உள்ளூர் செய்திகள்

தங்கச்சியம்மா!

சில தெய்வங்களின் பெயரே வித்தியாசமாக இருக்கும். அவ்வகையில், கர்நாடக மாநிலம், மைசூரு அருகிலுள்ள உத்தனஹள்ளியில், தங்கச்சியம்மன் என்ற பெயரில், அம்பாள் அருளுகிறாள். ஜுவாலாமுகி எனும் நிஜப்பெயர் பெற்ற இவள், மைசூரு சாமுண்டீஸ்வரியின் தங்கையாக கருதப்படுகிறாள். இங்கு, நவராத்திரி விசேஷம்.ரத்த பீஜாசுரன் எனும் அசுரனுடைய உடம்பில் இருந்து வெளிவந்த, ஒவ்வொரு துளி ரத்தமும், ஒரு அசுரனை உருவாக்கியது. இதனால், அசுரர் எண்ணிக்கை உயர்ந்தது. அவர்களை கொல்லவே பயந்தனர், தேவர்கள். ரத்தம் சிந்தாமல் அவர்களை கொல்ல வேண்டும் அல்லது ரத்தம் தரையில் விழும் முன், அதை தடுக்க வேண்டும். இந்த இக்கட்டான நிலையை பயன்படுத்தி, தேவர்களை துன்புறுத்தினான், பீஜாசுரன்; ரிஷிகளின் யாகங்களை தடுத்தான். அனைவரும், அன்னை பார்வதியிடம் முறையிட்டனர். உடனே, காளியாக மாறிய பார்வதி, உக்ர ரூபத்துடன், நாக்கை நீட்டி, கோரைப் பற்களுடன், ஜுவாலாமுகி என்ற பெயர் தாங்கி புறப்பட்டாள். அசுரனை அழித்து, அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை குடித்தாள். பின், ஒரு புற்றில் சென்று மறைந்தாள்.மைசூரு சாமுண்டி மலையை அடுத்துள்ள குன்றில், இந்த கோவில் உள்ளது. மிகச் சிறிய வாசலுடன், குகை போன்ற கருவறையில், புற்று வடிவில் வீற்றிருக்கிறாள், அம்மன். அவளது கைகளில், திரிசூலம், உடுக்கை, வாள் மற்றும் ரத்தம் குடிக்கும் பாத்திரம் உள்ளன. சாமுண்டீஸ்வரியின் தங்கையான, ஜுவாலாமுகியை தரிசித்த பின்பே, மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்ல வேண்டும்.நாக தோஷத்தால் திருமணத்தடை ஏற்படுவதை தடுக்க, வெள்ளிக்கிழமை, ராகு காலத்தில், காலை, 10:30 - 12:00 மணி வரை, தீபமேற்றி வழிபடுகின்றனர். பவுர்ணமியன்று, வெல்லம், தேங்காய், வாழைப்பழ கலவை நிவேதனம் செய்து, தீபம் ஏற்றுவர்.ஜுவாலாமுகி சன்னிதியை ஒட்டி, சிவன் சன்னிதி உள்ளது. அசுர வதம் செய்த பாவம் நீங்க, சிவனை வழிபட்டு, பாவம் போக்கினாள், அம்மன். இவரை, சித்தேஸ்வரர் மற்றும் ராமநாதேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். விநாயகர், சுப்பிரமணியர், கால பைரவர், நாக பைரவர், கோவில் திருப்பணி செய்த, மாரகதண்ட நாயக்கர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. மைசூருவில் இருந்து, 12 கி.மீ., துாரத்தில் உத்தனஹள்ளி உள்ளது. காலை, 7:30 - பகல், 2:00 மணி வரையும், மாலை, 3:00 - இரவு, 9:00 மணி வரையும், கோவில் திறந்திருக்கும்.தொடர்புக்கு: 098447 05061தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !