றாவது இடத்தில் இருக்கும், 'டிவி' சேனலில் தான் முதலில், பயிற்சி மாணவனாக சேர்ந்தான். இப்போது, அங்கேயே, 20 ஆயிரம் சம்பளத்தில், வேலையும் கிடைத்து விட்டது.காலையிலேயே எழுப்பி விட்ட நாதஸ்வரகாரரை, தன் ஊத்தை வாயால், 'புல்ஷிட்' என்றும் திட்டினான்.நாதஸ்வரத்தில் இப்போது மேளத்தின் சோலோ! அந்த ரிதம் ரசிக்கும்படியாக தான் இருந்தது. ஆனால், அதிகாலை, 1:00 மணி வரை விழித்திருந்த கண்ணிரண்டும் காந்தியது. '8:00 மணிக்கு முன் எழுந்திருப்பவன் இளைஞனே அல்ல...' என்று, உள் குரல் ஒலித்து, உட்கார்ந்தபடியே காதை மூடி, முட்டாக்கு போட்டு துாங்க பார்த்தான்.ஊஹும்! நாதஸ்வரகாரர் விடுவதாக இல்லை. பக்கவாட்டு சுவரில், 'ப்ளோ - அப் போஸ்டர்' ஆக ஒட்டப்பட்டிருந்த, நடிகர் சுஜித்குமார் பளிச்சென்று அவனுக்குள் சிரித்தார். தினமும், அதிகாலை, 5:00 மணிக்கு மெரினா பீச்சுக்கு நடை பயிற்சிக்காக அவர் வந்து விடுவார் என்று கேள்வி பட்டிருக்கிறான்.இதுவரை அவர், எந்த, 'டிவி'க்கும் எதுவும் பேட்டி தந்ததே இல்லை; ரசிகர் மன்றங்களையும் அனுமதித்ததில்லை. ஆனாலும், தமிழகத்தின் முதல் ஐந்து, 'ஹீரோ'களில் அதிலும், முதல் இரண்டு இடங்களில் மாறி மாறி இருப்பவர்.இவரின் பிரத்யேக பேட்டிக்காக முயற்சி செய்யாத, 'டிவி'யோ, பத்திரிகையோ தமிழகத்தில் இல்லை. ரிஷிக்கும், சுஜித் என்றால் சற்று பிரியம். பல் விளக்கி, முகம் கழுவி, 'பெர்முடாஸ் டிரவுசர், டி - ஷர்ட்' அணிந்தவன், கேமரா பையை முதுகு பக்கமாக தோளில் மாட்டி, பைக் சாவியை எடுத்து, கீழிறங்கினான்.வாசலில் விளக்கு எரிந்து கொண்டிருக்க, ரிஷி வருவதை வியப்போடு பார்த்தபடியே, வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள், சாரதா மாமி. ''என்ன மாமி... கோலமா?'' ''ஆமாப்பா... கால காலமா இதை கோலம்ன்னு தான் எல்லாரும் சொல்வா,'' என, அவனை கலாய்க்க துவங்கினாள், மாமி.காலையிலேயே பல்பு வாங்கிய அதிர்வுடன், ''மாமி... காலையிலேயேவா?'' என்றான்.''இது, கார்த்தால இல்லாம சாயங்காலமா என்ன?'' மாமியும் விடுவதாயில்லை.''வேண்டாம் மாமி... விட்ருங்க... ஒரு புது, 'அசைன்மென்ட்'டுக்காக போயிகிட்டிருக்கேன்... சாதிச்சுட்டா, என் வேலையும் நிரந்தரம் ஆயிடும்; நானும் வீட்டை காலி பண்ணிடுவேன்.''''நன்னா சாதிடா... அதுக்காக வீட்டை ஏன் காலி பண்றேங்கறே... உனக்கு, பிளாட்பாரமெல்லாம் சரிப்பட்டு வராது,'' திரும்பவும் ஒரு குத்து விட்டாள், மாமி.அவன், உடனே குனிந்து, இரு கைகளை கூப்பி, 'சரண்டர்' ஆனான்.மெரினா கடற்கரை —அதிகாலை சாம்பல் வெளுப்பில், 20 டிகிரி செல்ஷியஸ் குளிர் காற்றுடன் விரிந்திருந்தது, மணல்வெளி. ஆர்ப்பாட்ட அலைகளோடு விடிந்து கொண்டிருந்தது, அந்த கடல்புரம். மணல்வெளியின் முடிவிலான நெடிய நடை சாலை மேல் ஒரு பெருங்கூட்டம் நடந்தும், ஓடிக்கொண்டும் இருந்தது.தள்ளு வண்டிகளில் அருகம் புல் ஜூஸ், வாழைத் தண்டு ஜூஸ் என்ற பழமையும், புதுமையும் கலந்த வியாபார முனைப்புகள். அதை மீசை நனைய, குடித்துக் கொண்டிருந்தனர், சிலர்.இந்த கூட்டத்தில் தான், சுஜித்குமாரும் இருக்க வேண்டும். நிச்சயமாக முகத்தை மூடிக்கொண்டோ, இல்லை, 'மாஸ்க்' அணிந்தோ தான், அவன் இருக்க வேண்டும். பைக்கை ஓரம் கட்டி, தேடலை துவங்கினான், ரிஷி.முதலில் அவன் வந்திருப்பதை ஊர்ஜிதம் செய்ய, அவனது படகு கார் எங்காவது நிற்கிறதா என்று பார்த்தான். அப்படி பார்க்கும்போது, ஐகோர்ட் நீதிபதி சிதம்பர பாரதி, 'எஸ்கார்ட்' துணையுடன், கழுத்தில் மப்ளரை சுற்றி அவனை கடந்து போனார். சில அடிகள் பின்னால், எழுத்தாளர் முத்துச்செல்வனும், அவரோடு, ஒரு தமிழ் தினசரியின் ஆசிரியரும் நடந்தபடி இருந்தார்.அப்போது, ஆட்டோவிலிருந்து ஒரு இளம் பெண் இறங்குவது தெரிந்தது. சுடிதார் அணிந்து, துப்பட்டாவை கழுத்தில் சுற்றி போட்டிருந்தவளின் தோளில், லெதர் பேக் தொங்கியது. ஆட்டோவை அனுப்பி விட்டு, நடந்து வந்தவளை, நெருக்கத்தில் பார்க்க, சற்று வியந்தான், ரிஷி.''ஹேய் தமிழ்,'' என்றான் கூவலாக.''ரிஷி.''''யெஸ், ரிஷியே தான்... நீங்க எங்க இங்க... நீயும் மெரினா வாடிக்கையாளரா?''அவளோ, பதிலுக்கு இல்லை என்கிற மாதிரியும்; ஆமாம் என்கிற மாதிரியும் குழப்பமாக தலையை ஆட்டியபடியே நாலாபுறமும் பார்க்கலானாள்.''ஆமாம், இது என்ன பதில்... ஆமாங்கறியா, இல்லேங்கறியா?''''ஜஸ்ட் சும்மா தான் வந்தேன். ஆனா நிச்சயமா, நீ, நடைபயிற்சிக்கு வரலை. உன் கேமரா பேக்கே ஒரு காரியமா தான், நீ வந்துருக்கேன்னு சொல்லிடுச்சு... அனேகமா அது யாரோ ஒரு, வி.ஐ.பி.,யா தான் இருக்கணும். இந்த மாதிரி பொது இடத்துல பிடிச்சா தான் முடியும்ங்கற ஆளாகவும், அவர் இருக்கணும்... ஆம் ஐ ரைட்?''தமிழ் என்கிற தமிழ்ச்செல்வி, தன் கேள்வியில் அவனை அசரடித்தாள். அவன் பணியாற்றும், 'டிவி'யில் தான் அவளும், தொகுப்பாளினியாக பணிபுரிகிறாள்.ரிஷி, மதுரைக்காரன் என்றால், தமிழ்ச்செல்விக்கு, மதுரையின் விளிம்பிலுள்ள மேலுார் தான், சொந்த ஊர். இதுவே, இருவரையும் முதலில் சற்று நெருங்கி பேசச் செய்தது; இப்போதும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது.''ஏ மேலுாரு... எப்படி இப்படி அசத்துறே... ஆமா, நீ எதுக்கு, தொகுப்பாளினியா வந்தே... ஐ.பி.எஸ்., எழுதி, சி.பி.ஐ., பக்கம் போகலாம்ல?''''நீ கூட சினிமால நடிக்க போகலாம். அழகா, நச்சுன்னு, ஜூனியர் சுஜித்குமார் மாதிரி இருக்கே... நீ எதுக்கு இப்படி, 'டிவி' பக்கம் வந்தே?''சுஜித்குமாருடன் ஒப்பிட்டு சொல்லவும், அவனுக்குள், 'ஜிவ்வ்' என்றிருந்தது.''நடிகனாகணும்ங்கிறது என் நோக்கமில்லை... பெரிய கேமராமேன் ஆகணும். பாலு மகேந்திரா மற்றும் கே.வி.ஆனந்த் மாதிரி இயக்குனராகவும் ஆயிடணும்,'' என, நடந்தபடியே அவன் மனதை திறக்கலானான்.''அதுக்கு நீ, அவங்ககிட்ட போய் உதவியாளரா சேர்ந்திருக்கணும். எதுக்கு, 'டிவி'ல சேர்ந்தே?''''அதுக்கும் முயற்சி பண்ணிகிட்டு தான் இருக்கேன். ஆனா, கிடைச்சாதானே... அதேசமயம், மாசமானா வாடகை கொடுத்து, வண்டிக்கு பெட்ரோல் போடணுமே... இந்த வண்டிக்கும், அந்த வண்டிக்கும்... அதுக்கு, இது வேணுமே?'' என, கைகளை சுண்டி விட்டு காட்டியவன், ''நீ, எதுக்கு வந்தேன்னு சொல்லவேயில்லையே,'' என்கிற கேள்வியில் வந்து நின்றான்.அவனை உற்று பார்த்தாள், தமிழ்ச்செல்வி.''என்ன அப்படி பார்க்கறே?''''சொன்னா, 'ஷாக்' ஆயிடக் கூடாது.''''ஷாக்கா... அப்ப பெரிய விஷயம் தான்.''''ஆமா... இது, மீடியா வரையில பெரிய விஷயம் தான்.''''ஐய்யோ, 'டெம்ப்' ஆக்கறியே... சொல்லு தமிழ் சீக்கிரம்.''''விடுதி அறையில் என்னுடன் தங்கியிருப்பவள் பேர், ஜாக்குலின். அவ ஒரு பிசியோதெரபிஸ்ட்.''''இதுவா, அந்த பெரிய விஷயம்?''''அவசரப்படாதே... ஒரு பெரிய, வி.வி.ஐ.பி.,யோட மனைவி, குளியலறையில் வழுக்கி விழுந்து அடிபட்டதுல, காலையே மடக்க முடியல. ஜாக்குலின் தான் ரெகுலரா போய், 'மசாஜ்' பண்ணி, சிகிச்சை கொடுத்தா. இப்ப அவங்க நல்லாயிட்டாங்க.''''தமிழ்... ஏன் இப்படி மாவாட்டறே... 'ஷாக்' ஆயிடுவேங்கற அளவுக்கு, 'பில்ட் - அப்' கொடுத்துட்டு, 'பிசியோதெரபி, மசாஜ்'ன்னு, பழைய சாதக் கதையெல்லாம் சொல்றியே.''''அவசரப்படாதேன்னு சொன்னேன்ல.''''போதும். நீ முதல்ல நேரடியா விஷயத்துக்கு வா. அந்த, வி.வி.ஐ.பி., யார்?''''ஜாக்குலின் மூலமா தான் அந்த, வி.வி.ஐ.பி., மனைவியை சந்திச்சேன்; அதுவும் தற்செயலா. அதாவது, 'மசாஜ்' எண்ணெயை மறந்து அறையில் வெச்சுட்டு போயிட்டா, ஜாக்குலின்.''அங்க இருந்து போன் பண்ணி, 'ரொம்ப அவசரம், எடுத்துக்கிட்டு வர முடியுமா'ன்னு கேட்டா. நானும் எடுத்துக்கிட்டு போனேன். அவளுக்கு உதவி செய்ய மட்டுமில்ல, அவங்களோட தொடர்புக்காகவும்...''''திரும்ப மாவாட்டறியே... சரி நீ, உன் உபன்யாசத்தை தொடர்... நான் வந்த வேலையை பார்க்கறேன்,'' என்று அலுத்துக் கொண்ட ரிஷி, விடிந்த அந்த காலை வேளையில் சுஜித்குமாருக்காக, பார்வையை அலைய விட்டான்.''அலட்டிக்காத ரிஷி, நீ எதுக்கு வந்துருக்கியோ, யாருக்காக வந்துருக்கியோ தெரியாது. ஆனா, நான் வந்திருக்கிறது யாருக்குன்னு தெரிஞ்சா கண்டிப்பா வாயப் பொளந்துடுவே. ரொம்ப கஷ்டப்பட்டு, 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கிட்டு வந்துருக்கேன்.''கேமரா, மொபைல் போன், மைக் எதுவும் கூடாதுங்கிற ஏராள நிபந்தனைகளை ஒத்துகிட்டு வந்திருக்கேன். எல்லாத்துக்கும் அந்த, வி.வி.ஐ.பி.,யோட மனைவி தான் காரணம்.''''போதும் தமிழ்... யார் அந்த, வி.வி.ஐ.பி.,''''வாயால சொல்றத விட, நேர்ல பார்க்கிறது, 'த்ரில்' இல்லையா?''''ஆமாம்.'' அவன் ஆமோதிப்போடு தோளைக் குலுக்கினான்.''அப்ப, என் கூட வா... ஆனா, பையில் இருந்து கேமராவை மட்டும் எடுத்துடாதே.''''சரி, அவர் இப்ப எங்க இருக்கார்?''''அவரோட காருக்குள்ள.''''காருக்குள்ளேயா... ஓ... வெளியே யாரும் பார்த்துடக் கூடாதா?''''ஆமாம்... அதுக்கு இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு. அந்த கார் நம்பர் எனக்கு தெரியும். தேடுவோமா?'' நடந்தபடியே கேட்டாள்.''ஆமா... வீட்டுக்கு போன இடத்துலயே சந்திச்சிருக்கலாமே... இது என்ன, கொக்கு தலைல வெண்ணெயை வெச்சு பிடிக்கிற மாதிரி?''''நான் போனப்ப அவர் இல்லை. அப்புறம், 'மீடியா'காரங்க யாரையும் அவர் வீட்டுல சந்திக்கிறதும் இல்லையாம்... நேரமும் இல்லையாம்... அவர் மனைவி ரொம்பவும் வற்புறுத்தவும், 'பீச்சுல என்னை பார்க்கச் சொல்; சரியா, 15 நிமிஷம் தான், 'டைம்'ன்னும் சொல்லிடு'ன்னுட்டாரு.''''அவருக்கு தான், இந்த, 'மீடியா' மேல எவ்வளவு பயம்... இல்ல?''''இது பயமில்ல, ரிஷி... இது ஒரு கட்டுப்பாடு, எச்சரிக்கையும் கூட.''''என்ன கட்டுப்பாடோ... என்ன எச்சரிக்கையோ... 'டிவி'யில நம் முகம் தெரிஞ்சா போதும்ன்னு அலையறவங்களதானே நாம பார்க்கறோம்?''''இவர் விதிவிலக்கு.''''நீ சொல்லச் சொல்ல, ஆர்வம் எகிறிகிட்டே போகுது... கமான், அந்த கார் நம்பர் என்ன?''''நான் கண்டுபிடிச்சுட்டேன்... அதோ...'' சற்று தொலைவில், செம்பருத்தி செடியை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த காரை காட்டினாள், தமிழ்ச்செல்வி.சாதாரண ரக, சிறிய கார். வந்து போவது தெரியாமல் இருக்க இதுபோன்ற கார்கள்தான் சரி. இருவரும் காரை நெருங்கிய நொடி, கதவின் கண்ணாடி கீழிறங்கியது.உள்ளே, நெற்றி மேல் கர்ச்சீப்பை கட்டி, தலைமுடியை மறைத்து, 'மாஸ்க்' அணிந்து, 'கூலிங்கிளாஸ்' தரித்திருந்த நிலையில், சுஜித்குமார்!'ஜில்'லென்ற ஜிகர்தண்டா தொட்டிக்குள், 'டைவ்' அடித்து, விழுந்தார் போலிருந்தது, ரிஷிக்கு. — தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !