இது உங்கள் இடம்!
அம்மாவின், 'அட்வைஸ்!'என் உறவினரின் மகனுக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது, அவனுக்கு அவன் தாய் கூறிய அறிவுரை இது... திருமணத்திற்கு தயாராக உள்ள எல்லா ஆண்களுக்கும் இது தேவையான அறிவுரை என்பதால், அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:* மகனே... மறந்தும் கூட என்னை, உன் மனைவியோட ஒப்பிட்டு பார்க்காதே! உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 26 ஆண்டு கால அனுபவம் இருக்கு; ஆனா, உன் மனைவிக்கு, உன்னை மாதிரியே இந்த வாழ்க்கை புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான், அவங்க அம்மாவும், அவளை பார்த்து பார்த்து வளர்த்திருப்பாங்க. இச்சூழ்நிலைக்கு பழக அவளுக்கு நாட்கள் ஆகலாம். அதற்கு பின், அவள், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக இருப்பாள்.* மனைவியானவள், உன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வந்துள்ள தோழி; அவள், உன் அம்மா இல்லை. உன் அம்மாவுக்கு உன்னை கவனிப்பது மட்டும் தான் வேலை; ஆனா, உனக்கு, அவளை கவனிப்பது முக்கியம். நீங்க ரெண்டு பேரும், ஒருத்தருக்கு ஒருத்தர் அக்கறை வைத்து, அன்பு செலுத்துவது முக்கியம்.* உன் வாழ்க்கையின் நல்லது - கெட்டது அனைத்திலும், உடனிருந்து பங்கு கொள்ளப் போகிறவள் மனைவி. அவளை மதிக்க வேண்டும். அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடு.* பிறந்து, வளர்ந்து மகிழ்ந்திருந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருப்பவள் மனைவி. அவள், இந்த வீட்டில் இயல்பா இருக்க நீ தான் உதவணும். சின்ன சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம். அதை கவனித்து, அவள் பிறந்த வீட்டில் இருப்பதை போல உணர வைக்கணும்.* காதலிக்க வயசு தடையே இல்ல. எப்பவும் உன் மனைவியை, சந்தோஷமா வச்சுக்கோ... வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டு பேரையும், எப்பவும் இளமையா உணர வைக்கும். உங்க அப்பா என்னை எப்படி நடத்தறாரோ, அது போல, நீயும், உன் மனைவியை கவுரவமா மதித்து குடும்பம் நடத்து.— இப்படி கூறினார். திருமணத்திற்கு முன், பெண்களுக்கு மட்டுமே அறிவுரைகள் வழங்கி வரும் நிலையில், என் உறவினப் பெண்மணி, தன் மகனுக்கு வழங்கிய அறிவுரையை, திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அனைத்து ஆண்களும் கடைப்பிடிப்பது, இனிய இல்லறத்திற்கு வழிகோலும்!— பிரேமா கார்த்திகேயன், கொளத்தூர்.பெண்களை உற்சாகப்படுத்தலாமே!என் தோழியை சந்திக்க, அவளது வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில் அவள் இல்லை; நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருப்பதாக தோழியின் அம்மா கூறவே, என்ன நிகழ்ச்சி, எங்கே நடக்கிறது என்று விசாரித்து, அந்த இடத்திற்கு சென்றேன்.அங்கே மேடையின்றி, பேனரின்றி இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடியிருந்தனர். என்னை பார்த்ததும் கை குலுக்கி, மகளிர் தின வாழ்த்துகளை பகிர்ந்த தோழி, மற்றவர்களுக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.நிகழ்ச்சி மிக எளிமையாக இருந்தாலும், வலிமையான கருத்துகளை விவாதித்தனர். அப்பகுதியை சேர்ந்த பெண் டாக்டர், பெண் தாசில்தார் மற்றும் ஆசிரியைகள் சிறந்த ஆலோசனைகளை வழங்கினர்.இறுதியில், இட்லிக்கடை நடத்தி, தன் பிள்ளைகளை படிக்க வைத்து வரும் விதவைத் தாய் ஒருவர் பேசியது, அனைவரையும் நெகிழச் செய்தது. சிறிது நேரமே நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், பெண்களின் எழுச்சி, வளர்ச்சி பற்றிப் பேசியது, மிகுந்த மனநிறைவையும், தன்னம்பிக்கையையும் தந்தது. புத்தாண்டு மற்றும் காதலர் தினம் என்ற நமக்கு ஒத்துவராத கலாசாரங்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, பெண்களை ஊக்கப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால், சமுதாயத்தில் பெண்களின் நிலை நிச்சயம் மாறும்! — ஆர்.சுகன்யா, அரசரடி.மனை வாங்குவோர் கவனத்திற்கு!சில ஆண்டுகளுக்கு முன், புறநகரில் வீட்டு மனை ஒன்றை வாங்கிப் போட்டிருந்தார் நண்பர். அதை பார்த்து வருவதற்காக, சமீபத்தில், என்னையும் அழைத்துச் சென்றார். பக்கத்து மனைக்காரர், நண்பரின் மனையில், இரண்டு அடி அகலத்துக்கு, ஆக்கிரமிப்பு செய்து, கட்டடம் எழுப்பியிருந்தது தெரிய வந்தது.'என்ன இப்படி செய்துட்டீங்க...' என்று நண்பர் கேட்டதற்கு, 'நாங்கள் சரியாத்தான் கட்டியிருக்கோம்; மத்தவங்க இடத்தை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் இல்ல...' என்று கறாராக பேசினார்.உடனே, சர்வேயரை வரவழைத்து, இரண்டு பேரின் மனைகளை அளந்ததில், பக்கத்து மனைக்காரரின் அத்துமீறல் தெரிந்தது.'வீடு கட்டிக் கொடுத்த பில்டர் தப்பு செய்துட்டான்...' என்று பழியை திசை திருப்பிய பக்கத்து வீட்டுக்காரர், 'இரண்டு அடிக்கான பணத்தை கொடுக்கட்டுமா அல்லது அந்த இடம் வரைக்கும் இடிச்சுடட்டுமா...' என்று கேட்க, நண்பர் கூலாக, 'வேணாம்... எங்க இடத்துல கட்டியிருக்கீங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னு தான் அளந்து காட்டினேன்...' என்றார் பெருந்தன்மையுடன்!'பணம் வாங்கியிருக்கலாமே...' என்றேன்.'தவறு என் மேலயும் இருக்கு; மனையை வாங்கிப் போட்டு, வருஷக் கணக்கா திரும்பிப் பாக்காமல் இருந்துட்டேன். அவ்வப்போது போய் பார்த்திருந்தால், பக்கத்து மனைக்காரர் வீடு கட்டும் போது, ஆரம்பத்திலேயே இதை தடுத்திருக்கலாம். குறைந்தபட்சம், என் இடத்தின் எல்லைகளில் அடையாளக் கல் நட்டு வைத்திருக்கலாம்; அதையும் செய்யல. நஷ்ட ஈடாக பணத்தை வாங்கலாம் தான்; ஆனா, எதிர்காலத்தில், அங்கே வீடு கட்டி குடியேறும் போது, அவரிடம் சுமூகமாக உறவாட முடியாது. அக்கம் பக்கத்தினரிடையே, நல்ல நட்புடன் இருப்பது அவசியம். அதற்காக, கொஞ்சம் விட்டுக் கொடுத்து தான் போகணும்...' என்றார்.அவர் கூறியதை ஏற்றுக் கொண்டேன்.— சின்ன சம்பத், சென்னை.விளையாட்டும் முக்கியமே!தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியையான என் தோழியை சமீபத்தில் சந்தித்த போது, மாணவியர் விளையாட்டில் ஆர்வம் காட்டாதது குறித்து ஆதங்கப்பட்டவள், 'பெரும்பாலான உயர் வகுப்பு மாணவியர் விளையாட்டு வகுப்பையே வெறுக்கிறாங்க. வெயிலில் நின்று, உடற்பயிற்சி செய்வதும், விளையாடுவதும், அவங்களுக்கு வேப்பங்காயாய் கசக்குது. ஏதாவது, நொண்டிச் சாக்கு சொல்லி, விளையாட்டு வகுப்பில் இருந்து 'எஸ்கேப்' ஆகின்றனர். இதற்கு, பெற்றோரும் உடந்தை. 'என் பொண்ணுக்கு, 'ஸ்கின்' அலர்ஜி, வெயில் ஒத்துக்காது, மயக்கம் வரும்...' என்று டாக்டர் சர்டிபிகேட் வாங்கி கொடுக்கிறாங்க.'டீன் - ஏஜ் மாணவியர், வீட்டிலும் விளையாடுறதில்ல; பள்ளியில் விளையாடினாலாவது உடற்பயிற்சி கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னாலும், செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருக்கிறது...' என்று அலுத்துக் கொண்டாள்.முன்பெல்லாம் பெண் குழந்தைகள், வீட்டு வேலை செய்தனர். அதுவே, அவர்களுக்கு உடற்பயிற்சியாகவும் அமைந்தது. ஆனால், இன்றோ உடல் உழைப்பும் இல்ல; விளையாட்டும் கிடையாது. இதனால், வளர்ந்த பின், கர்ப்பப்பை தொந்தரவுகளும், குழந்தை பேறின்மையும், அதிகரிக்கிறது. பெற்றோரே... இனியாவது உங்கள் பெண் குழந்தைகளை, ஆரோக்கியமாக வளருங்கள்!— எச்.தஸ்மிலா, கீழக்கரை.