உள்ளூர் செய்திகள்

நதியின் பெயரில் தெப்பக்குளம்!

தமிழகத்திலுள்ள பெரிய தெப்பக்குளங்களில் ஒன்று, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் உள்ளது. கோபிலர், கோபிரளயர் என்ற முனிவர்கள், கிருஷ்ண லீலைகளைத் தரிசிக்க ஆசைப்பட்டனர். இவர்களுக்காக, வாசுதேவர் என்ற பெயரில், பூலோகத்தில் பசுக்களை மேய்க்கும் சிறுவனின் வடிவில் காட்சியளித்தார், திருமால். 'கோ' என்றால் பசு. 'பாலன்' என்றால் சிறுவன். எனவே, அவர் ராஜகோபால சுவாமி என, அழைக்கப்பட்டார். அவருக்கு மன்னரைப் போல அலங்காரம் செய்ததால், 'ராஜமன்னார்' என அழைப்பர். ராஜமன்னார் காட்சியளித்த இடம், மன்னார்குடி. சிறுவனின் வடிவில் அந்தத் தலத்திலேயே தங்கியிருந்து, 32 லீலைகளையும் தங்களுக்கு காட்ட வேண்டும் என, முனிவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.கிருஷ்ணர், யமுனையில் கோபியர்களுடன் நீராடிய காட்சியை காட்ட விரும்பிய ராஜமன்னார், இங்கு ஓடிய காவிரி நதியை ஒரு குளமாக மாற்றினார். மிகப்பெரிய இந்தக் குளத்தில் கோபியர்களுடன் நீராடினார். அப்போது கோபிகையர் பூசிய மஞ்சள், நீரில் கரைந்தது. இதனால், இந்த குளத்திற்கு, 'ஹரித்ரா நதி' என, பெயர் ஏற்பட்டது.'ஹரித்ரா' என்றால், மஞ்சள். நதியே, குளமாக மாறியதால், ஹரித்ரா நதி என அழைக்கப்பட்டது. அது மட்டுமல்ல. ஊரெங்கும் பல குளங்கள் உருவாயின. ஒரு காலத்தில், 98 குளங்கள் இருந்ததாக பெரியவர்கள் சொல்கின்றனர். 'கோவில் பாதி, குளம் பாதி' என்ற சொலவடை, மன்னார்குடிக்கு சிறப்பு சேர்த்தது. கோவிலின் வடக்கிலுள்ள, ஹரித்ரா நதி குளம், 1,158 அடி நீளம், 837 அடி அகலம் கொண்டது. 23 ஏக்கர் பரப்பளவு உடையது. பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கும்.காவிரியே குளமாக வடிவெடுத்ததால், இதை, 'காவிரியின் தங்கை' என்பர். 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள், இதில் கலந்துள்ளதாகச் சொல்வர். எனவே, இதில் நீராடினால், சகல தோஷங்களும் நீங்கும். ராஜகோபால சுவாமிக்கு, இந்த குளத்தில் இருந்து, திருமஞ்சனம் - அபிஷேகம் செய்ய எடுத்துச் செல்லப்படுகிறது.அமாவாசை, பவுர்ணமி, ரோகிணி, திருவோணம் நட்சத்திர நாட்கள், கிரகண காலங்களில் இந்த குளத்தில் நீராடுவது புண்ணியம் தரும். வைகாசி, ஐப்பசி, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் இந்தக் குளத்தில் நீராட ஏராளமான பக்தர்கள் வருவர்.பங்குனி மாதத்தில், 18 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும். 16ம் நாள் வெண்ணெய் தாழி உற்சவம் கண்டால், சொர்க்கம் கிடைக்கும்.டிச., 25, வைகுண்ட ஏகாதசியன்று, ஹரித்ரா நதி தீர்த்தத்தை தலையில் தெளித்து, ராஜகோபாலரை வழிபட்டு வரலாம். கும்பகோணத்தில் இருந்து, 35 கி.மீ., திருவாரூரில் இருந்து, 28 கி.மீ., துாரத்தில் மன்னார்குடி உள்ளது.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !