உயிரோடு உறவாடு... (16)
முன்கதை சுருக்கம்: சேனல் அலுவலகத்துக்கு சுகுமார் வந்தால் அவனை எப்படி சமாளிப்பது என, தமிழ்ச்செல்வி கவலைப்பட, தான் பார்த்துக் கொள்வதாக கூறினான், ரிஷி. சுகுமார் வந்தவுடன் அவனை கேன்டீனுக்கு அழைத்து சென்று, சாப்பிட வாங்கி கொடுத்தான். அச்சமயம், அங்கு வந்தார், ஜனா.கேன்டீனுக்குள் ஜனா நுழைவதைப் பார்த்த உடனேயே, ரிஷியின் மனம் பற்றி எரியத் துவங்கியது. அதற்கு தோதாக காலில் கட்டு போட்டிருந்த இடத்தில் ரத்தமும் கசியத் துவங்கியிருந்தது. அந்த நேரத்தில், அங்கே ரிஷியை எதிர்பார்க்கவில்லை, ஜனா. அது, அவர் முகம் போன போக்கில் நன்றாக தெரிந்தது.இடையில் தோசை வரவும், சுகுமார் சாப்பிடத் துவங்கினான்.''சார், நீங்க சாப்பிட்டுகிட்டு இருங்க... 10 நிமிஷத்துல வந்துடறேன். காபியும், 'ஆர்டர்' பண்ணிட்டேன்; பின்னாலேயே வந்துடும்,'' என்றவன், ஜனாவின் சந்திப்பை தவிர்க்கும் விதமாய் வேகமாய் வெளியேறினான்.ஜனாவுக்கும் சற்று அப்பாடா என்றிருந்தது. மெல்ல சுகுமாரை பார்த்துக் கொண்டே, பக்கத்து டேபிளில் போய் அமர்ந்தார். சுகுமார் கழுத்தில் தொங்கிய, 'விசிட்டர் பாஸ்' அவன், ரிஷிக்கு யாராக இருக்கும் என்கிற கேள்வியை மனதிற்குள் எழுப்பி விட்டிருந்தது.எப்போது வந்து அமர்ந்தாலும், அன்றைய ஸ்பெஷல், அவர் டேபிளை அடைந்து விடும். அதேபோல், போண்டா வரவும், அதை பிய்த்தபடியே சுகுமாரைத்தான் ஊடுருவினார். சுகுமாரும் அவரைப் பார்த்தான். பதிலுக்கு மெல்ல சிரித்தார், ஜனா. சுகுமாரும் சிரித்தான். அப்படியே மெல்ல எழுந்து அருகில் வந்தவர், ''சுஜித் சார் புரோகிராமோட கெஸ்ட்டா?'' என்று பேச்சை ஆரம்பித்தார்.சுகுமாரும் ஆமாம் என்பது போல் சிரித்தான். அப்படியே, ''நீங்க?'' என்றும் கேட்டான்.''ஐ ஆம் ஜனா... நான் தான் இங்க சீப்.''''அப்ப, தமிழ்ச்செல்விக்கும் நீங்க தான், 'சீப்'பா?''''தமிழ்ச்செல்விக்கும்னா... அவளை உங்களுக்கு தெரியுமா?''''தெரியுமாவா... நான் தான் சார் அவளோட வருங்கால புருஷன்.''ஒரு திமிங்கிலம் தன் வலையில் சிக்கப்போவது போன்ற மகிழ்ச்சியுடன், ''ஓ... நீங்கதானா அது?'' என்றார், ஜனா.தோசையை மென்றபடியே, ''உங்ககிட்ட, கல்யாண விஷயமா தமிழ் எதுவும் பேசலையா?'' என்றான், சுகுமார்.''ஏன் பேசாம... பேசினா பேசினா... உங்களுக்கு என், 'அட்வான்ஸ்' வாழ்த்துகள்,'' என்றார்.''ஆமா, 'சீப்'ன்னு சொல்றீங்க... நீங்க நிகழ்ச்சி அரங்கத்துல இல்லையா?''பதிலுக்கு சுகுமார் இப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை, ஜனா.அவனுக்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசிக்கும் முன், சுகுமாரே தொடர்ந்து பேசினான். அவன் பேச்சிலும் ஒரு சலிப்புணர்வு.''நான் உள்ள வந்து, 20 நிமிஷமாச்சு. தமிழ், இன்னும் வந்து என்னை பார்க்கல. இந்த ரிஷிங்கிறவன் தான், சாரி... ரிஷிங்கிறவர் தான் என் கூட பேசிக்கிட்டிருக்கார். கேட்டா, அங்க, 'ரிகர்சல்' நடக்குதாம்... 'சீப்' நீங்களே இங்க, 'ரிலாக்ஸா' போண்டா சாப்பிட வந்திருக்கீங்க... ''ஆனா, தமிழால வர முடியலைன்னா எனக்கு புரியலை... ஒரு அஞ்சு நிமிஷம் வந்துட்டு போகலாம்ல சார்... கட்டிக்க போற என்னை விட பார்க்கிற வேலை பெருசாயிருச்சு பாருங்க.''எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல், சுகுமார் தன் புகைச்சலை வெளிக்காட்டவும், ஜனாவுக்கு ஓரளவு புரிந்து விட்டது.''ஆமா, ரிஷியோட உங்களுக்கு இப்ப தான் பழக்கமா?''''ஏர்போர்ட்ல இருந்து நேரா வரேன் சார்... சென்னைக்கே நான் புதுசு.''நாலாபுறமும் பார்த்தபடியே, ஜனா அவன் தோள்களில் தட்டி, ''நோ பிராப்ளம்... நான் உங்களை உள்ளே கூட்டிகிட்டு போறேன். நீங்க என்கூடவே இருங்க. உங்களுக்கு நான் இருக்கேன்,'' என்றார்.சுகுமாரும் சாப்பிட்டு முடித்திருந்தான்.''கை கழுவணுமா... அதோ, வாஷ்பேசின்,'' என்று, கையை காட்டினார்.அவன் கை கழுவி வரவும், ''வாங்க... என் கேபினுக்கு போவோம்; காபி அங்கேயே வந்துடும்,'' என்று, அவனை அழைத்து நடந்தார்.சில நிமிடங்களில் வந்து பார்த்த ரிஷிக்கு, திக்கென்றது. சுகுமாரை காணாத நிலையில், கேன்டீன் சர்வரிடம், ''ஏம்பா, இங்க தோசை சாப்பிட்டுகிட்டிருந்தாரே ஒருத்தர், அவர் எங்கே?'' என்று கேட்டான்.''ஜனா சாரோட தான் போனாரு,'' என்று வந்த பதில், நெஞ்சில் அறைந்தது.அடுத்த நொடியே, ஜனா சார் கேபின் நோக்கி தான் ஓடினான். ஆனால், இருவரும் அங்கு இல்லை.எங்கே போனார் என்று தெரியாத நிலையில், எதிர்பட்ட சிலரிடம் கேட்டபோது, 'நாங்க பார்க்கலையே சார்...' என்றனர். இடையில் கைபேசி வழியாக தமிழிடமிருந்தும் அழைப்பு.''ரிஷி... சுஜித் சார் வந்துட்டார். சுகுமாரை உன் அறையில உட்கார வெச்சுட்டு கொஞ்சம் சீக்கிரம் வா. நிகழ்ச்சி முடியவும் அறிமுகப்படுத்திக்கலாம்,'' என்றாள்.மொபைல் போனை அணைத்து, பாக்கெட்டில் போட்டபடியே ஓடினான், ரிஷி.நிகழ்ச்சி அரங்கத்திற்குள் நுழைந்தபோது, அடுத்தகட்ட அதிர்ச்சி காத்திருந்தது. சுகுமாரோடு சேர்ந்து, சுஜித்தையும் அழைத்து வந்திருந்தார், ஜனா.சுஜித்திடம், ''சார், இவர்தான் உங்களை பேட்டி எடுக்க போற தமிழ்ச்செல்வியோட வருங்கால கணவர். நிச்சயதார்த்தமெல்லாம் முடிஞ்சுடுச்சு,'' என்று சொல்லவும், சுகுமாரின் கைகளை பற்றி குலுக்கியதோடு கட்டி அணைத்துக் கொள்ளவும் செய்தார், சுஜித்.அந்த நொடிகளில், சுகுமாரும் உலகை மறந்து போனான்.அந்த காட்சியை பார்த்து விட்டு, சற்றே கலங்கிய விழிகளுடன் ரிஷியை பார்த்தாள், தமிழ். ரிஷிக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.ஜனாவோ, சுகுமாருக்கு ஒரு விசேஷ நாற்காலியை போடச் செய்து, அதில் அமர்ந்து நடப்பதை பார்க்கும்படி சொல்லி, தானும் அருகில் அமர்ந்து கொள்ள, நிகழ்ச்சியும் துவங்கியது.தனித்த முறையில் பேசிக்கொள்ள நேரமும் இல்லை. சூழலும் இடம் தராத நிலையில், சுகுமாரை பார்த்தபடியே, தன் கடமையை செய்ய வேண்டிய ஒரு இக்கட்டு, தமிழ்ச்செல்விக்கு.அவனிடமோ, தன்னை பார்த்தும் தமிழ் தன்னருகில் வந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்கிற கொதிப்பு. ரிஷியாலும் நடந்ததை சொல்ல முடியவில்லை.இருந்தும் பிறர் காதில் விழாதபடி, அவளிடம், ''இப்ப எதைப் பற்றியும் நினைக்காதே... நிகழ்ச்சியில மட்டும், 'கான்சன்ட்ரேட்' பண்ணு. எல்லாத்தையும் அப்புறம் பேசிக்கலாம்,'' என்றான், ரிஷி.மனதை திடப்படுத்தி, நிகழ்ச்சியில் கவனம் செலுத்தத் துவங்கினாள், தமிழ். நடுவில் லேசாய் அவள் தடுமாறியபோது, சுஜித்குமாரே அவளுக்கு தைரியம் தருவதுபோல், ''டென்ஷனாக வேண்டாம் தமிழ்... பீ கூல்,'' என்று, தட்டிக் கொடுத்தார்.அவள் பொசிஷனில் நின்று கேட்ட கேள்விகள் அவ்வளவுக்கும் தயங்காமல் பதில் சொன்னார். அருகில் பெரிய திரையில் கேள்வி கேட்டவர்களின் படங்கள் தோன்றின. கேள்விகளும் அவரவர் குரலிலேயே ஒலித்தன.'ட்ரோன் கேமரா, க்ரேன் கேமரா, ஸ்டாண்ட் கேமரா' என்று, ஒன்றுக்கு நான்கு கேமராக்கள் மாறி மாறி, பல கோணங்களில் நடப்பதை படம் பிடித்தபடியே இருக்க, 'லைவ்' ஆக, நிகழ்ச்சியை தமிழகமே பார்க்கத் துவங்கியது.எம்.டி., அவர் அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்தமிழ் வெகு இயல்பாக பேசி, நிகழ்ச்சியை புதிய முறையில் நடத்துவதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.மகாபாரதத்தில், யட்சன் என்கிற பாத்திரம், தர்மனிடம் கேள்விகளாய் கேட்கும். அதற்கு சரியான பதிலை தர்மனும் சொல்வான். தமிழ்ச்செல்வி கேட்ட கேள்விகள் கூட, யட்சன் கேட்டது போல்தான் இருந்தது. சுஜித்குமாரும், தர்மனை போலவே சாதுர்யமாக பதில்களை சொல்லி வந்தார்.சரியாக, 60 நிமிடங்கள். நிகழ்ச்சியும் முடிந்தது. தன் அறையை விட்டு வேகமாக அரங்கிற்கு வந்தார், எம்.டி.,சுஜித்தை கட்டி அணைத்து நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் உச்சபட்சமாக, விண்ணப்பித்திருந்த அவ்வளவு தனியார் நுாலகத்துக்கும், சுஜித்குமார் செலவில், 100 புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்பது தான், 'ஹைலைட்' ஆக இருந்தது.சுஜித்குமார் புறப்படும் நேரம் வரவும், தமிழ்ச்செல்வியையும், ரிஷியையும், திருப்தியா என்பது போல் பார்த்தார்.அவர் கைகளை இறுகப் பற்றி, ''சார், ஜமாய்ச்சுட்டீங்க... 'மேக் - அப்' அறைக்கு வந்து, 'டச் - அப்' கூட பண்ணிக்கலை. எந்த கேள்வியும் முன்னாலயும் தெரியாது. ஆனா, ஒரு கேள்விக்கு கூட தடுமாறலை, தயங்கலை, பின்னிட்டீங்க,'' என்று உருகினார், ஜனா.இடையில், சுகுமார் எங்கே என்று தமிழ் பார்த்தபோது, அவனை காணவில்லை.தன் கேபினுக்கு அழைத்துப் போயிருந்தார், ஜனா. அந்த நொடி, சுஜித்குமாரை விட்டு விலகி, சுகுமாரை தேடி போகவும் முடியவில்லை.சுஜித்தோடு சென்று, காரில் ஏற்றி அவரை அனுப்பி விட்டு திரும்பும்போது தான், சற்று நேரம் கிடைத்தது.''என்ன ரிஷி... சுகுமார் எப்படி ஜனா சாரோட சேர்ந்தார்?'' என்று தான் முதலில் கேட்டாள், தமிழ்.''கேன்டீன்ல சாப்பிட்டுகிட்டு இருங்க வரேன்னு, ஒரு அஞ்சு நிமிஷம் நகர்ந்தேன். அந்த நேரத்துல இந்த ஆள் உள்ளே நுழைஞ்சுட்டான். இத்தனைக்கும் நான் அறிமுகமே செய்யலை. ஆனா, எப்படி தெரிஞ்சு, இழுத்துகிட்டு போனான்னு தெரியலை. இதுல நம்ப எதிர்லயே, சுஜித் சார்கிட்ட அறிமுகம் வேற செய்யிறான்... எப்படியோ, நீ பதட்டப்பட்டாலும் நிகழ்ச்சியை நல்லபடியா நடத்திட்டே,'' என்றான், ரிஷி.''இன்னும் நல்லா பண்ணியிருப்பேன்... இந்த மனுஷனால தான் டென்ஷன்,'' என்றாள்.எதிர்ப்பட்ட சிலர், தமிழ்ச்செல்வியை கை குலுக்கி பாராட்டினர்.''ஆமா, இப்ப சுகுமார் எங்கே?''''அந்தாளோடதான் இருப்பார். போய் முதல்ல பார்ப்போம். நீ சொன்னதெல்லாம் ரொம்பவே சரி. நான், 10 நிமிஷம் தான் பேசியிருப்பேன். அதுலயே ரொம்ப கரடு முரடுன்னு நல்லா தெரிஞ்சுது,'' என, ரிஷி சொல்லி முடிக்கவும், தமிழ்ச்செல்வியை நோக்கி, எம்.டி.,யின், பி.ஏ.,வான, லில்லி புஷ்பம் வேகமாய் வந்து நின்றாள்.''தமிழ், ரிஷி, உங்க ரெண்டு பேரையுமே எம்.டி., கூப்பிடறார்,'' என்றாள்.இது என்ன சோதனை என்பது போல் ஆகி விட்டது, தமிழுக்கு.''உங்களை தேடி உங்க கேபினுக்கே போயிட்டார். நான் தான், சுஜித் சாரை, 'செண்ட் ஆப்' பண்ண போயிருக்கறதா சொன்னேன்,'' என்று, துாண்டலை அதிகரித்தாள், லில்லி.இதற்கு மேல் அவரை காக்க வைப்பது ஆபத்து என்பதை உணர்ந்த இருவருமே வேகமாக, எம்.டி., அறை நோக்கிச் சென்றனர்.அவர்கள் உள்ளே நுழையவும், எழுந்து நின்று புன்னகைத்தார்,எம்.டி., அதுவே அவர் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதை உணர்த்தியது.''வெல்டன் தமிழ்ச்செல்வி... 'எக்சலன்ட் இன்டர்வியூ!' முக்கியமா நீங்க தேர்ந்தெடுத்த கேள்விகள், அதுக்கு மிஸ்டர் சுஜித் சொன்ன பதில்கள் எல்லாமே அற்புதம்.''''தேங்க்யூ சார்.''''அதை உனக்கு நான் சொல்லணும். இந்த சேனலோட, 'கேரியர்'ல, இந்த நாள், வெற்றிகரமான நாள். பல ஏஜன்சிகள்கிட்ட இருந்தும் எனக்கு போன். அநேகமா நம்ப நிகழ்ச்சி நடத்தறப்ப, வேற எந்த சேனலையும் யாரும் பார்க்கலையாம். அடுத்த வாரம், டி.ஆர்.பி., வரும்போது, 'பர்சன்டேஜ்' தெரிய வரும்.''எனிவே, உங்க ரெண்டு பேரையுமே அடுத்த ஸ்டேஜுக்கு நான், 'பிரமோட்' பண்ண சொல்லியிருக்கேன்.ஹெச்.ஆர்.,ல இருந்து, 'ஆர்டர்' தருவாங்க. உங்க, 'புரொபேஷன் பீரியட்' முடிஞ்சு, நீங்க நிரந்தர பணியாளராகவும் ஆயிட்டீங்க.''பை த பை... அடுத்த பெரிய ஈவன்ட், ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று வரணும். இப்பவே ஆரம்பிச்சுடுங்க, இன்னிக்கு நடந்ததை விட, அது இன்னும் பெரிசாவும், சிறப்பாகவும் இருக்கணும்ங்கறத மட்டும் மறந்துடாதீங்க,'' என்று, உணர்ச்சிப்பூர்வமாக கை குலுக்கினார், எம்.டி.,தமிழ், ரிஷி இருவருக்குமே சற்று ஆகாயத்தில் மிதப்பது போல் இருந்தது. ஆனால், இதற்கு இடையில் தான் எத்தனை பாடுகள்...சட்டென்று சுகுமார் நினைப்பு வரவும், படபடப்போடு ஜனா சார் கேபின் நோக்கி ஓடினாள். அங்கே, அவரோடு புகை பிடித்துக் கொண்டிருந்தான், அவன்.தமிழ் உள்ளே நுழையவும், ''வாங்க மகாராணி... இப்பவாவது என்னை பார்க்கணும்ன்னு தோணிச்சே,'' என்றான்.தமிழிடம் தேக்கம்.ஜனாவோ, 'நீ அந்தப் பக்கம் ஜெயிச்சா, நான் இந்த பக்கம் ஜெயிச்சுட்டேன்' என்பது போல ஒரு மாதிரி பார்த்தவர், ''தமிழுக்கு டியூட்டின்னு வந்துட்டா, அது மட்டும்தான் மெயின். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க சுகுமார்,'' என்று, அவனை துாண்டாமல் துாண்டி விட்டார்.— தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்