இது உங்கள் இடம்!
பேச்சில் கவனம் இருக்கட்டும்!சமீபத்தில், நண்பர் ஒருவர், 'என் மகன் என்னோட பேச்சை துளி கூட மதிக்கிறதில்ல; தன் போக்கில திரியுறான். அந்தச் சனியனைப் படிக்க வைச்சு ஆளாக்கியதற்கு, ஒரு பன்றியை வளர்த்திருக்கலாம்; அதாவது, என் பேச்சை கேட்டிருக்கும்...' என்று சலித்துக் கொண்டார்.இது பற்றி அந்தப் பையனிடம் விசாரித்த போது, 'அங்கிள்... சிறு வயசிலிருந்து இப்ப வரைக்கும் ஒரு நாள் கூட எங்கப்பா என்கிட்ட அன்பாக பேசினது இல்ல; நான் எந்த நல்ல செயல் செய்தாலும், அதப் பாராட்டுறதுக்கு பதில், அதுல குற்றம் கண்டுபிடிச்சு திட்டுவார். அம்மாவுடன் சண்டை போடும் போது, அவரது நடத்தையைப் பற்றி என் முன்னாலேயே அசிங்கமாக பேசுவார்.'இவரோட இந்த மாதிரியான பேச்சுகளால சில சமயம் தவறு செய்ய தூண்டுது. ஆனா, நான் மனசாட்சிக்கு பயப்படுறவங்கிறதாலே இதுவரை எந்த தவறும் செய்யல. அவருடைய பேச்சுக்காகத்தான் அவரை வெறுக்கிறேனே தவிர, மற்றபடி, அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு...' என்று தன் வேதனையை கொட்டித் தீர்த்தான்.பெற்றோர்களே... நாம் பேசும் வார்த்தைகள் தான், நம் பிள்ளைகளின் மனநிலையை நிர்ணயிக்கின்றன. எனவே, நம் பேச்சு குழந்தைகளின் மனதை பாதிக்காமல் இருக்க வேண்டும். சிந்தீப்பீர்களா!— என்.ரகுராமன், கோவை. மூலிகை மருத்துவ மகத்துவம்!எங்கள் ஊரிலுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி வளாகத்தில் மூலிகைச் செடிகளை வளர்ப்பதுடன், அதன் மகிமைகளை மாணவ, மாணவியருக்கு எடுத்துரைப்பார். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, 'பெரும்பாலான மாணவ, மாணவியர் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து வருகின்றனர். அங்கு மருந்துக் கடைகளோ, மருத்துவமனைகளோ அதிகம் இருக்க வாய்ப்பில்லை. அதனால், அவர்கள் ஜுரம், சளி, இருமல், தலைவலி, அஜீரணக்கோளாறு, வாந்தி, பேதி என, பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம்.'அதனால் தான் மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லி, துளசி போன்ற மூலிகை செடிகளை வளர்ப்பதோடு, ஒவ்வொரு மூலிகையின் மருத்துவ குணம் பற்றி அவர்களுக்கு சொல்லியும் தருகிறேன்.'கிராமங்கள் தோறும் ஒரு, எம்.பி.பி.எஸ்., மருத்துவரை உருவாக்குகிறோமோ இல்லையோ, நிச்சயமாக ஒரு மூலிகை மருத்துவரை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையில் இந்தப் பயிற்சியை அளிக்கிறேன்...' என்றார் தலைமையாசிரியர்.ஆசிரியர்களே... வாழ்க்கைக்கு உதவும் கல்வியோடு, பொது நலன் கருதி, இது போன்ற சேவையிலும் ஈடுபடுங்களேன்!— தி.குமரேசன், திருத்தணி.ஓட்டளிக்க தவறினால்...எங்கள் பகுதியில் சிலர், தேர்தலின் போது, ஓட்டுச் சாவடிக்கு செல்வதில்லை. மேலும், அதை பெருமையாக கூறி, 'யார் வந்தா என்ன? ஊழல் தான் செய்யப் போறாங்க. அதனால தான் நாங்க ஓட்டு போடுறதில்ல...' என்பர்.வாக்களிப்பது நம் கடமை; நல்லது செய்வோருக்கு கட்சியை பார்க்காமல் ஓட்டளிக்க வேண்டும். இம்மாதிரி சிலர் ஓட்டளிக்க தவறுவதால் தான், குறைந்த ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெரும் ஊழல் கட்சிகள், ஆட்சியை பிடித்து விடுகின்றன. இதற்கு ஒரே வழி, ஓட்டு அளிப்பதை கட்டாயம் ஆக்கி, ஓட்டளிப்பவர்களுக்கு மட்டுமே அரசு சலுகைகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.தேர்தலில் ஓட்டளிக்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், சமையல் எரிவாயு போன்ற பொருட்களை நிறுத்த வேண்டும். ஆதார் அட்டை இருந்தால் தான், சமையல் எரிவாயு கிடைக்கும் என்று ஒரு திட்டம் வந்ததும், மக்கள் வரிசையில் நின்று அதைப் பெறவில்லையா? அதைப் போன்று, தேர்தலின் போது வாக்களிப்போருக்கு ஒரு அடையாள அட்டை கொடுக்க வேண்டும். அது இருந்தால் தான், எந்த அரசு சலுகையும் பெற முடியும் என்ற கட்டாயம் வந்தால் தான், மக்கள் தங்களுடைய பொன்னான ஓட்டை செலுத்துவர். இதை அரசு செய்யுமா?— சி.கிருத்திகா, சென்னை.