உள்ளூர் செய்திகள்

சாண்டோ சின்னப்பா தேவர்! (11)

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —வாழ வைத்த தெய்வம் படம் ஓர் ஆண்டு தாமதமாக வெளியானது. தேவருக்கு பெரிய லாபமில்லை. 'ஜெமினி கணேசன் போன்ற நட்சத்திரங்கள் வேண்டாம்; இனி புதுமுகங்களை நடிக்க வைக்கலாமா அல்லது மிருகங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளலாமா...' என்று யோசித்தார் தேவர்.நாகிரெட்டியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருந்தது. இனி, மற்ற பைனான்சியர்களை தேடிச் செல்ல வேண்டும்.எலிபண்ட் பாய் என்ற ஆங்கில சினிமாவை தமிழில் எடுக்க நினைத்த தேவர், அதை தன் லட்சிய படமாக அறிவித்தார். ஆனால், பணம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நயா பைசாவுக்கும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. சம்பளம் சரியாக வராததால், ஒத்துழைக்க மறுத்தனர் யூனிட் ஆட்கள். குறிக்கோள் நிறைவேறுமா அல்லது குப்புற விழுந்து விடுவோமா என்ற சந்தேகம் தேவருக்கு ஏற்பட்டது. அவர் கவிழ்வதைக் காண, கோடம்பாக்கமே காத்திருந்தது. 'எந்தச் சூழலிலும் தன் மனதுக்குள் குடியிருக்கும் குமரக் கடவுள் சிறப்பையே ஏற்படுத்துவான்...' என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டார்.பாசமலர் படத்துக்கு வசனம் எழுத ஆரூர்தாசை அழைத்தார் ஜெமினி கணேசன். தேவரிடம் அதை எப்படிச் சொல்வது, 'அறிமுகப்படுத்திய என்னை விட, உனக்கு சிவாஜி முக்கியமா...' என்று கேட்டு விட்டால் என்ன செய்வது என்று, தர்ம சங்கடத்தில் நெளிந்தார் ஆரூர்தாஸ்.இதை அறியாத தேவரோ, ஆரூர்தாஸை குன்னூருக்கு அழைத்துச் சென்று, அவுட்டோர் லொகேஷனுக்கு ஏற்ப கதை, வசனம் எழுதச் சொன்னார்.தேவர் திட்டினால் திட்டட்டும் என்று, பாசமலர் வாய்ப்பு பற்றி கூறினார் ஆரூர்தாஸ்.'என்ன தாஸ்... இப்ப வந்து இப்படிச் சொல்றே... முதுமலை சீனிவாச நாயுடு எஸ்டேட்ல எல்லா ஏற்பாடும் செய்துட்டேன்; இப்ப போய் சொன்னா எப்படி... வேற கதாசிரியருக்கு நான் எங்கே போறது...' என்றார்.'பரவாயில்லண்ணே... எனக்கு பாசமலர் வேணாம்; யானைப் பாகன் போதும்...' என்றார்.'அப்படிச் சொல்லாத தாஸ்... சிவாஜிக்கு எழுத மாட்டோமான்னு அவனவன் தவம் கிடக்கறான். பீம்சிங் பெரிய டைரக்டரு. ஜெமினியே உன்னை சிவாஜிகிட்டே அறிமுகம் செஞ்சி வெச்சிருக்காருன்னா அது எவ்வளவு பெரிய கொடுப்பினை. போ... முதல்ல அந்த வேலையை செய்; நீ திரும்பி வர்றதுக்குள்ளே நான் ரெண்டு படம் முடிச்சுடுவேன்...' என்றார்.ஆரூர்தாசுக்கு பயமும், ஆனந்தமும் ஒரு சேர வந்தது. 'அண்ணே... இப்ப சிவாஜிக்கு எழுதலன்னா இன்னொரு வாய்ப்பு வரும். ஆனா, உங்க மனசை நோகடிக்குறது பாவம்...' என்றார் ஆரூர்தாஸ்.தேவருக்கு கண்களில் கண்ணீர் ஊறியது. திரை உலகில் எப்போதாவது தான், 'நன்றி' காட்டும் அதிசய சம்பவங்கள் நடக்கின்றன.'தாஸ்... நீ குடும்பக் கதை எழுதறதுல கெட்டிக்காரன். இது ஜங்கிள் பிக்சர்; உனக்கு இதுல பெரிசா என்ன சந்தர்ப்பம் இருந்துடப் போகுது. பாசமலர் மூலம் உனக்கு நல்ல வாய்ப்பு; எனக்கு அடுத்த படம் எழுது...' என்று கூறி, வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார் தேவர்.முதுமலை சீனிவாச நாயுடு எஸ்டேட்டில், பெரிய பெரிய பள்ளங்களை தோண்டி, அவற்றை கொடி, கொம்புகளால் மூடி, வெல்லம், கரும்பு மற்றும் பழங்களை அதன் மீது குவித்து, யானைகளுக்காக தவம் கிடந்தனர் படப்பிடிப்பு குழுவினர். மூன்று நாட்களாகியும் யானைகள் வரவே இல்லை. பைனான்சியர்கள் வந்து பணம் கொடுத்தால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பிடிப்பு என்ற சிரம நிலையை அடைந்தார் தேவர். இருப்பினும், 1960ல் தீபாவளி அன்று, யானைப் பாகன் வெளியானது. உண்மையில், தமிழ் சினிமாவில் இது புதுமையான முயற்சி என்றாலும், அதே தினத்தில் வெளியான கைராசி, கைதி கண்ணாயிரம், மன்னாதி மன்னன், பாவை விளக்கு மற்றும் பெற்ற மனம் போன்ற படங்களுக்கு முன், யானைப் பாகனை யாரும் சட்டை செய்யவே இல்லை.தேவரின் டாகுமென்டரி படம் என்று எதிரிகள் கேலி பிரசாரம் செய்தனர். யானைக்குத் தோண்டிய குழியில் தானே விழுந்தார் தேவர், என்றனர்.'முருகா... என் கதையை இத்தனை சீக்கிரம் முடிச்சிட்டியே...' என்று கதறி அழுதார். இந்நிலையில், கோல்கட்டாவில் இருந்து பட அதிபர் ஒருவர் வந்து, யானைப் பாகன் படத்தை இந்தியில், 'டப்' செய்ய உரிமை கேட்டார்.கவலை தீர்ந்து, கோல்கட்டாவுக்கு சென்றார் தேவர். பட அதிபர், தன் நண்பர்களோடு படம் பார்த்தார். தேவருக்கோ கேட்ட விலையைக் கொடுப்பாரா என்ற அச்சம். படம் முடிந்ததும், பட அதிபரின் நண்பரான சத்யஜித் ரே எழுந்து வந்து, தேவரைக் கட்டிக் கொண்டு, 'மிக அற்புதமாக படமாக்கி இருக்கீங்க; இயற்கையான சூழ்நிலையில் மிகையின்றி இயல்பாகவே எடுத்திருக்கிங்க...' என்று பாராட்டினார்.உழைப்பு வீணாகவில்லை; தேவர் நிமிர்ந்தார்; தன் வியாபாரத்தை ஆரம்பித்தார்.தேவருக்காக பரிந்து பேசினார் சத்யஜித் ரே. நல்ல விலை கிடைத்த திருப்தி. வங்க நண்பருக்கு நன்றி கூறினார் தேவர். தான் வணங்கிய முருகனே, சத்யஜித் ரே வடிவில் அங்கு வந்ததாக மனம் நெகிழ்ந்தார்.தாய் சொல்லைத் தட்டாதே படத்தின் பாடல் பதிவு. சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய். கன்னம் சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்...பாட்டைக் கேட்டதும் உற்சாகமானார் தேவர்.'அண்ணே... அடுத்த பாட்டும் கேக்குறீங்களா?''ம்... போடுப்பா... பிரமாதமா வந்திருக்கு; இந்த மாதிரி பாடலை சமீபத்துல கேட்டதேயில்லை. கவிஞர் கற்பனையா, மாமாவோட (கே.வி.மகாதேவன்) டியூனா... எது டாப்புன்னு சொல்ல முடியல...' என்று மனமாரப் பாராட்டினார். மெஜஸ்டிக் ஸ்டுடியோவின் ரிகார்டிங் தியேட்டரில் இருந்து அடுத்த பாடல், பட்டுச் சேலை காற்றாட, பருவமேனி கூத்தாட... என்று ஒலிக்க, ஒலிப்பதிவாளர் டி.எஸ்.ரங்கசாமியின் கைகளைப் பிடித்தபடி ஆடினார் தேவர்.'சவுந்தர்ராஜன் என்ன அருமையா பாடியிருக்காரு... பி.சுசீலாவோட குரல் அவருக்கு ஜோரா ஈடு கொடுத்துருக்கு. ரங்கா... நீ வேணும்ன்னா பாரு... இதுவரைக்கும் ஏ.எம்.ராஜா - ஜிக்கியே பிரபலமான டூயட் பாடல் ஜோடியா இருக்காங்க. இனி, அவங்களை டி.எம்.எஸ்., - சுசீலா ஜோடி அடையாளம் தெரியாம ஆக்கப் போறாங்க...' என்றவர், திருப்தியாக ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டு வெளியேறினார்.குற்றாலத்திற்கு சென்று, படத்துக்கான கதை, வசனம் தயாரித்து வந்திருந்தனர். அடுத்த படத்திற்கான கதை, வசனம் எழுதுகிற வாய்ப்பை ஆரூர்தாசுக்கே கொடுத்து விட்டார் தேவர். நாயகன் ஜெமினி கணேசன்; கதாநாயகி சரோஜாதேவி. ஜெமினி கணேசன், வாசனுக்கே கால்ஷீட் தராமல் அலையவிட்டதாக அப்போது பேச்சு பரவியிருந்ததால், ஜெமினி விஷயத்தில் தேவருக்கு சற்று தயக்கம் இருந்தது.ஆனாலும், கல்யாண பரிசு படத்தின் வெற்றி ஜோடி என்பதால், பட முதலாளிகள் ஜெமினி - சரோஜா தேவி கால்ஷீட்டுக்காக போட்டி போட்டனர். வாழ வைத்த தெய்வம் படத்தைக் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் மிகவும் அல்லல்பட்டார் தேவர்.கடன் வாங்கி தொழில் செய்வதனால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து விடுபட ஆசைப்பட்ட தேவர், தாய் சொல்லைத் தட்டாதே படத்தை குறுகிய காலத்தில் தயாரிக்க திட்டமிட்டார். முந்தைய படத்தில், ஜெமினி கணேசன் போதிய ஒத்துழைப்பை தரவில்லை என்பதால், இப்படத்திற்கு, 'கூப்பிட்ட குரலுக்கு நடிக்கக்கூடிய புதுமுகத்தை தேடலாமா...' என, பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்த போது, பின்புறமிருந்து தோளை பிடித்து யாரோ உலுக்குவதை உணர்ந்தார். அந்த தொடு உணர்ச்சி தனக்கு பழக்கப்பட்டதாக இருந்ததால், சட்டென்று திரும்பிப் பார்த்தார்.எம்.ஜி.ஆர்., நின்றிருந்தார். ஐந்து ஆண்டுகள் பிரிவுக்கு பின், அவரைப் பார்த்ததால், 'அண்ணே, நீங்களா...' ஆச்சரியத்தில் தேவரின் கண்கள் விரிந்தன.— தொடரும். நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,சென்னை.பா. தீனதயாளன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !