உள்ளூர் செய்திகள்

பட்டாம்பூச்சிகளின் கதை! (14)

'குட்மார்னிங் எவ்ரிபடி...' விதவிதமான பட்டாம்பூச்சிகளின், விதவிதமான வாழ்க்கை ஸ்டைலை படித்து, பலவிதமான கருத்துக்கள் அடங்கிய கடிதங்கள் கிடைக்கப் பெற்றேன்.இந்த வாரம் பட்டாம்பூச்சியின் பெயர் மின்னா - பெயர் மாற்றியுள்ளேன். மஞ்சள் நிறம்; அழகிய கூந்தல். அதில் அவள் வைத்து வரும் ரோஜாப்பூ அழகா, அவள் முடி அழகா என, கல்லூரி மாணவர்களிடையே பட்டிமன்றமே நடக்கும்.காலையில் கல்லூரிக்கு எப்படி, பிரஷ்ஷா வருகிறாளோ, அப்படியே பிரஷ்ஷா வீட்டுக்கு போவாள். அந்த அளவிற்கு, 'மேக்-அப்' கலைந்து விடாதபடி நடந்து கொள்வாள்.விதவிதமான டிரஸ்கள், காதணிகள், செருப்புகள் என, கல்லூரிக்கு வந்து அசத்துவாள். சில புரொபசர்களும், இவளது அழகில் மயங்கி, 'ஜொள்' விடுவதுண்டு.சாதாரணமான மாணவிகளுடன் பழக மாட்டாள் மின்னா; அவளது நட்பு வட்டமே, பணக்கார தோழிகள் நிரம்பியதாக இருக்கும். 'சரி... அவளே பணக்காரி. இவள் அப்படி இருப்பதில், என்ன தவறு இருக்கிறது...' என்று எல்லாரும் சொல்வர்.படிப்பில் ரொம்ப, ரொம்ப சுமார்; ஆனால், கலை விழாக்களில் பயங்கரமான ஆட்டம், பாட்டம் என, 'தூள்' கிளப்புவாள்.கேட்கவா வேண்டும்? நிறைய இளைஞர்கள், அவள் பின்னால், 'லோ லோ' என, அலைந்தனர்.'மின்னா... சந்துரு உன் மேல உயிரையே வச்சிருக்காண்டி... ஆளும் நல்லாதானே இருக்கான்... ஏண்டி அவனை சட்ட செய்ய மாட்றே...' என்றனர் தோழியர்.'அவன் வருவதே பைக்கில... போடுற டிரஸ்சும் சுமார் தான்... இவனை எல்லாம் நான் கல்யாணம் கட்டிக்கிட்டா... என்னோட, 'மேக்-அப்' செலவுக்கு கூட அவன்ட்ட வழி இல்லடி...' என்பாள் திமிராக.'அப்படின்னா நம்ப இளம் புரொபசர் உன் மேல ஒரே கண்ணா இருக்கிறாரே... அவரை பிடிச்சிக்க வேண்டியதுதானே...''ம்ஹும்.... இவர் எல்லாம், 'அப்பர் மிடில் க்ளாஸ்' தானே... என்னோட கால்குலேஷனே வேற.... கொழுத்த பணக்காரனா இருக்கணும். எனக்காக பணத்தை செலவு செய்ய யோசிக்கவே கூடாது. அப்படிப் பட்டவனோட வாழ்க்கை அமைஞ்சுதுன்னா, நல்லா இருக்கும்...' என்பாள் திமிராக.'ஏண்டி... பணம் மட்டும் இருந்தால் போதுமா... குணம் வேண்டாமா? உன்னோட பேராசைக்கு நீ ஏமாந்து போகப் போற.... ஓவர் பணக்காரர்களை ஆசைப்பட்டால், அவர்களிடம் குணம் இருக்காது; ஜாக்கிரதை...' என்று எச்சரித்தனர்.ஒரு வழியாக எங்கள் கல்லூரியிலேயே, பணக்காரனான, வசந்தின் காதலை ஏற்றுக் கொண்டாள் மின்னா.வசந்த் பணக்காரன் மட்டுமல்ல; மிகவும் ஒழுக்கமானவன்; அழகனும் கூட. பெருமையில் திளைத்தாள் மின்னா.இந்த ஜோடி, கல்லூரி முழுவதும் பிரபலம் ஆனது.பரிசு மழை பொழிந்தான் வசந்த்.'டேய் வசந்த்... பொண்ணுங்க பக்கமே திரும்பி பார்க்காம இருந்த நீ, இப்படி மின்னா வலைல மட்டும் எப்படிடா விழுந்த... யாரு பிடியிலும் சிக்காத விலாங்கு மீனையே பிடிச்சிட்டியேடா...' என, புலம்பித் தீர்த்தனர் அவனது நண்பர்கள்.'எல்லா ஆண்களையும் அலட்சியம் செய்த அவளது திமிர், எனக்கு பிடிச்சிருந்துச்சு மச்சான்... இனி, மின்னா உங்கள் எல்லாருக்கும், சிஸ்டர்...' என்றான் வசந்த்.ஒருநாள் நண்பர்களுடன் அரட்டை அடித்து, ஊர் சுற்றச் சென்ற வசந்த், அழகிய பங்களா ஒன்றை காட்டி, 'இதுதான் என்னோட மாமியார் வீடு...' என்று சொன்னானாம். திடுக்கிட்ட நண்பன் ஒருவன், 'என்ன மச்சி சொல்ற... இது, என் அப்பாவின் நண்பர் வீடு. இந்த வீட்டிற்கு, நான் போய் இருக்கிறேன்...'' என்று கூறியிருக்கிறான்.'இல்லடா... தினமும் மின்னாவை இந்த வீட்டு முன் விட்டுட்டு போவேன். அவள் உள்ள போய் கேட்டை சாத்திட்டு, எனக்கு கை காட்டிட்டு போவா. திரும்பவும் காலையில் அவள் கொஞ்ச தூரம் நடந்து வந்து நிப்பா. நான் பிக்-அப் பண்ணிக்குவேன்...' என்று கூறி இருக்கிறான் வசந்த்.'மச்சி... நீ சீரியசாதான் சொல்றியா... அப்படின்னா நானும் சீரியசா மேட்டருக்கு வர்றேன்... இது, உன் ஆளோட வீடு இல்லன்னு இன்னும் இரண்டு நாள்ல நிரூபிக்கிறேன். அத்தோடு, உன் ஆளோட ஒரிஜினல் வீட்டையும் கண்டுபிடித்து காட்றேன். ஆனால், அதுவரையில் நீ உன் ஆளை சந்திக்கக் கூடாது; போன் கூட பேசக் கூடாது...' என, 'தடா' போட்டனர்.மின்னாவை சந்திக்காத அந்த இரண்டு நாட்களும், நரகமாக இருந்தது வசந்திற்கு.'பாவிங்க... போன் கூட பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க... நூறு, 'மிஸ்ட் கால்' அடிச்சிருப்பா மின்னா. அவள், என் மீது பயங்கர கோபத்தில் இருப்பாள். அவளுக்கு அழகிய தங்க பிரேஸ்லெட் வாங்கி கையில போட்டு, கோபத்தை சமாளிக்கணும். இவனுங்க மூக்குல கரிய பூசிக்கிட்டு வரப் போறாங்க...' என, காத்திருந்தான் வசந்த்.இரண்டு நாட்களில் வசந்தின் நண்பர்கள் குழு, சிரித்து கும்மாளமிட்டபடி வந்தது.'என்னடா விஷயம்?' என்று படபடத்தான் வசந்த்.அவர்களோ விஷயத்தை சொல்லாமல், 'மச்சி... நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும்... ராணி வேஷம் கலைந்து போச்சு டும் டும் டும்... நீல சாயம் என்னாச்சு?' என பாடினர்.கதி கலங்கியது வசந்திற்கு.'என்னடா நடந்தது? விவரமாக சொல்லுங்கடா...' என்றான்.'டேய்... இப்பவே நீ எங்களோடு வா; உனக்கு உன்னோட ஒரிஜினல் மாமியார் வீட்டை காட்றோம்...' என, நண்பர்கள் பிடிவாதமாக அவனை இழுத்துச் சென்றனர்.அவர்கள் காட்டிய வீட்டை பார்த்த வசந்த் அதிர்ந்தான்.பழைய ஹவுசிங் போர்டு வீடு... சாயம் போய் இளித்துக் கொண்டிருந்தது.'வசந்த்... இன்னும் கொஞ்சம் நேரத்துல உங்க மாமியார் வருவாங்க பாரு...' என்றனர்.அழுக்கு புடவையை தூக்கி கட்டி, பறட்டை தலையுடன், குடம் எடுத்து, தண்ணீர் பிடிக்க வந்தார் ஒரு பெண்மணி.'டேய்... என்னடா இதெல்லாம்?' என்றான் வசந்த்.'இரு... இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் மச்சினிச்சிகளை பார்க்கலாம்!' என்று நண்பர்கள் காத்திருந்தனர். மிகவும் ஏழ்மை கோலத்தில் காணப்பட்ட பெண்களை கண்டு அதிர்ந்தான் வசந்த்.'நண்பா... கூல் கூல்... இவங்க வீட்டிலேயே மின்னா தான், சிவப்பா, அழகா பிறந்திருக்கா; கடை குட்டி வேறு. அதனால, இவளுக்கு வீட்ல ஏகப்பட்ட செல்லம். நீ பார்த்த பங்களா வீட்ல தான், மின்னாவின் மூத்த அக்கா, அந்த வீட்டு வயதானவர்களை பார்த்துக் கொள்கிறாள். அவளை பார்க்க போற சாக்கில், உன்கிட்ட அந்த வீட்டை காட்டி, 'பீலா' விட்டுருக்கா. இவளை மட்டும் தான் படிக்க வச்சிருக்காங்க.'இவள், பணக்கார தோழிகள் உபயோகித்த உடைகளை வாங்கி போட்டுக் கொள்வது, அக்காள்கள் வேலை செய்யும் பணக்கார வீடுகளில், இவள் கல்லூரியில் படிப்பதால், தங்களது மகள்களின் நல்ல, நல்ல உடைகளை பாவப்பட்டு கொடுக்கின்றனர். அவைகளை மாட்டிக் கொண்டு அலட்டுகிறாள். அவ போட்டுருக்கற எல்லாமே ஓசி மச்சி.'எப்படியாவது பணக்காரனான உன்னை மடக்கி, உன் வீட்ல ராணி மாதிரி இருக்கலாம்ன்னு திட்டம் போட்டிருக்கா. நாங்க சொல்றதை சொல்லிட்டோம். இனி, முடிவு உன் கையில்...' என்றனர்.வசந்திற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவன் இதயமே வெடித்துச் சிதறியது. தன் காதலி பேசிய பொய்கள், போலி கவுரவம் அவன் மனதை மிகவும் பாதித்தது. மின்னாவை பயங்கரமாகத் திட்டினான்.'மின்னா... நீ உண்மையைச் சொல்லி இருந்தாலும், ஏற்றுக் கொண்டிருப்பேன். நீயோ, வாய் கூசாமல் இத்தனை பொய்கள் சொல்லி ஏமாற்றி இருக்கிறாய்... ஏழ்மை தவறு இல்லை. அதிலேயே உண்மையா இருந்தா, நான் உன்னை ஏத்துக்கிட்டிருப்பேன். இவ்ளோ போலி கவுரவம் எதற்கு? வாழ்நாள் முழுவதும் உன்னை வச்சிக்கிட்டு என்னால் மாரடிக்க முடியாது!' என, திட்டி விட்டான்.காலேஜ் முழுவதும் மின்னாவின் உண்மை கதை பரவி, மிகவும் கேவலப்பட்டாள். போலி ஆடம்பரத்தில் மூழ்கிய அவளுக்கு, 'குட்டு' வெளிபட்டதும், வெளியே தலைக்காட்ட முடியவில்லை. காலேஜ் படிப்பை அப்படியே விட்டு விட்டாள்.தன் காதல் கோட்டை சரிந்த அதிர்ச்சி தாங்க முடியவில்லை. இன்று, மிகவும் சாதாரணமான தோற்றம், சுமார் வசதி உள்ள மாப்பிள்ளையை மணந்து, 'அவளா, இவள்' என, நினைக்கும்படி இருக்கிறாள்.போலி ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு, வாழ்க்கையை அழித்துக் கொள்வதை விட, 'நான் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவள் தான்... இது என் நிலைமை...' என, நெஞ்சை நிமிர்த்தி நின்றால், நிச்சயமாக வசந்த் இவளை மணந்திருப்பான். போலி கவுரவத்துக்கு ஆசைப்படாதீங்க பட்டாம்பூச்சிகளே... நீங்க நீங்களாகவே இருங்க... அதிர்ஷ்டம் தானா உங்களைத் தேடி வரும்.— தொடரும்.ஜெபராணி ஐசக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !