உள்ளூர் செய்திகள்

பட்டாம்பூச்சிகளின் கதை! (15)

இதயம் கவர்ந்த வாசகர்களே... 'ஜெபா.... ஜெபாக்கா...' என, நீங்கள் உருகுவது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. ஆர்வம் மிகுதியால், சிலர் போன் செய்து, 'அடுத்த வாரம், என்ன உண்மை கதை வரப் போகிறது என்று இப்பவே சொல்லுங்க... இல்ல என்ன சப்ஜெக்ட்ன்னு கொஞ்சமாவது, 'க்ளூ' கொடுங்க...' என்று அன்பு மழை பொழிந்தீர்கள்... உங்கள் அனைவருக்கும் நன்றி... நன்றி!'ஜெபாக்கா... நீங்கள் கூறும் பல பிரச்னைகள், எங்களுக்கு எவ்வளவோ பாடங்களை கற்றுத் தருகிறது தெரியுமா... இன்றைய உலகில், நாம் சந்திக்கும் எல்லா பிரச்னைகளை குறித்தும் நீங்கள் எழுத வேண்டும்; அது, பலரது கண்களை திறக்கும்...' என்றும் எழுதி இருந்தீர்கள்.வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க, இன்றைய தலைமுறையினர் சந்தித்து வரும், மிகவும் முக்கியமான பிரச்னை ஒன்றை குறித்து, உங்களோடு பேச விரும்புகிறேன்...எனக்குத் தெரிந்த வரையில், அநேக தம்பதியர், இந்தக் காரணத்தால், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னை கணவன், மனைவி உறவை சிதைத்து விடுகிறது. எனவேதான், 'இப்பிரச்னை' பற்றி பேச விரும்புகிறேன்.என்னுடைய நெருங்கிய தோழி பெயர் சமீரான்னு வச்சிக்குவோம். இளம் தம்பதியர்; ஒரு பெண் குழந்தை உண்டு. திருமணமாகி, நான்கு வருடங்களே ஆகிறது. கணவருக்கு பயங்கரமான ஷுகர், பி.பி., கொலஸ்ட்ரால். புகழ்பெற்ற எம்.என்.சி., கம்பெனியில் வேலை பார்க்கிறார்; கை கொள்ளா சம்பளம். கார், பங்களா என, வசதிக்கு குறைவில்லை. எனவே, மனைவியை வேலைக்கு அனுப்பவில்லை.சமீராவும், எம்.என்.சி., கம்பெனியில் கை நிறைய சம்பாதித்தவள்தான். என்ன செய்வது? குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டுமே! கணவருக்கு இப்படி ஆனதும், ஷûகருக்கான, 'டயட்' உணவு கொடுக்கணும். வேளாவேளைக்கு பத்திய உணவு, குழந்தைக்கு ஏற்ற உணவு சமைக்கணும்.கணவன் பிரியாணி, சிக்கன், சாப்பிடாத போது, தான் மட்டும் எப்படி சமைத்து சாப்பிட முடியும். எனவே, தனக்கு பிடித்த, 'நான்-வெஜ்' அயிட்டத்தை அப்படியே விட்டு விட்டாள்.சுதந்திரமான பட்டாம்பூச்சியாய் திரிந்த சமீரா, 24 மணி நேரமும் சமையல் அறை, குழந்தை, கணவனையும் குழந்தை போல் பார்க்க வேண்டி இருந்ததால் நொந்து போனாள்.சரி... மனக் கஷ்டங்களை தாங்கி, கணவனை கவனித்தாலும், அதை, கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல், தாம்பத்யத்துக்கு தகுதி இல்லாதவன் ஆனதால், ஆத்திரத்தில், சமீராவை கரித்துக் கொட்டினான் சுமேஷ்.'எதுக்குடீ இப்படி டிரஸ் பண்ற... உனக்கு எதுக்கு இவ்ளோ பணம்... ஏண்டி இவ்ளோ லேட்... எங்க போய் சுத்தற... எவன் கிடைப்பான்னு இப்படி அலையற?' என, தன், 'இயலாமை'யை மறைக்க, ஏகப்பட்ட குத்தல் பேச்சுக்கள் பேசுவான்.இந்த விஷயத்தை பெற்றோரிடமும் சொல்ல முடியாது; தோழிகளாகிய எங்களிடம் சொல்லி அழுவாள் சமீரா. 'தாம்பத்யம் இல்லைன்னா கூட, தாங்கிக்கிறோம்... ஆனால், ஒரு அன்பான பேச்சு வார்த்தை கூடவா இவர்கள் வாயில் இருந்து வராது... இவர்களுக்காக, 'மாடு' மாதிரி உழைக்கும் வேலைக்காரியா நான்... நம்மோட உணர்வுகளை ஏன்தான் இவர்கள் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க?'ஹை ஷûகர் இருக்கும் ஆண்களால், தாம்பத்யம் கொள்ள முடியவில்லை என்பதற்காக, மனைவியை இம்சைப் படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?' என்று சொல்லி தினம், தினம் அழுவாள்.இவளைப் போலவே, பல நடுத்தர வயது தோழிகளும், என்னிடம் இப்படி நிறைய புலம்புகின்றனர்.'என்னய்யா வாழ்க்கை இது... எங்களுக்குள்ள ஒண்ணுமே இல்லய்யா... ஏதோ ஒரே வீட்ல வாழ்கிறோம்; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புறோம். அவங்க சந்தோஷத்திற்காக வாழ்கிறோம்... மற்றபடி, அவருக்கு ஷûகர். என்ன செய்வது, நாமும் மனிதர்கள் தானே... சில நேரங்களில் எரிச்சலா வருது. அந்த நேரத்தில் பிள்ளைங்க குறும்பு செய்தா, போட்டு சாத்த வேண்டியிருக்கு.'சே... கல்லூரி நாட்களில், 'அழகி மீனா'க்களாக வலம் வந்த போது, நம்ப பின்னாடி எத்தனை பேர், 'லோ... லோ...'ன்னு அலைஞ்சானுங்க... எப்படி எல்லாம் அலைய விட்டோம். இன்றைக்கு நாம, நம் கணவரின் அன்பு, அரவணைப்புக்காக ஏங்குவதை நினைச்சா, வேதனையாக இருக்குயா... அந்த ஆண்கள் விட்ட, 'சாபம்' தான் இதுவோன்னு நெனைக்கத் தோணுதுயா...'அதுவும், 'மெனோபாஸ்' பீரியட்டை நெருங்கும் நேரத்தில்தான், நமக்கு மிகவும் ஆர்வமா இருக்கு. ஆனா, இந்த ஆண்களுக்கு, ஏன் தான் இதெல்லாம் புரியமாட்டேங்குது. நாம எப்படிய்யா சொல்ல முடியும்...' என, புலம்புகின்றனர்.இன்றைய உலகில், சிறு குழந்தை முதல், பெரியவர் வரை, ஷûகர் பிரச்னை உள்ளது. இந்தப் பிரச்னை வந்து விட்டது என்பதற்காக, நம் வாழ்க்கையை நாம் சிதைச்சிக்க கூடாது. அதிலிருந்து வெளியே வந்து, நாம் எப்படி இன்பமாக வாழ்வது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.இந்த மாதிரி ஷûகர் பிரச்னைகளுக்கு, ஆயுர்வேதத்தில் நிறைய வைத்தியம் உண்டு. முதலில், அதைப் பார்த்து, சரி செய்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியரை நேசியுங்கள். அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து, அவர்களிடம் அன்பு காட்டுங்கள். உங்கள் அன்பான பேச்சே, அவர்களை உங்களுக்காக எந்த தியாகமும் செய்ய வைக்கும்.அதை விட்டுவிட்டு, எப்பவும், 'சிடு சிடு'ன்னு விழுந்து, சந்தேகப்பட்டு கொண்டிருந்தால், அன்புக்காக ஏங்கும் அவர்களை, 'சபலிஸ்ட்' ஆண்கள் அந்த நேரத்தில் சந்தித்தால் போச்சு... கதையே முடிந்தது.அன்பாக பேசி, அவர்களை வலையில் வீழ்த்தி விடுவர். காரியம் முடிந்ததும், இந்த பெண்களை, கை கழுவி விட்டுவர். ஆனால், இந்தப் பெண்களோ, அவர்களது அன்பான பேச்சை நம்பி, மயங்கி கிடப்பர். இவர்களை அனுபவித்த பிறகு, அப்படியே விலக ஆரம்பிப்பர். ஆரம்பத்தில், 'என் பொண்டாட்டி எனக்கு ஏத்தவளே இல்லை; ராட்சஷி. என்னோட ரசனை அப்படியே உங்களுக்கு இருக்கு. நீங்க தான் என்னோட மேட்ச்...' என்று சொல்லி வழியும் ஆண்கள்... காரியம் முடிந்ததும், 'மனைவியே சரணம்!' என அடிமை ஆகி விடுவர். அப்போது, பாதிக்கப்பட்ட இந்த பட்டாம்பூச்சிகளுக்கு மனது மிகவும் அதிர்ச்சியாக இருக்கும்.அந்த ஆண்களின் புத்தி தெரிந்ததும், 'அய்யோ.. என் புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் துரோகம் செய்து விட்டேனே... என் மனசாட்சி என்னை உறுத்துதே... நான் செத்துப் போகவா... இல்லை அவனை பழி வாங்கவா?' என கேட்டு, சகுந்தலா கோபிநாத்துக்கு கடிதம் எழுதுவர். இதனால், எத்தனை பெரிய அவமானம் தெரியுமா?அதைவிட, உங்கள் கையில் கிடைத்த பட்டாம்பூச்சிகளின், அருமையை உணர்ந்து, அவர்களிடம் பாசம் காட்டி, பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஆண் சிங்கங்களே... மனம் விட்டு பேசி, எந்த விஷயமானாலும் இருவரும் சேர்ந்தே முடிவெடுங்கள்.உங்கள் இருவரின் சந்தோஷத்திற்கு தடையாக, எந்த பிரச்னையும் இருக்கவே கூடாது. அப்படி இருக்கும் பிரச்னைகளை முதலில் உடைத்தெரியுங்கள். என்ன சண்டை வந்தாலும், உடனுக்குடன் சமாதானம் ஆகிவிடுவது நல்லது. 'அவர் சாரி சொல்லட்டுமே...' என நீங்களும், 'அவளுக்கென்ன இவ்ளோ கொழுப்பு....' என அவரும் இருந்தால், சின்ன விஷயம் கூட, பெரிய விவகாரமாக உருவெடுத்து, 'டைவர்ஸ்' வரைக்கும் சென்று விடுகிறது.அதனால்தான் சொல்றேன்... விட்டுக் கொடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் வாழ்க்கை இன்பமாக இருக்கும் ஆண் சிங்கங்களே!— தொடரும்.ஜெபராணி ஐசக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !