உள்ளூர் செய்திகள்

வெண்புள்ளியை வென்று காட்டிய மாடல் அழகி!

வெண்புள்ளி என்பது நோயல்ல, அது ஒரு நிறமிக் குறைபாடு தான். தோலுக்கு நிறத்தைக் கொடுக்கும், 'மெலனின்' என்ற நிறமி, எங்கெல்லாம் குறைகிறதோ அங்கு திட்டுத் திட்டாக வெண்புள்ளி ஏற்படும்.கை, கால், முகம் என்று உடலின் எந்த பாகத்திலும், எந்த வயதினருக்கும் வரலாம். இப்போதெல்லாம் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்தால், அதிகம் பரவாமல் கட்டுக்குள் வைக்கலாம்.இதனால், எவ்வித உடல் உபாதைகளும் ஏற்படாது. ஆனால், முகம் சுளிக்க பார்ப்பர், கை குலுக்க தயங்குவர், தொற்றிக் கொள்ளுமோ என்று விலகுவர், கேலி பேச்சு மற்றும் விநோதமாக பார்ப்பவர்களால் ஏற்படும் வலி தான், மனதை அதிகம் காயப்படுத்தும்.நிறமி குறைபாடு உள்ளோரும் நம்மில் ஒருவர் தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் தான், வின்னி ஹார்லோ என்ற அமெரிக்க மாடல் அழகி.இன்றைய, 'பேஷன்' உலகின் முன்னணி மாடல்களில் ஒருவராக வலம் வருபவரும், பல்வேறு, 'பிராண்டட்' உடைகளின் துாதராக இருப்பவருமான வின்னிக்கு சிறு வயதிலேயே வெண்புள்ளி ஏற்பட்டு விட்டது.அவரை வரிக்குதிரை, வேற்றுலகவாசி என்று, கேலி செய்தனர். விளையாட்டில் தள்ளி வைத்தனர். இதன் காரணமாக, பள்ளி செல்வதும் தடைபட்டது. தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட ஆலோசித்தார்.இந்த நிலையில், கொஞ்சம் போராடிப் பார்ப்போமே என்று, சிறந்த உடலமைப்பு கொண்ட அவர், 'மாடலிங்' செய்ய எண்ணினார். தோழிகள், உறவுகளிடம் சொன்ன போது, 'இந்த முகத்தை வைத்து, எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாய்...' என்று கிண்டல் செய்தனர். அதையெல்லாம் புறந்தள்ளி, தனக்கு வாய்ப்பு வழங்கும்படி, மாடல் ஏஜன்சிகளின் படிகளில் ஏறி இறங்கினார். கிட்டத்தட்ட அனைவருமே, 'நோ' சொன்ன நிலையில், பிரபலமான மாடல் போட்டோகிராபரான நிக்நைட்டியின் கண்களில் பட்டார், வின்னி.'வின்னியிடம் வெண்புள்ளியைத் தாண்டி, ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அது கண்களிலா, உதடுகளிலா, உடல் அமைப்பிலா என்பதை பார்த்து விடுவது...' என்று, அவரை பலவிதமாக புகைப்படம் எடுத்தார். படங்களை, 'பிரின்ட்' செய்து பார்த்த போது, 'வாவ்' சொல்லக் கூடிய அழகுடன் வெளிப்பட்டார், வின்னி.கடந்த, 2014ல், அமெரிக்காவில் நடைபெற்ற, 'நெக்ஸ்ட் டாப்' என்ற சர்வதேச அளவிலான மாடல் அழகிப் போட்டியில் கலந்து கொண்டார், வின்னி. போட்டியின் இறுதி சுற்றில் தோற்றாலும், அன்று தான் அனைவரது மனதையும் வென்றார். போட்டியில் தோற்ற வின்னியை ஊடகங்கள் சூழ்ந்து, அவரை பலவிதங்களில் படமெடுத்து, பேட்டி எடுத்து வெளியிட்டன. அதன் பிறகு, வின்னிக்கு ஏறுமுகம் தான். போட்டிகளில் வென்றார். பிரபல ஆடை நிறுவனங்களின் துாதுவரானார். பணமும், புகழும் கொட்டியது.ஒரு முறையாவது வின்னியின் கைபிடித்து குலுக்கவும், அவருடன் நின்று படம் எடுத்துக் கொள்ளவும், ரசிகர்களும், பிரபலங்களும் சுற்றி சுற்றி வந்தனர்.தனக்கு கிடைத்த இந்த புகழை, வெண்புள்ளிக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார், வின்னி.தற்போது, 28 வயதாகும் வின்னிக்கு, திருமணமாகி விட்டது. இவர் பெற்ற விருதுகள், வீடு நிறைய காணப்படுகிறது. இவரை மாடலாக வைத்து படம் எடுக்க, தேதி கேட்டு காத்திருக்கின்றன, பல ஏஜன்சிகள்.ஆனால், 'மாடலிங்' செய்வதை விட, வெண்புள்ளிக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை குரலாக வலம் வருகிறார், வின்னி.அந்தக் குரலை நாமும் வழிமொழியலாம். எல். முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !