இது உங்கள் இடம்!
எங்கே போகிறோம் நாம்?ஒரு காலத்தில், பத்தாம் வகுப்பில், 215 மற்றும் பிளஸ் 2வில், 550 மதிப்பெண் எடுத்தாலே மகிழ்ச்சியுடன், ஊரெல்லாம் சாக்லெட் கொடுத்து மகிழ்வர். ஆனால், இன்றோ, 480 - 1,170 மதிப்பெண் எடுத்தும் தற்கொலை முடிவை எடுக்கின்றனரே மாணவர்கள்...மதிப்பெண் என்பது, மாணவர்களின் திறமைக்கு தரப்படுவது என்பதை தாண்டி, பெற்றோரின், கவுரவம் சார்ந்ததாக மாறிவிட்டதே இதற்கு காரணம்.இதைத் தவிர்க்க, குழந்தைகளுக்கு, தோல்வியையும் கற்றுத் தர வேண்டும்.'வீடியோ கேம்' விளையாடும்போது, தோற்கிற நிலை வந்தால், அந்த விளையாட்டை அத்துடன் நிறுத்தி, வேறு ஒரு புது, 'கேம்' விளையாட ஆரம்பித்து விடுகின்றனர், இன்றைய இளம் தலைமுறையினர். விளையாட்டிற்கு கூட, தோற்க கூடாது என்ற எண்ணம் அவர்கள் மனதில் விபரீதமாய் ஆழப்பதிந்துள்ளது.அக்கால பரமபத விளையாட்டில், பாம்பில் தோல்வியையும், ஏணியில் வெற்றியும் கற்றோம். பெற்றோர்களே... கொத்தமல்லி செடியில், தேக்கு மரத்தை எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில், நம் கண்மணிகள், நம் கருவேப்பிலை கொத்து என்பதை மறந்து விடாதீர். மனதிற்கு நல்ல மருந்து இடுங்கள்!— நா.கி.பிரசாத், கோவை.பால் அபிஷேகம் வேண்டாம்!உடல் நலக்குறைவால், அரசு மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகியிருந்த உறவினரை காண சமீபத்தில் சென்றிருந்தேன். அங்கு, பிரபல நடிகர் ஒருவரது படம் பதித்த அட்டையை, சட்டையில் குத்தியிருந்த அவரது ரசிகர்கள், 10 பேர், ரொட்டி, பிஸ்கட் மற்றும் பழம் அடங்கிய கவரை, நோயாளிகளுக்கு வினியோகம் செய்தபடி இருந்தனர். அவர்களில் ஒருவரிடம், 'என்ன விசேஷம்?' என்று கேட்டதற்கு, 'இன்று எங்கள் நடிகரின், புதிய படம் வெளியாகிறது; அதனால், நோயாளிகளுக்கு இதை வழங்குகிறோம்...' என்றார்.'கட் - அவுட்'டுக்கு பால் அபிஷேகம் செய்து, பணம் மற்றும் பொருளை வீணாக்காமல், தங்களுக்கும், தம் தலைவருக்கும் நற்பெயர் சம்பாதிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சியை மனதார பாராட்டினேன்.நடிகர்களே... 'கட் - அவுட்'களுக்கு பாலாபிஷேகம் மற்றும் பட்டாசு வெடித்தல் என்று பணத்தை வீணாக்காமல், உங்களது ரசிகர்களையும் இப்படி நற்காரியத்தில் ஈடுபடும்படி அன்பு கட்டளை இடலாமே!செய்வீர்களா?— உ.குணசீலன்,திருப்பூர்.தீ விபத்தை தடுப்பது எப்படி?சமீபத்தில், என் நண்பர் வேலை செய்யும் கம்பெனியில், தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வண்டி வருவதற்கு காலதாமதம் ஆனதால், முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. தொழிலாளர்கள் சிலர், சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை அணைத்து முடிந்ததும், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தொழிலாளர்கள், 'முதல்ல, 'ஷார்ட் சர்கியூட்' மூலம், சிறு தீப்பொறி ஏற்பட்டது. அருகில் இருந்த, 'பயர் எக்ஸ்சஸ்சரை' எடுத்து அணைக்க நினைச்ச போது தான், அதை எப்படி பயன்படுத்துறதுன்னு எங்களுக்கு தெரியாமப் போச்சு. அதற்குள், தீ, 'மளமள' வென பரவி விட்டது...' என்று கூறியது, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.பல நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, தீயணைப்பு கருவிகளை வைத்திருந்தாலும், அவைகளை பயன்படுத்தும் முறை பற்றி சொல்லி தருவது இல்லை. சொல்லிக் கொடுத்திருந்தால், இம்மாதிரி விபத்தை தடுத்திருக்கலாமே!சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பரா?— உ.அரசு, புதுச்சேரி.பேருந்தில் பாட்டு அவசியமா?சமீபத்தில் நானும், என் கணவரும் மதுரையிலிருந்து தஞ்சாவூருக்கு செல்ல பேருந்து ஏறினோம். பேருந்து புறப்பட்டதிலிருந்து நடத்துனரும், ஓட்டுனரும் பேருந்தில் இணைக்கப்பட்டுள்ள பாட்டு ஒலிபரப்பும் இயந்திரத்தை சரி செய்வதிலும், அதன் ஒலியை கூட்டி குறைத்து சோதனை செய்வதிலுமே கவனமாக இருந்தனர். கடைசியில், பாட்டு ஒலி பரப்பும் இயந்திரத்தை சரி செய்து, உச்ச ஒலியில் ஒலிபரப்பினர்.இதனால், முதியவர்களும், குழந்தைகளும் சிரமப்பட்டனர். மேலும், அந்நேரம் கைபேசி அழைப்பு வந்து, பேசுவதற்கும் தடையாக இருந்தது.இதுகுறித்து, நடத்துனரிடம் என் கணவர், 'பாட்டின் ஒலியை குறையுங்கள். தொந்தரவாக இருக்கு...' என்றார். ஆனால், நடத்துனரோ, 'எங்கள் வசதிக்காகவும், எங்களுக்கு தூக்கம் வராமல் இருப்பதற்காகவும், பாட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; உங்கள் வசதிக்காக அல்ல...' என்றார். அவரின் இத்தகைய பதிலால், நாங்கள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.பொதுவாக, அரசு பேருந்துகளில் பாட்டு ஒலிபரப்பும் இயந்திரத்தை பொருத்துவதில்லை. இதனாலேயே பலர் தனியார் பேருந்துகளில் செல்லாமல், அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர். ஆனால், நடத்துனரின் பதிலிலிருந்து பொது மக்களுக்கு அவர் சொல்லும் செய்தி... 'பேருந்தும், அதிலுள்ள வசதிகளும் பொதுமக்களுக்கு அல்ல; நடத்துனர், ஓட்டுனருக்கு மட்டுமே!சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தினால் நல்லது. செய்வரா?— பெயர் வெளியிட விரும்பாத மதுரை வாசகி.பக்கத்து வீட்டாரிடம் பகைமை பாராட்டாதீர்!சமீபத்தில், என் தோழியை சந்திக்க, அவளது ஊருக்கு சென்றிருந்தேன். அவளது பக்கத்து வீட்டில் சிறுமி ஒருத்தியின் அழுகைச் சத்தம் கேட்டது. காரணம் கேட்டதற்கு, 'அந்த வீட்டிலுள்ள, 12 வயது சிறுமி திடீரென வயசுக்கு வந்திட்டா. இவளுக்கு பள்ளிக் கூடத்துல லீவு கிடைக்கலங்கிறதுக்காக, வயசான பாட்டிய மட்டும், இவளுக்கு துணைக்கு வச்சுட்டு, எல்லாரும் வெளியூரில் இருக்கும் சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருக்காங்க. இந்த நேரத்துல இப்படி ஆயிட்டதால, வயசான பாட்டியால ஒண்ணும் செய்ய முடியல...' என்றாள் தோழி.'அக்கம், பக்கத்து வீட்டு பெண்கள் அந்தச் சிறுமிக்கு உதவலாம்ல...' என்றதற்கு, 'அந்த வீட்டுல இருக்கிறவங்க யார் கிட்டயும் பேசவோ, பழகவோ மாட்டாங்க. அக்கம், பக்கத்துல நடக்கும் நல்லது, கெட்டதுகளில் கலந்துக்க மாட்டாங்க. என் மாமனார் இறந்த போது கூட, அந்த வீட்டிலிருந்து யாரும் எட்டிப் பாக்கலை. இதையெல்லாம் மறந்து, மனிதாபிமானத்தோடு அந்த வீட்டிற்கு செல்லலாம்ன்னா, அவங்க வந்ததும், வீட்டிலுள்ள பொருட்களை காணலைன்னு சண்டைக்கு வருவாங்க. ஏற்கனவே, அவர்கள் வீட்டில் காணாமல் போன பொருட்களுக்கு, அக்கம், பக்கத்தவர் மீது போலீஸ் ஸ்டேஷன்ல புகார் தந்து, தொந்தரவு கொடுத்துள்ளனர்...' என்றாள்.தோழிகளே... நமக்கு எவ்வளவு சொந்த, பந்தங்கள் இருந்தாலும், அருகில் வசிப்பவர்கள் தான் நெருங்கிய உறவினர்கள். இதை உணர்ந்து அவர்களுடன் அன்புடன் பழகுங்கள். ஏனெனில், நமக்கு ஏதாவது உதவி தேவை என்றால், உடனே வருபவர்கள் அவர்கள் தான். பகைமை பாராட்டாமல், நட்புறவுடன் அவர்களின் சுக, துக்கங்களில் பங்கெடுத்தால் தான், அவர்கள் நம் இன்ப, துன்பங்களில் உரிமையுடன் பங்கேற்பர் என்பதை மறந்து விடாதீர்.— பி.கவிதா, கோவை.